சினிமா எடுத்துப் பார் 59: பயமறியாத ரஜினி!

சினிமா எடுத்துப் பார் 59: பயமறியாத ரஜினி!
Updated on
3 min read

படம் பார்க்க ரஜினி ஏன் வர வில்லை என்று அவர் வீட்டுக்கு போன் செய்தோம். ‘‘வீட்டை விட்டு அவர் புறப்பட்டுவிட்டாரே’’ என்றார்கள். அவரின் காருக்காக எதிர்பார்த்து காத்திருந் தோம். ஒரு ஸ்கூட்டர் வந்தது. அந்த ஸ்கூட் டரில் வந்தவர் ரஜினிகாந்த். ‘‘ஏன் ஸ்கூட் டர்ல வந்தீங்க, அதுவும் இரவு நேரத்துல. சொல்லியிருந்தா கார் அனுப்பியிருப்போம்ல?’’ என்றேன்.

உடனே ரஜினி ‘‘சார்… எனக்கு கார், ஸ்கூட்டர் எல்லாமே ஒண்ணுதான். ஸ்கூட்டர் ஓட்டுற பழக்கம் டச் விட்டுப் போயிடக் கூடாதுல்ல!’’ என்று சிரித்துவிட்டு, ‘‘வாங்க... வாங்க படம் பார்ப்போம்’’ என்றார். அந்த விஷயம் சரவணன் சாருக்குத் தெரிந்துவிட்டது. அவர் என்னை கூப்பிட்டு, ‘‘ரஜினி இனி மேல் ஸ்கூட்டர்ல வரக் கூடாதுன்னு சொல் லுங்க. போறப்ப கார்ல கொண்டுபோய் விட்டுடுங்க. ஸ்கூட்டரை ஒரு பையனை ஓட்டிட்டு போகச் சொல்லுங்க’’ என்றார்.

படம் பார்த்து முடித்த ரஜினி, ‘‘இந்தப் படத்தை தமிழ்ல செய்யலாம். இதில் ரெண்டு ரோல் இருக்கு. ரெண்டும் வித்தியாசமா இருக்கு. நான் நடிக்கிற துக்கு நல்ல வாய்ப்பு. சரவணன் சார்கிட்ட சொல்லிடுங்க’’ என்று சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரை எடுக்கப் போனார். நாங்கள் உடனே ‘‘நீங்க ஸ்கூட்டர்ல போகக் கூடாது. கார்லதான் போகணும்னு சரவணன் சார் சொல்லியிருக்கார். நீங்க கார்ல போங்க. ஸ்கூட்டரை ஒரு பையன்கிட்ட கொடுத்தனுப்புறோம்’’ என்று சொன்னோம். அதுக்கு அவர் ‘‘ஸ்கூட்டர்ல வந்த நான் ஸ்கூட்டர்லதான் போவேன்’’ என்று புறப்பட்டுவிட்டார். அவருக்காக ஏற்பாடு செய்திருந்த கார் டிரைவரிடம் அவருடைய ஸ்கூட்டருக்குப் பின்னாலேயே அந்த காரை ஓட்டிச் சென்று, அவர் வீட்டுக்குக்குள்ளே போனதும் திரும்பி வாங்க என்று சொல்லி அனுப்பி வைத் தோம். டிரைவர் திரும்பி வந்து ‘‘ரஜினி வீட்டுக்குள் போய்விட்டார்’’ என்று சொன்ன பிறகுதான் சரவணன் சார் உறங்க போனார். பயமறியாத குழந்தையைப் போல... பயமறியாத ரஜினி!

‘போக்கிரி ராஜா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள். ஒருவர் போக்கிரி; இன்னொருவர் ராஜா. போக்கிரிக்கு ‘போக்கிரி’ மாதிரியான நாயகி ரோலில் ராதிகா; ராஜாவுக்கு ‘ராணி’ மாதிரியான நாயகி ரோலில் ஸ்ரீதேவி. மூவரும் நடிப்பிலே கலக்கோ கலக்கு என்று கலக்கினார்கள்.

திருத்தணி அருகே ஒரு மலையில் புல்கள் வளர்ந்த பசுமையான இடத்தை ‘போக்கிரிக்கு போக்கிரி ராஜா’ என்ற பாடலை படமாக்க தேர்ந்தெடுத்தோம். போக்கிரித்தனம் செய்யும் ரஜினிக்கு இணையாக ராதிகாவும் போக்கிரித் தனமாக ஆடி நடிக்க வேண் டும். ராதிகாவிடம் கேரக்டர் பற்றி சொன்னபோது, ‘‘நீ இந்த கேரக்டருக்கு உங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மனதில் வைத்துக்கொண்டு நடித்தால்போதும்’’ என்று சொன்னேன். அவரும், ‘‘ஓ.கே. சார். அப்படியே நடிக்கிறேன்’’ என்றார். அப்படியே அருமையாக நடித்தார். அந்தப் பாடலுக்கு புலியூர் சரோஜா நடனம் அமைத்தார். அவரும் நடனத்தில் ஒரு அசத்தல் போக்கிரி யாச்சே… ஆகவே, அந்தப் பாடலில் மூவ்மென்ட்ஸ் எல்லாமே ரஃப் ஆக அமைந்திருக்கும். ரஜினி, ராதிகா, புலியூர் சரோஜா ஆகிய மூன்று பேர்களும் மக்களை மிரட்டிய நடனம் அது.

இப்போது இருப்பதுபோல் அகேலா கிரேன் எல்லாம் அப்போது கிடையாது. உயரத்தில் டாப் ஷாட் வைப்பது என்றால் ஷூட்டிங் வேன் மீதுதான் வைப்போம். சில சமயங்களில் வேனை ஓட வைத்து ஃபாலோ ஷாட் எடுப்போம். அதெல்லாம் மனித முயற்சி.

ஒரு இடத்தில் ராதிகாவை தூக்கிக் கொண்டு ரஜினி ஆடுவதுபோல நடனக் காட்சி. அதை புலியூர் சரோஜா ஆடிக் காட்டியதும், கொஞ்சம்கூட யோசிக்கா மல் ரஜினி, ராதிகாவை தோள் மீது தூக்கிக்கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டார். அப்போது கால் ஸ்லிப் ஆகி ரஜினிக்கு முட்டியில் அடிப்பட்டு ரத்தம் வடிந்தது. ராதிகாவுக்கும் காயம் ஏற்பட் து. அதையெல்லாம் பொருட்படுத் தாமல் ரஜினி அந்த நடனக் காட்சி யில் நடித்து முடித்துவிட்டுத்தான் அமர்ந்தார்.

அதே படத்தில் ‘விடிய விடிய சொல்லித் தருவேன்’ என்ற மென்மை யான ஒரு பாடல். இந்தப் பாடலுக்கு ரஜினியும், ஸ்ரீதேவியும் மென்மையாக நடனம் ஆடினார்கள். இந்தப் பாடலுக்கு ஆர்ட் டைரக்டர் சலம் அவர்கள் பூக் களால் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்தார். இதற்காக தினந்தோறும் இரண்டு லாரிகளில் பெங்களூரில் இருந்து பூக்கள் வந்தன. காட்சி அழகாக அமைய வேண்டுமானால் செலவும் அதிகமாகத்தானே ஆகும்!

படத்தில் இந்த இரண்டு பாடல்களுக் கும் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு பாடல். ரஜினி குடித்துவிட்டுப் பாடுவது போல் சூழல். அந்தப் பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதினார். ‘கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு/ மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு’என்ற இந்த தத்துவப் பாடலில் ரஜினியின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இந்த மூன்று பாடல்களுக்கும் வித்தியாசமான இசையை அமைத்திருந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஏவி.எம் தயாரிப்பிலும், நான் இயக்கிய பல படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் நவரச திலகம் முத்துராமன். ‘போக்கிரி ராஜா’ படத்தில் ரஜினிக்கு வில்லன் இவர்தான். இவர்கள் இருவரும் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஆந்திராவில் படமாக்கினோம். அப்போது முத்துராமன் என்னிடம் வந்து, ‘‘ஊட்டியில் ஒரு படம் ஷூட்டிங் இருக்கு. அங்கே போயிட்டு சென்னைக்கு வர் றேன். அங்கே சந்திப்போம்’’ என்று கூறி புறப்பட்டார். சென்னை வந்த எங் களுக்கு முத்துராமன் இறந்த சோகச் செய்திதான் கிடைத்தது.

என்னுடைய முதல் படமான ‘கனிமுத்து பாப்பா’ முதல் பல படங்களில் என் இயக்கத்தில் நடித்தவர் முத்துராமன். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் சில சமயங்களில் அவருக்கு அனுப்பிய கடிதங்கள் எனக்கு வந்துவிடும். எனக்கு அனுப்பிய கடிதங்கள் அவருக்குப் போய்விடும். அதேபோல் போன் அழைப்புகளிலும் இப்படி நடக்கும். இதில் ‘குறும்பான’ விஷயங்கள் என்று உங்களிடத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென் றால், இரண்டு பேரும் சுத்தமானவர்கள்! அவர் வளர்ச்சியில் நானும், என் வளர்ச்சியில் அவரும் துணையாக இருந்தோம். அந்த துணை போய்விட்டதே என்ற துக்கம் என்றும் என் இதயத்தை விட்டுப்போகாது. இந்த துக்கம் மறைவதற்கு முன் ‘பட்ட காலிலே படும்’ என்பதைப் போல் இன்னொரு துக்கம். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அமெரிக்காவில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. ஒரே நேரத்தில் திரையுலகம் இரண்டு பெரும் இழப்பை சந்தித்தது. நாங்கள் மட்டுமா அழுதோம்? உலகமே அழுதது.

கவியரசருடைய புகழுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. திரையிசைப் பாடல்களில் தமிழ் இலக்கிய சாற்றைக் கலந்து கொடுத்த கவியரசர் கண்ணதாசனின் புகழுடலைப் பார்த்த மக்கள் அழுத அழுகை இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. அவர் உடலைப் பார்த்து ‘‘அண்ணே… அண்ணே… ’’ என்று அழுதேன். ‘‘தம்பி... தம்பி!’’ என்று பாசத்தோடு கூப்பிட்ட அவர் இதழ்கள் மூடிக் கிடந்தன. அந்த மவுனம் என் கண்களை இறுக்கமாக்கியது. என் வாழ்க்கையில் ‘முதல் முதலாளி’ அவர்தானே!

கவியரசரை தமிழகத்தின் அரசவை கவிஞராக்கி அழகு பார்த்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அஞ்சலி செலுத்த வந்தார். கண்ணதாசன் உடலைப் பார்த்து தன் வருத்தத்தை வழிந்தோடும் கண்ணீர் மூலம் காணிக்கையாக்கினார். கவிதைத் தாயின் தலைமகன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. சிறுகூடற்பட்டி சிகரத்தின் உடலை சுமந்து நகர்ந்த அந்த இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர் அவர்களும் நடந்து வந்தார். சன் தியேட் டருக்கு அருகே இறுதி ஊர்வலம் வரும்போது எம்.ஜி.ஆரைப் பார்த்ததும் மக்களின் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிகமானது. அதைக் கண்ட எம்.ஜி.ஆர் திடுக்கிட்டு போனார். பிறகு..?

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in