

ஒவ்வொரு சினிமாவுக்கும் பின்னே மறைந்திருக்கிறது, அறியப்படாத ஆயிரம் கதைகள். இந்திய சினிமாவின் சிறந்தப் படங்களில் ஒன்றான ’ஷோலே’வுக்கும் அப்படி கதைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தக் கதைகளைப் புத்தகமாக்கி இருக்கிறார், பத்திரிகையாளர் ஜியா.
இந்தியப் படங்கள் பற்றிய பல்வேறு கருத்துக்கணிப்புகளில், டாப் 10 படங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது ’ஷோலே’. இதைப் படமாக்க, இயக்குநர் ரமேஷ் சிப்பியும் ஒளிப்பதிவாளர் துவாரகா திவேச்சாவும் விரும்பி அனுபவித்த கஷ்டங்கள், அதற்கான உழைப்பு, அனைத்தும் அபாரம்.
இந்தப் படம், தன் வாழ்வை மாற்றும் என்ற நம்பிக்கையில் தர்மேந்திராவிடம் உதவி கேட்டு நின்ற அமிதாப் பச்சனும் 2 நாள் நடித்தும் டேக் ஓகே ஆகாததால், நம்பிக்கை இழந்த ’கப்பர் சிங்’ அம்ஜத் கானின் கண்ணீரும் இந்தப் புத்தகம் சொல்லும் ரகசியம். கூடவே இதன் ஷூட்டிங்கில் மூன்று காதல்கள் உருவாகி, ஒன்று அப்போதே திருமணத்தில் முடிந்திருக்கிறது. அது அமிதாப், ஜெயா பாதுரி காதல்.
ஹேமமாலினியைக் கட்டிப்பிடிப்பதற்காகவே, பல டேக்குகள் வாங்கிய தர்மேந்திரா, ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்களின் மிரட்டலான ரயில் சண்டை, அதைப் படமாக்க ஒளிப்பதிவாளர் மேற்கொண்ட துணிச்சல்மிக்க அவஸ்தை உட்பட ’ஷோலே’ உருவாக்கக் கதைகளை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
ஜியாவின் எழுத்து ஒரு கதையைக் கேட்பதுபோல நம்மை அந்தப் படத்துக்குள் எளிதாக உள்ளிழுத்துச் சென்றுவிடுவது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. சினிமா ஆர்வலர்கள், குறிப்பாக உதவி இயக்குநர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
ஷோலே நீறு பூத்த நெருப்பு l ஜியா
பக்கம்: 204 , விலை: ரூ.180 வெளியீடு: மர்யம் பதிப்பகம்,
36 தாக்கர் தெரு, புரசைவாக்கம், சென்னை 84 தொடர்புக்கு: 9840907358