

முதல் குழந்தை பற்றிய கனவுகளோடு இருக்கும் நரேன் - விஜயலட்சுமி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. தாய் மயக்கம் தெளியும் முன்னரே குழந்தை திருடப்படுகிறது. குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை உதவியுடன் அலைகிறார் நரேன். திருடிய பெண்ணோ குடிநீர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்குச் செல்கிறாள். திருடப்பட்ட குழந்தை என்ன ஆனது என்பதுதான் படத்தின் மையம். குழந்தைக்கான தேடலுடன் குழந்தைத் திருட்டு, ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகளின் நிலை ஆகியவற்றையும் இணைத்துச் சொல்கிறது திரைக்கதை.
படத்தின் மிக முக்கியமான பலம் கதையும் திரைக்கதையும்தான். அறிமுக இயக்குநர் எஸ்.கல்யாண் அதிகம் யோசிக்கப்படாத ஒரு களத்தில் நம்பகமான, உணர்வுபூர்வமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். அதில் இயல்பான திருப்பங்களையும் இடம்பெறச் செய்து தரமான சினிமாவைத் தர முயன்றிருக்கிறார்.
திருடப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிப்பதற் கான புலனாய்வை விவரிக்கும் படம், ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகளின் உலகையும் பெற்றோருடன் வாழும் குழந்தைகளின் உலகையும் கோடைக்கால முகாம் ஒன்றின் பின்னணியில் சித்தரிக்கிறது. இரண்டையும் இயல்பாகப் பய ணிக்க வைத்ததில் படத்துடன் ஒன்றிப்போக முடிகிறது.
‘‘நீங்கெல்லாம் அம்மா அப்பா இல்லையேன்னு கவலைப்படுறீங்க. நாங்கெல்லாம் இருக்காங்களேன்னு கவலைப்படுறோம்’’ என்பது போன்ற வசனங்கள் மூலம் குழந்தைகளின் உலகை ஒப்பனையின்றி முன்வைத்து, இதைப் பெரியவர் களுக்கான படமாகவும் மாற்றிவிடுகிறார் இயக்குநர்.
நல்ல கதை, உலுக்கி எடுக்கும் முடிவு ஆகிய இரண் டும் இருந்தும் காட்சிப்படுத்தலில் இயக்குநரும் ஒளிப் பதிவாளர் ஜெமின் ஜோம் அயாநாத்தும் பலவீன மாக வெளிப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் தொலைக்காட்சித் தொடர்களை நினை வூட்டுகின்றன. அளவான, இயல்பான வசனங்கள், பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, பவனின் புத்துணர்வு தரும் இசை ஆகியவை இந்தக் குறையை ஈடுசெய்கின்றன.
மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் எப்படித் திருடப்படுகின்றன என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் உண்மைக்கு அருகிலும் சென்று காட்டியிருந்தால் படத்தின் தொடக்கம் இன் னும் அழுத்தமாக அமைந்திருக்கும். பிரிந்து வாழும் இளம் ஜோடியான விஸ்வந்த் அக்ஷராவுக்கு இடையிலான காட்சிகள் ஈர்க்கவில்லை.
படத்தில் நடித்த மழலைப் பட்டாளத்தில் ஒருவர் கூட சோடைபோகவில்லை. அனைவரும் அருமை யாக நடித்திருக்கிறார்கள்.
குழந்தைகள் படமாக மட்டு மல்லாமல் குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் சுட்டிக்காட்டும் இந்தப் படம் விறுவிறுப்பான பொழுதுபோக்குப் பாடமாகவும் அமைந்திருக்கிறது.