கோலிவுட் ஜங்ஷன்: கிராமிக்குச் செல்லும் ராஜாவின் இசை!

கோலிவுட் ஜங்ஷன்: கிராமிக்குச் செல்லும் ராஜாவின் இசை!
Updated on
2 min read

இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’, ஓர் ஆங்கில ரொமாண்டிக் த்ரில்லர் படம். அஜித்வாசன் உக்கினா எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா, மேடில்டா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மொழி, கலாச்சாரம் கடந்து, காதலில் இணையும் ஜோடியாக வருகிறார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள ‘கம் ஃப்ரீ மீ’ பாடல், உலக இசை தினமான ஜூன் 21இல் வெளியாகி, ராஜாவின் தமிழ், இந்திய ரசிகர்களோடு மேற்கத்திய ரசிகர்களையும் கவர்ந்துவருகிறது.

இப்படத்தின் பாடல், பின்னணி இசை ஆகியவற்றை ‘போ டை சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா’ (BOW TIE Symphony Orchestra) கலைஞர்களைக் கொண்டு ஒலிப்பதிவு செய்துள்ளார் இசைஞானி. இப்படம் ஏற்கெனவே 12வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசை, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் விருதுகளை பெற்றுள்ளது.

இப்படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கான இசை ஆகிய இரண்டும், கிராமி, ஆஸ்கர், கோல்டன் குளோப் ஆகிய விருதுப் போட்டிகளில் கலந்துகொள்ள இசைஞானியின் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

மாதவனின் முதல் இயக்கம்!

ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘மாறா’ படத்தில் நடித்திருந்தார் மாதவன். அந்தப் படத்தைத் தொடர்ந்து, முதல் முறையாக அவர், திரைக்கதை எழுதி, இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இன்று இந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படம், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்த மாதவன், ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேச்சு, வைரல் ஆனதுடன் சர்ச்சைகளையும் உருவாக்கியது.

‘குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தில் என்னை நான் நிரூபித்துக்கொண்டுவிட்டாலும், என் பெயரை கூகுளில் போட்டு தேடிப் பாருங்கள். ‘ஸ்பை’ என்று வருகிறது’ என நம்பி நாராயணன் குறிப்பிட்டதே இந்தத் திரைக்கதையை எழுதத் தன்னைத் தூண்டியதாக மாதவன் குறிப்பிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் மிஷ்கின்!

எழுத்து, இயக்கம், நடிப்பு என பிஸியாக இருக்கும் மிஷ்கின், ‘டெவில்’ என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், மாருதி பிலிம்ஸ் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் இது.

விதார்த், பூர்ணா, ஆதித் அருண் எனப் பலர் இதில் நடிக்கின்றனர். சுப ராயகுரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிஷ்கின் இசையமைப்பதுடன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இப்படத்துக்காக இதுவரை 4 பாடல்களை எழுதி, ஒலிப்பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின். அவற்றை வரிசையாக வெளியிடவிருக்கிறது படக்குழு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in