

மழலைச் செல்வம் வேண்டாத பெற்றோர் இருக்க முடியாது. அந்த மழலை பேசும் குழந்தையை கொஞ்சி மகிழாத - அதனை தாலாட்டி மயங்க வைக்காத தாயே இருக்க முடியாது.
குழந்தையைத் தாலாட்டும் பாடல்கள் எவ்வளவோ நமது திரைப் படங்களில் ஆதி நாள் தொட்டு இடம் பெற்றிருக்கின்றன.
அப்படி வந்த பாடல்களில் இந்தப் பாடலுக்கு ஈடு இணை வேறு எதுவுமே சொல்ல முடியாது.
இதற்கான பாடல் காட்சியோ சற்று வித்தியாசமானது.
சாதாரணமாகத் தனது குழந்தையைத்தான் ஒரு தாய் கொஞ்சிச் சீராட்டிப் பாடுவாள்.
இந்தக் கதையிலோ.. நாயகி திருமணமாகி வரும்போது அவளது கணவனின் தம்பி பள்ளிக்கூடச் சிறுவன். அவனுக்குத் தாயாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் குழந்தை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் அவனுக்கு அண்ணியாக இல்லாமல் அன்னையாக வாழ்ந்து வருபவள் அவள்.
அவன் வளர்ந்து பெரியவனாகி அவனுக்குத் திருமணமும் ஆகி - அவர்களுக்குப் பிறந்த குழந்தையை அவள் சீராட்டி தாலாட்டி பாடுவதாக பாடல் காட்சி.
நூற்றாண்டு கண்ட கவிஞர் மருதகாசியின் அற்புதமான வரிகளுக்கு இசையமைப்பாளர் சுசார்ல தக்ஷிணாமூர்த்தி, மிஸ்ரகாபி, பீலு, யமுனகல்யாணி ஆகிய ராகங்களின் ஸ்வரங்களைக் கையாண்டு மென்மையாக, மயிலிறகால் நமது மனதை வருடும் வண்ணம் அற்புதமாக இந்தப் பாடலை நமக்குக் கொடுத்திருக்கிறார். இன்றளவும் எஸ்.தட்சிணாமூர்த்தி (தெலுங்கு) என்றால் பளிச்சென்று நம் நினைவுக்கு வரும் பாடல் இதுதான்.
1955ஆம் ஆண்டு, எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த 'மங்கையர் திலகம்’ படத்தில் இடம் பெறும் இந்தப் பாடலைப் பாடியவர் ஆர். பாலசரஸ்வதி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அண்ணியாக ‘நாட்டியப் பேரொளி’ பத்மினி தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்திய படம் இது.
இனி.. பாடலின் நயங்களைப் பார்க்கலாம்:
குழந்தை என்றாலே நினைவுக்கு வரும் தெய்வம் கண்ணன் தான். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா..! அதனால் இந்தத் தாய் தெய்வமாகவே குழந்தையைப் பாவித்து பாடலைத் தொடங்குகிறாள்.
‘நீல வண்ணக் கண்ணா வாடா..
நீ ஒரு முத்தம் தாடா.
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா..’
அவள் திருமணமாகி வந்தபோது கணவனின் தம்பி பள்ளி செல்லும் பாலகன். ஆகவே அவனைத் தொட்டிலில் இட்டு தாலாட்ட அவளால் முடியவில்லை. அவனை வளர்ப்பதற்காக அவளும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அவனது குழந்தையை தாலாட்டும் இந்த நேரத்தில் அவளது மனக்குறை நீங்கி விடுகிறது. ஆகவே அவள் இப்படிப் பாடுகிறாள்:
‘பிள்ளையில்லாக் கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
எல்லையில்லாக் கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா..’
என்று தனது குறை தீர வந்த அந்தக் குழந்தையின் வடிவில் அவள் கடவுளையே காண்கிறாள்.
பொதுவாக எல்லாரும் குழந்தை தூங்கும் அழகைத் தான் பாடலில் வருணிப்பார்கள். ஆனால் கவிஞர் மருதகாசி சற்று வித்யாசமாக ஒரு குழந்தை தூங்கி எழும் அழகை அற்புதமாக உவமை கொடுத்து வியக்கவைக்கிறார்.
‘காலையில் விடியும்போது வானம்பாடிப் பறவை கானமிசைக்க அதை வசந்த காலத் தென்றல் காற்று சுமந்து வந்து மலர்களின் மீது பரவச் செய்ய.. அந்த இசையைக் கேட்ட மகிழ்ச்சியில் தேன் சுமக்கும் மலர்கள் சிரிக்கும் காட்சியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் என் செல்வன் கண் விழித்து எழும் காட்சி’. என்கிறாள் அந்தத் தாய்.
‘வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகாலத் தென்றல் காற்றில்
தேன்மலர்கள் சிரிக்கும் மாட்சி.
செல்வன் துயில் நீங்கும் காட்சி’
தொடரும் சரணத்தில் அவளது பெருமிதம் தெரிகிறது. அவனது அழகு அவளை மயக்குகிறது. அவனது அழகு முகத்தைப் பார்த்த அளவிலேயே அவளது கவலைகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. இதை அழகாக வெளிப்படுத்துகிறாள் அவள்.
‘தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்.
கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்.’
அந்த அழகுக்கு அழகு செய்ய அவள் முனைகிறாள். ஆனால் அவனோ ஓரிடத்தில் நிற்காமல் அசைந்துகொண்டே இருக்கிறான்.
சின்னஞ்சிறுவன் அல்லவா? அதட்டவோ, கடிந்துகொள்ளவோ அவளுக்கு மனம் வரவில்லை. ஆகவே அவனிடம் ‘என் கண்ணல்லவா.. இதோ பார். சின்னதா ஒரு பொட்டு மட்டும்தான்’ என்று கெஞ்சிக்கொண்டு அவனை அழகு படுத்துகிறாள் அந்தத் தாய்..
‘சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய்ப் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு..’
இப்போது இரவு நேரம் வந்துவிடுகிறது. குழந்தை ஆடிக் களைத்து அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறான். ஜன்னலின் வழியாகக் குளிர்ந்த வாடைக்காற்று வீச.. அவனது சின்ன உடம்பு அந்தக் குளிரைத் தாங்காமல் நடுங்குகிறது.
இதைக் கண்டதும் அந்தத் தாய் ஜன்னல் கதவைத் தாழிட்டு அடைக்கிறாள். இது சாதாரணமான ஒரு செயல் தான். ஆனால் இதை மருதகாசி பாடலில் வெளிப்படுத்தும் அழகு இருக்கிறதே. அது கவித்துவத்தின் சிகரத்தில் பாடலைக் கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது.
‘காற்றே..இது உனக்கு கொஞ்சம் கூட நியாயமல்ல. என் மகனின் உடல் நடுங்க வீசுகிறாயே. இதோ இப்போது நான் கதவை அடைத்துவிடுகிறேன். முடிந்தால் உன் திறமையை இப்போது காட்டு பார்க்கலாம்.’ என்று காற்றுக்கே அந்தத் தாய் சவால் விடுவதாக வார்த்தைகளை - அதுவும் - எத்தனை எளிமையாக வார்த்தெடுத்திருக்கிறார் கவிஞர் மருதகாசி!
‘நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு…’
தாழிட்டு குழந்தையின் நடுக்கத்தைப் போக்கிய தாய் அவனது முகத்தைப் பார்க்கிறாள். அவள் சற்று முன் ஜன்னல் கதவைத் தாழிட முனைந்த போது தற்சயலாக வானில் தெரிந்த முழு நிலவு அவள் கண்களில் படுகிறது.
அந்த முழு நிலவின் முழுமையான வெளிச்சம் குழந்தையின் மீது பட்டது. அதை பார்த்ததும்.. படுத்திருந்த குழந்தைக்கு நிலவைக் காட்டுகிறாள். ‘கண்ணா .. அதோ பார். நிலா. அதுவும் முழு நிலா. அது உன்னைப் பார்க்கிறது பார். உன்னைப்பார்த்து அதற்கு ஒரே திகைப்பு. ஏன் தெரியுமா? நான் இங்கே ஆகாயத்தில் தானே இருக்கேன். பிறகெப்படி பூமியில் ஒரு சந்திரன். இது என்ன புதுசா இருக்கே! என்று ஆச்சரியப்படுகிறதடா.’
‘விண்ணில் நான் இருக்கும்போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது
என்றே கேட்கும் மதியைப் பாரு..’
என்று சொல்லி முழுமதியை குழந்தைக்கு காட்டிய அந்தத் தாயுள்ளம் வாஞ்சையும் நிறைவும் பொங்க அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடலை இப்படி முடிக்கிறது.
‘இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லாச் செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே’
தாயன்பின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்களில் இது உயர்ந்த இடத்தில் உள்ள பாடல் என்று தயங்காமல் கூறலாம்..
எளிமையான - அதே சமயம் - ஆழமான உயர்வு நவிற்சி அணி வகையை அனாயாசமாகக் கையாண்டு அமைக்கப்பட்ட பாடல் வரிகள் - மனதை வருடும் இசை - தேனில் ஊறிய பலாச்சுளையின் இனிமை நிறைந்த ஆர்.பாலசரஸ்வதியின் குரல் நயம்.. அருமையான காட்சிப்பதிவு - ‘நாட்டியப்பேரொளி’ பத்மினியின் சாந்தம் தவழும் முக வசீகரம் - எல்லாமாக ஒன்று சேர்ந்ததன் விளைவு...
எஸ். தட்சிணா மூர்த்தி (தெலுங்கு) அவர்களின் புகழ் மகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக்கல்லாக இந்தப் பாடல் மிளிர்கிறது.
பாடலைக் பார்த்தபடி கேட்கிற:http://https://www.youtube.com/watch?v=uPdzO1jxXkM
(தொடர்ந்து முத்தெடுப்போம்)
| சுசார்ல தட்சிணாமூர்த்தி. |
கல்வி : இசையில் பட்டப்படிப்பு. தேர்ந்த வயலின் இசை வல்லுநர். இசை அமைத்த முதல் படம் : ‘நாரத நாரதி’ (தெலுங்கு) தமிழில் முதல் படம் : ‘சர்வாதிகாரி’ பிரபலமான தமிழ் படங்கள் : மங்கையர் திலகம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும். யார் பையன், பாக்கியவதி. இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். மறைந்த தினம் : பிப்ரவரி 9 - 2012. |