

நடிகை ஆலியா பட், ‘உட்தா பஞ்சாப்’படத்தில் குடிபெயர்ந்த பிஹாரி தொழிலாளியாக நடித்திருக்கிறார். படத்தின் டிரைலரைப் பார்த்த பலரும் ஆலியாவின் கதாபாத்திரத்தை விமர்சித்திருக்கின்றனர். அதற்குப் பதிலளித்திருக்கும் ஆலியா, “ஒரு படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு முன்னால் விமர்சனம் செய்யும் வழக்கம் இங்கே நீண்டகாலமாக இருக்கிறது. டிரைலர் என்பது ஒரு படத்தைப் பற்றிய சிறு குறிப்புதான். அதனால், படம் வெளியான பிறகு, விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்னால், டிரைலருக்கு வரும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்கிறார்.
அபிஷேக் சவுபே இயக்கியிருக்கும் இந்தப் படம், பஞ்சாபின் கஞ்சா பிரச்சினையைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஆலியாவுடன், ஷாஹித், கரீனா, தில்ஜித் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் டிரைலரில், பிஹாரிகளைக் காட்சிப்படுத்தியிருப்பதை விமர்சனம்செய்து நடிகை நீது சந்திரா, இயக்குநர் அபிஷேக்கிற்கும், ஆலியாவுக்கும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஜூன் 17-ம் தேதி வெளியாகிறது.
‘நோ’ சொன்ன ரிச்சா
‘கேபரே’ படத்தில் ரிச்சா சட்டாவின் கதாபாத்திரம் பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆனால், படத்தில் தன்னுடைய தோற்றத்தைப் பற்றி எதுவும் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்திருக்கிறார் ரிச்சா. அதனால் படப்பிடிப்பில் ‘மொபைல் போன்கள்’ பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார் அவர். இந்தப் படத்தில் இவருடைய கதாபாத்திரம் பல தோற்றங்களில் வருவதால் இப்படியொரு ஏற்பாடு செய்திருக்கிறார் ரிச்சா. கவுஸ்தவ் நாராயண் நியோகி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரிச்சா, கேபரே நடனக் கலைஞராக நடித்திருக்கிக்கிறார். இந்தப் படம் மே 27-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெட்ட விடமாட்டேன்
இயக்குநர் அனுராக் கஷ்யப்புக்கும் சென்சார் போர்டுக்கும் எப்போதும் பிரச்சினைதான். ஆனால், அவர் தற்போது இயக்கியிருக்கும் ‘ராமன் ராகவ் 2.0’ படத்துக்கு சென்சார் போர்டு பெரிதும் கருணை காட்டியிருப்பதாக சொல்கிறார் அனுராக். அப்படியிருந்தும், படத்தில் ஒரு சின்னக் காட்சியைக்கூட வெட்ட அனுமதிக்க மாட்டேன் என்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டில் பேசியிருக்கிறார் அனுராக்.
“என்னுடைய இந்தப் படம் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன். அதனால், அவர்கள் காட்சிகளை வெட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்” என்கிறார் அனுராக். மே 11-ம் தொடங்கியிருக்கும் கான் திரைப்படவிழாவில் இந்தப் படம் திரையிடப்பட இருக்கிறது. 1960-களில் வாழ்ந்த ராமன் ராகவ் என்ற தொடர் கொலைகாரனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நவாஸுத்தீன் சித்திக்கி நடித்திருக்கிறார்.