

அன்று முதல் இன்று வரை - அதாவது தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியான நாள் தொட்டு இப்போதைய காலகட்டம் வரை ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பாடல்கள் ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்திருக்கின்றன. அதிலும் 1950 முதல் 1980 வரை இருந்த காலகட்டம் தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலம் என்று சொல்லலாம்.
எத்தனை எத்தனை பாடலாசிரியர்கள்!
இசை அமைப்பாளர்கள்!
பாடக / பாடகியர்கள்!
அனைவரும் ஒருங்கிணைந்து - எந்தத் தொழில் நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இசையை ஒரு தவமாகக் கருதி அரும்பாடுபட்டுக் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களால் நம் செவிகளையும் சிந்தையையும் குளிர வைத்திருக்கிறார்கள்.
திரை இசை என்னும் அந்த ஆழ் கடலில் தான் எத்தனை எத்தனை முத்துக்கள்!
அந்த இசை முத்துக்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.
இந்தப் பாடல்களை உங்களில் பெரும்பாலோர் கேட்டிருக்கலாம். செவிமடல்களை தழுவாமலும் போயிருக்கலாம். அப்படி விடுபட்டுப்போயிருந்தால் கண்டிப்பாக இணையத்தில் கேட்டு அந்த இசையை நீங்கள் அனுபவிக்கவேண்டும் என்ற அன்பு வேண்டுகோளோடு பாடல் முத்துக்களை உங்கள் பார்வைக்குத் தருகிறேன். இனி திரையிசைக் கடலில் முக்குளிப்போம் வாருங்கள்:
1. மத நல்லிணக்கத்துக்கு ஒரு மகத்தான பாடல்!
கொடூர குணம் படைத்த, எந்த பாவச் செயலுக்கும் அஞ்சாத மூன்று கொள்ளைக்காரர்கள்! கொள்ளை அடிக்கச் சென்ற இடத்தில் சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு குழந்தையை தங்களோடு தூக்கி வர வேண்டியதாகிவிடுகிறது. மூவரும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று பெரும் மதங்களைச் சேர்ந்தவர்கள். என்னதான் இணை பிரியாத நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இறைவழிபாட்டில் அவர்களிடையே சிறு வேற்றுமை. அவரவர் மார்க்கங்களை அனுசரித்துத் தனித்தனியாக இறைவனைத் தொழுது வருகிறார்கள்.கொண்டு வந்த குழந்தைக்கோ பேதம் தெரியாது.
மழலை கொஞ்சும் மொழியுடன் இணைந்த கள்ளம் கபடம் இல்லாத வெகுளித்தன்மை நிறைந்த அந்தக் குழந்தையின் நடத்தையால் அவர்கள் மனங்கள் நிறைந்தபோது….
அதுவரை அவர்களிடையே இருந்து வந்த அந்தச் சிறு வேற்றுமை எண்ணம் கூட மறைந்து சம நோக்கோடு இறைவனைக் காணும் சமரச பாவம் பிறந்து விடுகிறது.
கவியரசரின் கற்பனைப்பேனா ஊற்றெடுக்கப் பாடல் பிறக்கிறது.
‘ராமன் என்பது கங்கை நதி’ - சீர்காழி கோவிந்தராஜன் வெண்கலக் குரலில் பெருமிதம் ஆக்கிரமிக்கிறது. அந்தப்பெருமித உணர்வுக்கு கட்டியம் கூறுகிறது ஷெனாய் இசை.
அடுத்த வரி ‘அல்லா என்பது .. சிந்து நதி..’ டி.எம்.எஸ். பாடும்போது குரலில் கம்பீர உணர்வு.
மூன்றாவதாக ‘இயேசு என்பது பொன்னி நதி’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் இசைக்கும்போது கனிவு.
இப்படி பெருமிதம், கம்பீரம், கனிவு என்ற மூன்று உணர்வுகளையும் படம்பிடித்துக் காட்டும் வண்ணமாக மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உணர்வு பூர்வமான இசை.
கேட்பவர் மனங்களை கட்டிப்போட இவை போதாதா என்ன?
இந்த ஆரம்ப வரிகளை கவியரசர் அமைத்திருப்பதிலேயே ஒரு கந்தர்வ அழகு இருக்கிறது. கங்கை நதி உத்தர பிரதேசத்தில் பாயும் ஜீவநதி. அங்கு இருப்பது ராமன் பிறந்த அயோத்தி. ஆகவே இரண்டையும் இணைத்திருக்கிறார்.
சிந்து நதியோ காஷ்மீரின் பலுசிஸ்தான் மாகாணத்தில் .. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பிரதேசத்தில் பாயும் ஜீவநதி. இதனை அல்லாஹ்வுடன் பொருத்தி இருக்கிறார்.
பொன்னி என்னும் காவிரி பாயும் சோழ வளநாட்டில் கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான வேளாங்கண்ணி மாதா ஆலயம். இயேசு பிரானை பொன்னி நதியோடு சம்பந்தப்படுத்தி அமைத்திருக்கிறார்.
‘ஆகாசாத் பதிதம் தோயம்
யதா கச்சதி சாகரம்
சர்வ தேவ நமஸ்காரஹ
கேசவம் பிரதி கச்சதி..’
எப்படி ஆகாயத்திலிருந்து விழும் மழை நீரானது பல நதிகளாக உருமாறி ஒன்றேயான கடலில் சென்று கலக்கிறதோ அதே போல யார் எந்த வடிவத்தில் வணங்கினாலும் அவை எல்லாம் ஒன்றேயான ஆண்டவனையே சென்று அடைகிறது என்கிறார் ஆதி சங்கரர்.
இந்தத் தத்துவ வார்த்தைகளை - பிறிதுமொழிதல் அணி நயம் மிளிர ரத்தினச் சுருக்கமாக இரண்டே வரிகளில் சொல்லி விடுகிறார் கவியரசர்.
‘நதிகள் பிறக்கும் இடம் பலவாகும் - எல்லா
நதியும் கலக்கும் இடம் கடலாகும்’ .
- மூவரும் இணைந்து பாடும்போது சீர்காழி, டி.எம்.எஸ். இருவரின் குரலும் உயர்ந்து ஒலிக்க பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல் மந்தர ஸ்தாயியில் இணையும் அழகே தனி.
இனி பல்லவி.
‘தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே
என்னை தேடித்தேடி காவல் கொண்டான் மழலை மொழியிலே.
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா..’
தொடரும் மூன்று சரணங்களும் மூவரும் தனித்தனியே பாடுவதாக ..
‘அன்னை மேரி தெய்வபாலன்
எங்கள் ஏசு தேவ தூதன்.
ராஜசபை ஜோதி கண்டேன்.
ஞானக் கோவில் தீபம் கண்டேன்.
பாப்பா தெய்வ பாப்பா - பாசம் பொங்கும் பாப்பா’.
பி. பி. ஸ்ரீனிவாசன் குரலில் கனிவும் நெகிழ்வும் .. அன்பைப் போதிக்கும் மதம்தானே கிறிஸ்தவ மதம். அந்த அடிப்படை கொள்கையை பாடகரின் குரல் மூலமே வெளிப்படும் வண்ணம் பாடவைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.
தொடரும் இரண்டாவது சரணத்தின் முதல் வரியை மேலேற்றி .. சங்கதி சேர்த்து..
‘அல்லாஹு அக்பர் என்றே.....’ என்று டி.எம்.எஸ். கம்பீரமாகத் தொடங்கும் எடுப்பே மெய்சிலிர்க்க வைக்கிறது. டேப் இசை இந்தச் சரணம் முழுவதும் ஆக்கிரமித்து மேலும் சிலிர்க்கவைக்கிறது.
‘அல்லாஹூ அக்பர் என்றேன்.
ஆண்டவரே அடிமை என்றேன்.
பிள்ளை உன்னைப் பேசச் சொன்னான்
எல்லாமே இதுதான் என்றான்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா’.
கடைசி சரணம் சீர்காழி கோவிந்தராஜனின் பெருமிதக் குரலில்:
‘வேணுகான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
தேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணன் என்னும் ராமன் கண்டேன்.
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா’.
விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரிப்பில் 1968இல் வெளிவந்த ‘குழந்தைக்காக’ படத்தில் இடம் பெற்ற இந்த அற்புதப் பாடல் அந்த ஆண்டு ‘தேசிய ஒற்றுமைக்கான’ சிறந்த பாடலுக்கான மத்திய அரசின் சிறப்பு விருதை கவியரசு கண்ணதாசனுக்கு பெற்றுத்தந்த பாடல்.
பாடல் தயாராகி விட்டது.
இனி காட்சிப்படுத்த வேண்டும்.
சாதாரணமாக அவரவர் மார்க்கத்திற்காக சரணங்களை அவரவர்களே பாடுவதாக அமைத்தால் அங்கு இயக்குநரின் கற்பனை வளத்துக்கு வேலையே இல்லை.
ஆனால் இந்த இடத்தில் தான்.. இயக்குநர் பி. மாதவன் மாற்றி யோசித்துக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.
அதாவது...
இயேசுபிரானைப் பற்றிய முதல் சரணத்தை இஸ்லாமியராக வரும் எஸ்.வி. ராமதாஸ் பாடுவதாகவும்
இஸ்லாம் மதத்தைப் பற்றிய இரண்டாவது சரணத்தை இந்துவாக வரும் மேஜர் சுந்தரராஜன் இசைப்பதாகவும்
கண்ணனைப் பற்றி வரும் மூன்றாவது சரணத்தை கிறிஸ்தவக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஆர்.எஸ். மனோகர் பாடுவதாகவும் காட்சியை அமைத்திருக்கிறார்.
ஒரு மதத்தில் இருக்கும் உயர்ந்த கருத்தை மாற்று மதத்தவர் மதிப்பதோடு அல்லாமல் அதனை ஒப்புக்கொண்டு போற்றுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்!
நினைத்துப் பார்க்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது!
ஒரு இஸ்லாமியர் - கிறிஸ்தவத்தையும், இந்து ஒருவர் இஸ்லாம் மதத்தையும், மற்றொரு கிறிஸ்தவர், இந்து தெய்வத்தை புகழ்ந்து பாடுவதும்.. எத்தனை யதார்த்தமான சிந்தனை! யதார்த்தம்தானே படைப்பிலும் பிரதிபலிக்கிறது. இதுதானே உண்மையான சமய ஒற்றுமை!
1968இல் வெளிவந்த படத்திலேயே இதைச் சிந்தித்து உணர்ந்து பாடல் காட்சியை அமைத்திருக்கிறார்கள் என்றால்...
இது மறக்க முடியாத திரை இசைப்பாடல் மட்டுமல்ல..மனதை விட்டு அகலக்கூடாத பாடலும் கூட.
(தொடர்ந்து முத்தெடுப்போம்...)
| ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ். விஸ்வநாதன். பெயர் : மனயங்கத்து சுப்பிரமணியம் விஸ்வநாதன் பிறந்த நாள் : ஜூன் 24, 1928 பெற்றோர் : சுப்பிரமணியம் - நாராயணி அம்மாள். பிறந்த இடம்: எலப்புள்ளி, பாலக்காடு மாவட்டம். கல்வி : இசை : இசை : இசை மட்டுமே. குரு : நீலகண்ட சாஸ்திரி. திரை உலக பிரவேசம் : ஜூபிடர் நிறுவனத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு வின் ஆதரவால் சுயமாக மெட்டமைத்து - பிறகு "பிறவி மேதை சி.ஆர். சுப்பராமனின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டார். மெட்டமைத்த முதல் பாடல் : "புது வசந்தமாமே வாழ்விலே" அபிமன்யு படத்தில். இசை அமைத்த முதல் படம் : ஜெனோவா. பிரபலமான பாடல்கள் : எண்ணிக்கையில் அடங்காத இசைப்பேரலைகள் மறைந்த தினம்: ஜூலை 14, 2015 |