திரை (இசைக்) கடலோடி 3 | காதல் வயப்பட்ட ஒரு பெண் என்ன செய்வாள்?

திரை (இசைக்) கடலோடி 3 | காதல் வயப்பட்ட ஒரு பெண் என்ன செய்வாள்?
Updated on
3 min read

தனது காதலனை - அவனது அருமை பெருமைகளை நினைத்துப் பெருமிதப்படுவாள். எங்கோ இருக்கும் அவனை தன்னிடம் வந்து சேரச்சொல்லி கண்ணில் படும் ஊர்வன, பறப்பன, நடப்பன என்று ஒன்று விடாமல் தூதாக அனுப்புவாள். அல்லது கனவில் அவனோடு சேர்ந்து ஆடிப்பாடுவாள்.

இவை எல்லாம் நமது தமிழ் சினிமாவில் காதல் வயப்பட்ட கதாநாயகிக்காக யதார்த்தம் மீறிய இலக்கணங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றை அவள் கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டும்.

ஆனால் - புதுமை இயக்குநர் ஸ்ரீதரோ - தான் இயக்கிய ‘விடிவெள்ளி’ படத்தில், கதாநாயகி பாடுவதாக அமைந்த பாடல் காட்சியை வித்தியாசமாக அமைக்க விரும்பினார்.

காதல் என்ற உணர்வு முதன்முதலாக அரும்பியதும் அவளிடம் ஏற்பட்ட அதுவரை காணாத மாற்றங்கள், நினைவோட்டங்களின் வர்ண ஜாலங்கள் எல்லாமே அவளை வியப்படைய வைக்கின்றன.

அதனை மையப்படுத்தி, காதலனை நினைத்துப்பாடுவது போல காட்சியை அமைப்பதற்குப் பதிலாக, தனக்குள் ஏற்பட்ட இந்தக் காதல் என்னும் உணர்வுக்கு ஓர் உருவம் கொடுத்துக் கண்முன்னால் நிற்பது போல பாவித்து பிரமிப்புடன் அவள் பாடுவது போல் பாடல் வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீதர்.

சி.வி.ஸ்ரீதர்
சி.வி.ஸ்ரீதர்

நூற்றாண்டு கண்ட மகத்தான கவிஞர் மருதகாசி அவர்கள் வழக்கம்போல எளிமையான வார்த்தைகளில் காதல் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுத்துக் கதாநாயகியின் முன்னால் நிறுத்தி அற்புதமாகப் பாடலை வடிவமைக்க, பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா இனிமையாகக் கீரவாணி, நடபைரவி ஆகிய ராகங்களின் கலவையாக அவரது கந்தர்வக் குரலைப் போலவே மென்மையாக பாடலுக்கு இசை அமைக்க, இசைப் பேரரசி பி. சுசீலா தனது தேன் குரலில் வார்த்தைகளைத் தோய்த்தெடுத்துப் பாடலுக்கு உயிர் கொடுக்க, திரை இசைக்கடலில் அற்புதமான பாடல் முத்து ஒன்று நமக்காகக் கிடைத்துவிட்டது.

‘எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே. என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே’என்று தொடங்கும் அந்தப் பாடலில் ஏ.எம்.ராஜாவின் இசையும், பி. சுசீலாவின் குரலும் உற்சாகத் தென்றலாகக் கேட்பவர் காதுகளில் உலா வரச்செய்யும் ஜாலம்... வருணிக்க வார்த்தைகளே இல்லை.

ஒரு பாடகராக அறிமுகமான ஏ.எம். ராஜா, ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக இனம் காட்டிய பாடல்களில் இந்தப் பாடலுக்கு ஒரு தனி இடம் உண்டு.

ராக மூர்ச்சனைகளை மெல்லிசையாகப் பரிமாறுவதில் ஒரு லாவகம். காதுகளுக்குக் குளிர்ச்சியையும், இதயத்துக்கு நிறைவையும் ஏ.எம். ராஜாவின் இசையில் நாம் காணலாம். அதுவே அவரது தனித்தன்மை. இவற்றோடு துரித கதியில் ஓட்டமும் துள்ளலுமாக உற்சாகம் - இவற்றின் கலவை தான் இந்தப் பாடல்.

ஆரம்ப வரிகளிலேயே பி. சுசீலா அவர்களில் குரலில் தெறிக்கும் உற்சாகம், ஏற்ற இறக்கங்களில் அந்த தேன்குரல் செய்யும் சஞ்சாரங்கள் எல்லாமே அற்புதம்.

ஆசைகளைச் சுமந்த மனங்களில் இந்தக் காதல்தான் என்னென்ன மாற்றங்களை உருவாக்கிக் காட்டுகிறது!

வியப்போடு ஒரு பட்டியலே போடுகிறாள் அவள்:

‘நான் காணும் எல்லாவற்றிலும் நீயே நிறைந்து நிற்கிறாய். இதுவரை நினைத்தே பார்த்திருக்காத இன்பத்தைக் கொடுக்கும் அன்பு என்னும் தேனை என் உள்ளத்தில் நீ கலந்துவிடுகிறாய். உனது அந்தச் செய்கையால் என் மனம் உற்சாகத் துள்ளலில் திறக்கிறது. பெண்மைக்கென்று வகுத்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டை நீ மீறவைப்பதால் இன்ப கானம் பாடுகிறது என் மனம். இதெல்லாம் நீ செய்த மாற்றங்கள் அல்லவா?’ என்று காதலின் தன்மையை வியந்து பாடுகிறாள் அவள்.

‘கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்.
உன்னாலே என் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே.
எல்லை மீறி, நிலை மாறி, சல்லாப கானம் பாடுதே’

கடைசி வரிகளில் வரும் நிறுத்தற்குறிகள் கூடத் துல்லியமாகப் புலனாகும் வண்ணம் இசைக்கோர்வைகளைச் செதுக்கி வியக்கவைக்கிறார் ஏ.எம். ராஜா.

தொடரும் சரணத்தில் காதலின் வலிமையும், பெருமையும் கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.

‘காதலே! உனக்கு முன்னால் ஜாதி, மதம் என்ற பாகுபாடுகளோ, அவற்றின் விளைவாக எழும் வாதப்பிரதிவாதங்களோ - எதுவுமே எடுபடாது.

‘ஊரெல்லாம் ஒடுங்கிவிடும் இரவிலும் கூட நீ ஓயாமல் உறங்காமல் நீ புகுந்த இதயத்தை ஆட்டிப்படைக்கிறாய். நீ இல்லாமல் இங்கு எந்த உயிரும் வாழ்வதில்லை’ என்று காதலின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகும் கவிஞர் மருதகாசி, கடைசி வரியில் ஒரு எளிமையான உவமையின் மூலம் நச்சென்று காதலின் சிறப்பை கோபுர தீபமாக்கிப் பாடலை முடிக்கின்றார்.

ஒரு மலரிடமிருந்து வெளிப்படும் சுகந்தமான வாசம் அந்த மலரின் எந்தப் பாகத்திலிருந்து பிறக்கிறது என்று சொல்ல முடியுமா? முடியாது.

ஏனென்றால் அந்த மலர் முழுவதுமே அந்த சுகந்த வாசம் இங்கிருந்துதான் பிறக்கிறது என்று இனம் பிரித்துச் சொல்லமுடியாதபடி வியாபித்து இருக்கிறது.

காதலும் அப்படித்தான். அது எங்கிருந்து மனதில் பிறக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

மலர் முழுக்க நறுமணம் வியாபித்திருப்பதைப்போல காதல் மனம் முழுக்க ஒரு இன்பஜோதியாக உலாவருகிறது என்கிறார் மருதகாசி.

உன் முன்னே ஜாதிபேத வாதமெல்லாம் ஓய்வதில்லை.
ஊரெல்லாம் ஓய்ந்தபோதும் நீ உறங்கி ஓய்வதில்லை.
மண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே
மலர் மேலே, மணம் போலே, உலாவும் இன்ப ஜோதியே’

இப்படியெல்லாம் துள்ளலோடு காதலின்பத்தை அனுபவிக்கும் பெண்ணுக்கு அந்தக் காதல் கைகூடாமல் போகும் சூழல் வருகிறது. இன்பமெல்லாம் கானல் நீராகி, அவளை விட்டுப் போய்விட, கண்ணீருக்கே அவள் வாழ்வு சொந்தமாகிக் துன்ப மேகம் சூழும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளை ஆட்டிப்படைக்க ..

இந்த நிலை மாறவும் அந்தக் காதலையே துணைக்கழைக்கிறாள் அவள்.

‘என் மனச்சோலை மீண்டும் பூப்பதும், என் மனதுக்கு உகந்தவருடன் நான் மீண்டும் சேர்வதும் உன் கையில்தான் இருக்கிறது’ என்று காதலை அன்றி வேறு துணை ஏதுமில்லாத அவள் வாழ்வில் மீண்டும் வசந்தத்தை ஏற்படுத்தும் பொறுப்பையும் அந்தக் காதலிடமே ஒப்படைக்கிறாள் அவள்.

‘உன்னாலே எந்தன் உள்ளச் சோலை மீண்டும் பூத்திடாதோ
என் ஆசை நண்பரோடு என்னைக் காலம் சேர்த்திடாதோ
மின்னாத பொன்னைப்போல நானும் வாழ நேருமோ
உன்னை அன்றி துணை இன்று என் வாழ்வில் வேறு இல்லையே’

எண்ணாத மாற்றமெல்லாம் காட்டும் காதலால் முடியாத செயல் என்று ஒன்று உண்டா என்ன?

இப்படிக் காதலின் வலிமையையும் அதன் மீது ஒரு பெண் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் இந்தப் பாடல் கவிஞர் மருதகாசி, இசையமைப்பாளர் ஏ.எம். ராஜா - பி.சுசீலா ஆகிய மூவரின் கூட்டணியோடு ஏ.வின்சென்ட்டின் அருமையான ஒளிப்பதிவும் சேர புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் புகழுக்கு ஒரு நல்முத்தாக திரை இசைக்கடலில் ஒளிர்கிறது.

பாடலைக் கண்டும் கேட்டும் மகிழ: https://www.youtube.com/watch?v=uPdzO1jxXkM

(தொடர்ந்து முத்தெடுப்போம்)

ஏ. எம். ராஜா

-----------------
முழுப் பெயர் : ஏமல மன்மதராஜு ராஜா.

பிறந்த நாள் : ஜூலை 1 , 1929

பெற்றோர் : மன்மத ராஜு – லக்ஷ்மம்மா

பிறந்த இடம்: ராமாபுரம் , சித்தூர் மாவட்டம்.

கல்வி : சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டதாரி.

இசை : வேலூர் தமிழ் இசை கழகத்தில் நரசிம்மலு நாயுடுவிடம் முறையாக இசைப் பயிற்சி.

முதல் பாடல் வெளிவந்த படம் : ஜெமினியின் "சம்சாரம்".

இசை அமைத்த முதல் படம் : கல்யாண பரிசு

இசை அமைப்பில் குறிப்பிடத்தக்க பிற படங்கள் : விடிவெள்ளி, தேன் நிலவு, ஆடிப்பெருக்கு.

மறைந்த தினம் ஏப்ரல் 8 , 1989

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in