

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் பெரும்பாலோர் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களுக்குள், நடிப்புக்குள் அடைபட்டுவிடுவது வழக்கம்.
'அப்பா கதாபாத்திரமா கூப்பிடு அவரை', 'போலீஸ் கதாபாத்திரமா கூப்பிடு இவரை' என்று தமிழ்த் திரையுலகமும் வரையறுத்துவிடுகிறது. இந்த வரையறைக்குள் சிக்காமல் தப்பித்தவர்கள் குறைவானவர்களே.
அவர்களில் ராமு தனித்துவ மானவர். பன்முக நடிப்பாற்றல் கொண்டவரான ராமு, எண்ணிகை அளவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களால் அடையாளம் பெற்றிருக்கிறார்.
உயிர் பெற்ற முதல்வர்
இயக்குநர் சசியின் ‘பூ’ படத்தில் கிராமத்து இளைஞனின் தந்தையாக அவர் நடித்திருந்தார். அதில் கிராமத்து வெள்ளந்தித்தனத்தையும் கோபத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தியிருப்பார். அடுத்ததாகத் ‘தங்க மீன்க’ளில் ஓய்வுபெற்ற ஆசிரியராக, செல்வச்செழிப்பு உள்ளவராக நடித்திருந்தார்.
மகன் வறுமை நிலையிலும், ஆசிரியரான அப்பா செல்வ வளத்துடனும் ஒரே வீட்டுக்குள் இரண்டு நிலைகளைச் சித்தரிக்கும் அந்தப் படத்தில், ஒரு சிறிய பாவனை மாற்றத்தில் அந்த வேற்றுமையை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ராமு.
‘பரியேறும் பெறுமா’ளில் சட்டக் கல்லூரி முதல்வராக உடல் மொழியில் ஒரு முதிர்ச்சியைக் கொண்டுவந்திருப்பார். அந்த நிலையை அடைந்த பிறகு அவர் பேசும் “பீ திங்கிற பன்னி மாதிரி என்ன அடிச்சி விரட்டுனாங்க. ஓடி ஒளிஞ்சுப் போய்ட்னா? அப்புறம் எது அவசியம்னு தெரிஞ்சுகிட்டு பேய் மாதிரி படிச்சேன்” என்கிற வார்த்தை, அவர் நடிப்பில் அதன் சரியான பொருளை அடைந்துவிடுகிறது.
படத்தில் மிகக் குறைந்த நேரமே வரும் இந்தக் கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது. வேறு எந்த நடிகரும் இந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்திப்போயிருக்க மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லவைக்கிறார் ராமு. ஊழல் அரசியல்வாதியாக ‘கோடியில் ஒருவனி’ல் பார்வையாளர்களின் வெறுப்பைப் பெறும் விதத்தில் நடித்திருந்தார். யதார்த்தமான கிராம வாழ்க்கை சார்ந்து எடுக்கப்பட்ட 'நெடுநெல்வாடை' படத்தின் முதுகெலும்பாக ராமு மாறியிருந்தார்.
நாட்டுக்கொரு சேதி
தமிழின் முக்கியமான வீதி நாடக ஆளுமையான பிரளயனின் பல நாடகங்களில் ராமு நடித்துள்ளார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இம்மாதிரி நாடகங்கள், தமிழ்நாட்டின் பல ஊர்களில் இடதுசாரி இயக்கங்களால் நடத்தப்பட்டுவருகின்றன. ‘அன்பே சிவம்’ படத்தில் முதலாளியை விமர்சித்துப் பாடப்படும் பாடலை, வீதி நாடகமாக்க விரும்பி, பிரளயனை கமல்ஹாசன் அணுகினார்.
அந்த அடிப்படையில் பிரளயனுடன் இணைந்து இயங்கிய ராமுவும் அந்தப் பாடல் காட்சியில் நடித்தார். ‘நாட்டுக்கொரு சேதி சொல்ல...’ பாடல் காட்சியில் தப்படிக்கும் கலைஞராகத் தோன்றியிருந்ததுதான் ராமுவின் முதல் சினிமா அறிமுகம்.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் சிறுகதையை மையமாகக் கொண்டு இயக்குநர் சசி உருவாக்கிய 'பூ' திரைப்படம்தான் ஒரு குணச்சித்திர நடிகராக அவரைத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியது. 'பேனாக்காரர்' என்கிற அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பூ’ ராமுவாக அவர் அறியப்பட்டார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்', சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த 'நீர்ப்பறவை', சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' உள்ளிட்ட பல படங்களில் ராமு நடித்துள்ளார். மம்மூட்டி நடிப்பில் வெளியாகவுள்ள 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் அவரது அப்பாவாக நடித்ததன் மூலம் மலையாளத்திலும் ராமு தலைகாட்டிவிட்டார்.
மருத்துவ சேவை
ஹோமியோபதி மருத்துவம் பயின்ற ராமு, சென்னை ஊரப்பாக்கத்தில் வசித்துவந்தார். கரோனா காலத்தில் பலருக்கும் மருத்துவச் சேவை ஆற்றிவந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரான அவர், சமூக ஊடகம் மூலம் தன் அரசியல் கருத்துகளைச் சமரசமின்றி வெளிப்படுத்திவந்தார்.
சினிமாவுக்கெனச் சொல்லப்பட்ட எந்த லட்சணங்களும் இல்லாத அசலான மனிதர் ராமு. அவரது நடிப்பிலும் இந்த இயல்பு வெளிப்பட்டது. அரிதான இம்மாதிரிக் கலைஞர்கள்தாம் இக்காலத் தமிழ்த் திரையுலகுக்குத் தனி அடையாளத்தை உருவாக்கிவருகிறார்கள். அந்த வகையில் ராமுவின் மறைவு, தமிழ்த் திரையுலகுக்கு இழப்புதான்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in