நடுக்கடலில் ஷூட்டிங், ஜெயம் ரவி எடுத்த ரிஸ்க்: என். கல்யாண கிருஷ்ணன் நேர்காணல்

நடுக்கடலில் ஷூட்டிங், ஜெயம் ரவி எடுத்த ரிஸ்க்: என். கல்யாண கிருஷ்ணன் நேர்காணல்
Updated on
3 min read

குத்துச்சண்டை பின்னணியில் கார்ப்பரேட்களின் சூழ்ச்சியைக் கலப்படமின்றிச் சொன்ன படம், ‘பூலோகம்’. வெற்றிபெற்ற இந்தத் திரைப்படத்தை அடுத்து என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருக்கும் அடுத்த படம், ’அகிலன்’.

இயக்குநர் ஜனநாதனிடம் சினிமா கற்றவர் இவர். தமிழ் சினிமா அதிகம் புழங்காத துறைமுகப் பின்னணியில் ’அகிலனைப்’ படமாக்கி இருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளில் இருந்தவரிடம் ‘அகிலன்’ பற்றிப் பேசினோம்...

’பூலோகம்’ வெற்றிபெற்றும் அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு இடைவெளி?

தனிப்பட்ட முறையில் எனக்குச் சில பிரச்சினைகள். என் தாயின் மறைவு, ஜனா சார் இழப்பு - இதெல்லாம்தான் தாமதத்துக்குக் காரணம். அந்தத் தாக்கத்துல இருந்து மீள்றதுக்கு எனக்குக் கொஞ்ச காலம் தேவைப்பட்டது. இப்ப கொஞ்சம் மீண்டிருக்கிறேன். இனி தாமதம் இல்லாம படங்களைத் தொடர்ந்து இயக்குவேன்.

’அகிலனி’ல் என்ன அரசியலை எதிர்பார்க்கலாம்?

இதுல, அரசியலா எதையும் சொல்லலை. நான் சினிமா எடுக்க வந்தவன். அதை எவ்வளவு தூரம் சிறப்பா செய்திருக்கேன்கிறது படம் வந்தாதான் தெரியும். என் குரு ஜனநாதன், தன் அரசியலை, தன் கொள்கையைச் சொல்றதுக்காகவே சினிமாவுக்கு வந்தார். அவர் கூட இருந்ததால, அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை விலக்கிட்டு, என்னால சினிமா பண்ண முடியலை. அப்படி உருவானதுதான் ’பூலோகம்’. ’அகிலன்’ல அப்படி ஏதும் இல்லை. ஏன்னா, சினிமாவைவிட உயர்ந்ததா, அரசியலை நான் நினைக்கிறேன். இந்தப் படத்துல சமூகப் பிரச்சன இருக்கும். அது குறைவா இருக்கும்.

என். கல்யாண கிருஷ்ணன்
என். கல்யாண கிருஷ்ணன்

அப்ப ’அகிலன்’ யார்?

எதிர்மறைச் சிந்தனை கொண்டவன். அது ஏன் அப்படிங்கறதுக்கான காரணங்களைச் சொல்லி இருக்கேன். சினிமாவுல ஒரு ஃபார்முலா இருக்கு. நெகட்டிவா இருக்கிற கேரக்டருக்குக் காரணம் சொல்லலைன்னா, அது வில்லனாகவே இருக்கும். காரணம் சொன்னா, நாயகனா மாறிடும்.

இதுல அப்படித்தான் சொல்லியிருக்கேன். அந்தக் காரணத்தைச் சொல்லும்போது ஹீரோ மேல இருக்கிற பார்வை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. அது படத்தின் சர்பிரைஸா இருக்கும். இது நாயகனை மையப்படுத்திய ஆக்ஷன் படம். பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் கொடுக்கணுங்கறதுக்காகத்தான் இதை உருவாக்கி இருக்கேன்.

முழுக்கத் துறைமுகப் பின்னணி கொண்ட படம் என்று கேள்விப்பட்டோம்?

முழுக்கத் துறைமுகப் பின்னணில, இதுக்கு முன் இந்தியாவிலயே எந்தப் படமும் வந்ததாத் தெரியலை. சண்டைக் காட்சி, காதல் காட்சிகள்ல, சின்னசின்னதா துறைமுகக் காட்சிகள் வந்துட்டு போயிருக்கும். ஜனநாதன் சார் ]இயற்கை’ படத்துல காதல் பின்னணில துறைமுகப் பகுதிகளைக் காண்பிச்சிருப்பார்.

அதைத் தவிர முழுக்கத் துறைமுகப் பின்னணியில் வேறெந்தப் படமும் வந்திருக்கிறதா தெரியல. ’இயற்கை’ படத்தோட இன்ஸ்பிரேஷன்தான் இந்தப் படத்தை உருவாக்க வச்சது. ஒரு காலத்துல, சென்னைன்னா இரண்டு விஷயங்கள்தான் முக்கியமா இருந்தது.

ஒண்ணு குத்துச்சண்டை, இன்னொன்னு துறைமுகம். அதையொட்டிதான் வாழ்க்கையே இருந்துச்சு. அங்கே வியாபார லாபத்துக்காக உருவாக்கப்பட்டவங்கதான் கேங்ஸ்டர்ஸ். அந்தப் பார்வை இந்தப் படத்துல இருக்கும். துறைமுகம் பகுதியில வாழும் ஓர் இளைஞன் அதை எப்படி எதிர்கொள்கிறான், அவன் வாழ்க்கை என்னவா இருக்குன்னு கதை போகும். நடுக்கடலுக்குள்ள பல நாட்கள் ஷூட் பண்ணியிருக்கோம்.

கடல்ல ஷூட் பண்ணறது கஷ்டமாக இல்லையா?

இது, கடலும் கரையும் சேர்ந்த கதைனால அதிகமாக் கஷ்டப்பட்டோம். நடுக்கடல்ல ஷூட் பண்ணும்போது கேமராவைப் படகுல வச்சா, படகு நிக்காது. கேமரா படகு நின்னா, நடிகர்கள் வர்ற படகு நிக்காது. ஷூட் பண்ணும்போது கப்பல் வரணும். அது எப்ப வரும்னு தெரியாது.

வருதுன்னு ஷாட் வச்சா, வேகமா துறைமுகத்துக்குள்ள கப்பல் போயிரும். கேமராமேன் விவேக், நான் உட்பட மொத்த டீமும் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அதெல்லாம் விரும்பி ஏத்துக்கிட்ட கஷ்டங்கள்தான். படத்தின் 40, 50 சதவிகிதக் காட்சிகள் கப்பல்லதான் நடக்கும். அதனால அதைக் காட்சிப்படுத்தறது சிரமமா இருந்தது.

’பூலோகம்’ படத்தில் ஜனநாதனின் வசனங்கள் பரபரப்பா பேசப்பட்டுது...

அவர் இருந்து எழுதியிருந்தா எப்படியிருக்குமோ, அப்படிதான் நானும் இதுல எழுதியிருக்கேன். அவர் தரத்துக்கு இருக்குமான்னு தெரியாது. அதுக்கான முயற்சியை பண்ணியிருக்கேன்னு சொல்வேன். அவர் பண்பட்ட மனிதர். சமூகத்தின் மேல் அவர் வச்சிருந்த அக்கறையில, பார்வையில ஒரு சதவிகிதம்கூட எனக்கு இல்லை. ஆனா, அவர் எனக்குள்ள புகுத்தியிருக்கிற சில விஷயங்களை, இந்தப் படத்துல வெளிப்படுத்தி இருக்கேன்.

ஜெயம் ரவிகூட உங்களுக்கு இது 2-வது படம்...

நேர்மையா சொல்லணும்னா, எனக்கு வேற எந்த நடிகரும் வாய்ப்பு கொடுக்கலை. அது மட்டுமில்லாம, அவரும் தயாரிப்பாளர் ஸ்கிரீன்சீன் சுந்தரும் இல்லைனா, இந்தப் படத்தை வேற யாராலயும் பண்ணியிருக்க முடியுமான்னு தெரியல. என் அனுபவத்துல, ஜெயம் ரவி சிறந்த நடிகர்.

எல்லாத்தையும் உள்வாங்கிச் செய்பவர். இந்தப் படத்துக்காக அவர் மெனக்கெட்டது அதிகம். அவர்கூட என் பயணம் ‘பேராண்மை’, ‘பூலோகம்’, இப்ப ‘அகிலன்’ என்று தொடருது. கப்பல்ல ஏறணும், கன்டெய்னர்ல ஓடணும், கீழ குதிக்கணும்னு நிறைய ரிஸ்க் காட்சிகள்ல நடிச்சிருக்கார்.

அதுக்கான பலனைப் படம் கொடுக்கும்னு நம்பறேன். பிரியா பவானி சங்கர், போலீஸ் அதிகாரியா வர்றாங்க. தான்யா ரவிச்சந்திரனும் சிறப்பா நடிச்சிருக்காங்க. நிறைய வெளிநாட்டு கேரக்டர்களும் படத்தில் உண்டு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in