

ஞான.ராஜசேகரன் இயக்கியுள்ள படம் 'ராமானுஜன்'. இசை ரமேஷ் விநாயகம். 'நள தமயந்தி', 'அழகிய தீயே' படங்களில் "என்ன இது, என்ன இது", "விழிகளின் அருகினில் வானம்" போன்ற மறக்க முடியாத மெலடிகளை தந்தவர்.
நா.முத்துக்குமார் எழுதியுள்ள "துளித்துளியாய்" காதலும் கணிதமும் கலந்த டூயட். பழமையும் இனிமையும் இணைந்த குரல்களால் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகமும் கௌஷிகி சக்ரவர்த்தியும் இந்தப் பாடலை அழகுபடுத்தியுள்ளனர். இதே பாடலின் மற்றொரு வடிவத்தில் வினயா பாடியுள்ளதைவிட, கௌஷிகியின் குரலில் நயத்தையும், 'பாவ'த்தையும் அனுபவித்து ரசிக்க முடிகிறது. திருமழிசை ஆழ்வாரின் "விண் கடந்த சோதியாய்" பாடலுக்கு, மேற்கத்திய இசை கலந்து புது வடிவம் கொடுத்துள்ளார் ரமேஷ். உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார். வாணி ஜெயராம் பாடியுள்ள "நாராயணா" என்ற பஜனை பாணி பாடல்.
கருவியிசைத் துணுக்குகளில் தனித்து நிற்பது 'இங்கிலிஷ் நோட்ஸ்'. இதில் முத்தையா பாகவத ரின் புகழ்பெற்ற 'சங்கரா பரணம்' பாடலை, மேற்கத்திய இசையுடன் அற்புதமாகக் கலந்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆடியோவிலும் இசையின் மீதான எதிர்பார்ப்பை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்துகிறார் ரமேஷ் விநாயகம்.