

கதாநாயகனாக நடித்தாலும் கதாபாத்திரமாக உணரவைத்துவிடுவார் கதிர்.
முன்னணி நடிகர் என்கிற தோரணையோ, பந்தாவோ இல்லாதவர். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி 10 ஆண்டுகளை வெற்றிகரமாகத் தொட்டிருக்கும் இவர், தற்போது, ‘யூகி’, ‘தலைக்கூத்தல்’, ‘இயல்வது கரவேல்’, சிவமுகா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
கரோனா ஊரடங்கின்போது தனது பூர்விக கிராமமான, ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள தளவாய்பேட்டைக்குச் சென்று தன்னுடைய தாத்தா - பாட்டியுடன் இரண்டு மாதம் தங்கினார். அங்கே மண்வெட்டி எடுத்து, வயலில் இறங்கி வேலை பார்த்து சோளத் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டார்.
கதிரின் வெளியே தெரியாத மற்றொரு பர்செனல் பக்கம் ‘பேக்பேக்கிங்’ (Backpacking) பயணம். உலக அளவில் இளைஞர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள சுயாதீனப் பயணம். அது பற்றி கதிரிடம் கேட்டதும் மனம் திறந்து பேசத் தொடங்கினார்.
“முன்பெல்லாம் அறிமுகமில்லா தவர்களிடம் பேசுவதற்குப் ரொம்பவே கூச்சப்படுவேன்! அப்போது என் உயிர் நண்பன் ஒருவன்: ‘இந்த உலகத்துடன் நீ துணிந்து உரையாட வேண்டும் என்றால் என்னைப் போல் ‘பேக்பேக்’ பயணம் புறப்பட்டுப் போ..’ என்றான். அதுவொரு அலாதியான பயணம் என்று தெரிந்துகொண்ட பிறகு, வருடத்தில் 30 நாள் நான் மட்டும் தன்னந்தனியாக ‘பேக் பேக்’குடன் கிளம்பிவிடுவேன்.
இரண்டு ‘வெதர் ஜாக்கெட்டுகள்’, சில உடைகள், சுடுதண்ணீருக்கு ஒரு சின்ன கெட்டில். அவ்வளவுதான் அந்தப் பைக்குள் இருக்கும். நாம் போய் இறங்கும் இடம் எந்தத் தேசமாக இருந்தாலும் சரி, ‘பேக்பேக்’ பயணிகளை மதிக்கிறார்கள்.
ஒரு நாடோடிபோல் கட்டற்று எங்கு வேண்டுமானாலும் போகலாம். போகும் இடத்தில் தூய்மையாக என்ன கிடைக்கிறதோ அதை அளவாகச் சாப்பிடலாம். நினைத்த இடத்தில் தங்கலாம், தூங்கலாம்.
கடந்த டிசம்பரில் பாரிஸ் நகரத்துக்கும் பார்சிலோனாவுக்கும் போனேன். பாரிஸ் போய் இறங்குவதற்கு மட்டும்தான் விமானம். அதன் பிறகு மக்களின் முகங்களைப் பார்க்கப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினேன். நட்சத்திர விடுதியில் தங்கவில்லை. ஒரு வரிசையில் குறைந்தது பத்து படுக்கைகள் கொண்ட ‘டார்மிட்டரி’யில் தங்கினேன்.
என்னுடன் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடோடி இளைஞர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவர் பேசும் மொழி இன்னொருவருக்குப் புரியாவிட்டாலும் உணர்வின் மொழியே தகவல் பரிமாறிக்கொள்ள போது மானதாகஇருந்தது. ஆங்கிலமும் சில இடங்களில் கைகொடுத்தது.
நான் பாரிஸிலிருந்து இரண்டு மணிநேரம் பயணித்து ஸ்டார்ஸ்பர்க், கோல்மர் என பல கிராமங்களில் சுற்றித் திரிந்தேன். ரோட்டோர உணவகங்களில் சாப்பிட்டேன்.
அதற்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள கில்லித் தீவுகளுக்குச் சென்றேன். அங்கே மோட்டர் வாகனங்கள் என்பதே கிடையாது. அந்தத் தீவு முழுவதும் குதிரைகளும் மிதிவண்டிகளும் மட்டும்தான். தூய்மையான காற்றுதான் அங்கே உங்களுடைய சக பயணி.
புடாபெஸ்டின் புறநகரில் ஒரு குகையில் தங்கிய அனுபவம் மறக்க முடியாதது. பூமியிலிருந்து 60 அடி ஆழத்தில் ஒரு மலைக்குகை. இரண்டாம் உலகப் போரின்போது குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க, அந்நகர மக்கள் அந்தக் குகைக்குள்தான் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.
பாங்காக் துறைமுகத்திலிருந்து ஆறு மணிநேரம் படகுப் பயணத்துக்குப் பிறகு தாய்லாந்தில் உள்ள தீவுகளுக்குப் பயணித்தேன். ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த ஒரு காதல் ஜோடியை அங்கே சந்தித்தேன். எட்டு ஆண்டுகளாக அவர்கள் காதலர்கள்.
காதலின் அடுத்தக் கட்டமாகத் திருமண செய்துகொண்டு குடும்பமாவதா வேண்டாமா என்பதை முடிவுசெய்ய, இருவரும் தங்களது ஓராண்டு ஊதியத்தை எடுத்துக்கொண்டு ‘பேக்பேக்’ பயணம் கிளம்பி வந்திருந்தார்கள். என்னிடம் இந்தியக் குடும்பங்களைப் பற்றி இருவரும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.
இவர்களைப் போல, வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ள ‘பேக்பேக்’ எனக்கு உதவுகிறது. பயணம் என் நடிப்பையும் மேம்படுத்துகிறது என நம்புகிறேன்”.