

‘பாகுபலி’ படத்தைத் தயாரித்து, ஹாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த நிறுவனம் ஆர்கா மீடியா. தற்போது, ஆஹா ஓடிடி தளத்துக்காக ‘ஆன்யாஸ் டுடோரியல்’ என்கிற தலைப்பில் புதிய இணையத் தொடர் ஒன்றைத் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியிருக்கும் இதில், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் ஆகிய இரண்டு கதாநாயகிகள் அக்கா - தங்கையாக நடித்துள்ளனர். பல்லவி காங்கி ரெட்டி இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் செல்வாக்கு மிக்க பிரபலமாக ஆகவேண்டும் என்று நினைக்கிறாள் தங்கை. ‘அந்த உலகம் போலியானது; வாழ்க்கைக்கான தொழிலாக அதை எடுத்துக்கொள்ளாதே’ என்று எச்சரிக்கிறார் அக்கா.
ஆனால், தங்கை கேட்கவில்லை. சமூக வலைதளம் வழியாக அவர் கொண்டுவரும் ஆபத்து அமானுஷ்யங்கள் நிறைந்ததாக மாறி, அவர்களுடைய வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதுதான் கதை. ஜூலை 1ஆம் தேதி ஆஹா தளத்தில் தொடரைக் காணலாம்.
நினைவாற்றலில் யானை!
அசோக் செல்வனுக்கு ‘மர்டர் மிஸ்ட்ரி’ படங்கள் என்றால் கச்சிதமாகப் பொருந்திவிடும். இப்போது ‘வேழம்’ என்கிற படத்தில் கொலையைத் துப்பறியும் நாயகனாக வருகிறார். “வேழம் என்றால் யானை. அந்த விலங்கின் வலுவான நினைவாற்றல் வியப்புக்குரியது.
இக்கதையில் நினைவாற்றலை நாயகன் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது திரைக்கதையில் செஸ் விளையாட்டுப் போல் விறுவிறுப்பாக இருக்கும்” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் சந்தீப் ஷ்யாம். இதில் ஜனனி, ஐஸ்வர்யா என இரண்டு கதாநாயகிகள்.
மீண்டும் ‘வெப்பம்’ இயக்குநர்!
நானி, நித்யா மேனன், பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2011 இல் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுடன் வெற்றி பெற்ற படம் ‘வெப்பம்’. அந்தப் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான், குறிப்பிடத்தக்க பெண் இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். ஆனால், தொடர்ந்து படம் இயக்காமல், திருமணமாகி கணவருடன் கத்தார் நாட்டில் குடியேறினார்.
தற்போது 11 வருட இடைவெளிக்குப் பிறகு வந்து, முகேன் ராவ், ‘பேச்சிலர்’ படப் புகழ் திவ்யா பாரதி இணைந்து நடித்துள்ள ‘மதில் மேல் காதல்’ என்கிற ‘ராம்காம்’ வகைப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். எதற்காக இந்த இடைவெளி என்று கேட்டபோது, “எதைச் செய்தாலும் ஒழுங்காக, அழகாகச் செய்ய வேண்டும் என நினைப்பேன்.
குடும்ப வாழ்க்கையில் அர்ப்பணிப்பு தேவை. தற்போது எனது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். அப்போதே கணவர் என்னைச் சென்னையில் தங்கி பட இயக்கத்தில் கவனம் செலுத்தச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். இனி வரிசையாகப் படங்களை இயக்குவேன்” என்கிறார்.