

சிறார் நடிகராக இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. பின்னர் அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘தேசமுத்ரு’ என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ (2011) படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மஹா’, ஹன்சிகாவுக்கு 50வது படம். ஐந்து படங்களைக் கூடத் தாண்ட முடியாமல் காணாமல் போய்விடும் கதாநாயகிகளுக்கு மத்தியில் ஹன்சிகா எப்படி ஐம்பது படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அவரிடமே கேட்டபோது மனம் திறந்து பேசினார்.
“நான் சிறுமியாக 19 ஆண்டுகளுக்கு முன் இந்தி சினிமாவில் அறிமுகமானவள். சில படங்களில் சிறுமி வேடங்களில் நடித்தபின் நான் நடிப்பைத் தொடர விரும்பியபோது எனக்கு அனுமதி தந்தவர் எனது அம்மா டாக்டர் மோனா. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன்.
நான் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்டதும் அம்மா சொன்னார். ‘சினிமா வாழ்க்கை, புகழ், பணம் இரண்டையும் கொண்டுவரும். அதே நேரம் அதுவே உனக்குச் சுமையாகவும் மாறக் கூடும். அதனால், புகழையும் பணத்தையும் சரியாக நிர்வகிக்கக் கற்றுக்கொள்.
நடிகர் என்கிற அடையாளத்துக்கு அப்பால், உனக்குப் பிடித்தமான ஒன்றில் உன் திறமையை வளர்த்துக்கொண்டே இரு. அப்போது நீ சினிமாவில் இல்லாமல்போனாலும் கவனிக்கப்படுவாய்’ என்றார்.
அவர் சொன்னபடியே சிறு வயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான ஓவியத் துறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறேன். நான் வரைந்த ஓவியங்களை விரைவில் மும்பையிலும் அதன்பின்னர் சென்னையிலும் கண்காட்சியாக வைக்க இருக்கிறேன்.
‘மஹா’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். தன் குழந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு தாயின் கதாபாத்திரம். முதல் முறையாக நான் நடித்திருக்கும் சீரியஸ் ரோல். படத்தின் இயக்குநர் யூ.ஆர்.ஜமீலிடம் இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும் என்று கேட்டேன்.
‘குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் தாய்மையை முழுமையாக உணர்ந்தவர் நீங்கள்’ என்றார். உண்மைதான்! எனக்கு 31 குழந்தைகள். சினிமாவில் ஈட்டும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு அவர்களுடைய தேவைகளை கவனித்துக்கொள்கிறேன்” என்றார்.