

விபத்தில் இறந்து ஆவியாக வரும் நாயகிக்கும் அவளுடைய அப்பாவுக்குமான பாசத்தை ‘பிசாசு’ படத்தில் சித்தரித்தார் மிஷ்கின். தற்போது, ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ‘பிசாசு 2’ என்கிற தலைப்பில் அவர் இயக்கியுள்ள புதிய படம், விநாயகர் சதூர்த்தி தினமான ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘பிசாசு 2’ என தலைப்பு வைத்திருந்தாலும் முதல் படத்தைப் போல இது ‘ஆவிக் கதை அல்ல. ஒரு மனித தேவதையின் கதை. முதல் பாகத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது’ என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர்.
ஆண்ட்ரியாவுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப், அஜ்மல், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பின் கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட அடர்ந்த வனப் பகுதிகளில் பல காட்சிகளைப் படமாக்கியுள்ளார் மிஷ்கின்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டு வரும் ‘சூரரைப் போற்று’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதுடன் அதில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் சூர்யா. அதேநேரம், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றியது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில் சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ‘டைட்டில் லுக்’கை பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. ‘வணங்கான்’ என தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின்போது பாலா - சூர்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் படம் மேற்கொண்டு நகருமா என்பது சந்தேகம் எனவும் ஊகங்கள் பரபரத்தன. இந்நிலையில் ‘வணங்கான்’ என்கிற தலைப்பை அறிவித்து ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தனுஷுடன் இணையும் ப்ரியங்கா!
‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களின் வன்முறைக் காட்சிகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின, அதேநேரம், பாராட்டுகளையும் பெற்றார் அந்தப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அடுத்து தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
இதை சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வீரமரணம் அடைந்த வள்ளிபுரம் வசந்தன் என்ற போராளியின் பெயர்தான் ‘கேப்டன் மில்லர்’. இது விடுதலைப் புலிகள் பற்றிய படமா என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், இயக்குநர் தரப்பில் மௌனம் காத்து வருகிறார்கள்.
இதைவிட தற்போது முக்கியமான ‘அப்டேட்’ கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ‘டாக்டர்’, ‘டான்’ படங்களிலும் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்த ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். அதேபோல், வில்லனாக நடிக்க மலையாள நடிகர் விநாயகன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார் மதன் கார்க்கி.
1930 மற்றும் 40களின் பின்னணியில் பீரியட் படமாக உருவாகும் இது, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது! இதற்கிடையில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரேமேன்’ ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
முதல் முயற்சி!
தமிழ் சினிமாவில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து பெரிதாகப் பேசபட்டதில்லை. அந்தக் குறையை பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் போக்கும் எனத் தெரிகிறது. காளிதாஸ் ஜெயராம் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிஷோர் குமார் ஒளிப்பதிவில், ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசையணியின் வழியாக அறியப்பட்ட டென்மா இசையமைப்பில் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ள நிலையில் அதில் நடிப்பவர்களையும் அவர்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.