

கல்யாண ஏற்பாட்டுக்குக் குறுக்கே பழைய காதலும் புதிய சந்தேகங்களும் நுழைந்தால் என்ன ஆகும்? அதுதான் ‘இது நம்ம ஆளு.’
ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க் கிறார், சிவா (சிம்பு). ‘சகோ... சகோ’ என்று அவரை சதா வம்புக்கு இழுத்துக் கொண்டே உடன் இருக்கும் நண்பன் வாசு (சூரி). சென்னையில் ஒரு அறை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போவது, ஊர் சுற்றுவது என்று இருவரும் ஜாலி யாக வலம் வருகிறார்கள். மகன் சிம்புவுக்கு அப்பா ஜெயப்பிரகாஷ் திருவையாறில் வரன் பார்க்கிறார். அவர்தான் மைலா (நயன்தாரா).
அவரைப் பார்த்ததும் சிம்புவுக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் தன் பழைய காதலி பிரியா (ஆன்ட்ரியா) பற்றி நயன் கேட்டதால் சிம்பு நம்பிக்கை இழக்கிறார். எனினும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இரு வரும் காதலர்களாக வலம் வரும்போது ஏற்படும் சில திருப்பங்கள் கல்யாணத் துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. அவற்றை மீறி இருவரும் மணந்துகொண்டார்களா என்பதுதான் கதை.
ஐடி கலாச்சாரப் பின்னணியில் சுழலும் காதல் விஷயத்தைத் தொட்டிருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ். இன்றைய காதலர்கள் எப்படிப் பேசுவார்கள்? எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையெல்லாம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், படம் முழுவதும் அந்த ஒரே பாதையில் பயணம் செய்தால் கதைக்குள் எப்படி ஆர்வம் பிறக்கும்? ஒரு மான்டேஜ் பாடலில் வைக்க வேண்டிய காதல் உரையாடலை 30 நிமிடங்களுக்கு மேல் இழுக்க, ரசிகர்கள் நொந்துபோகிறார்கள்.
காதலர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன ஈகோ சண்டைகள், அதை மீறிப் பெருகி ஓடும் அன்பு, புரிதல் இவற்றைப் படமாக்கிய விதமும், வசனங்களும், இந்த இடங்களில் சிம்பு நயன்தாரா நடிப்பும் நன்றாக உள்ளன. சிம்பு ஆண்ட்ரியா பிரிவுக்கான காரணம், சிம்பு நயன் இடையே ஏற்படும் மோதல் ஆகியவற்றுக்கான காரணங்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. திருமணத்துக்கு ஏற்படும் தடையும் செயற்கையான திணிப்பாக இருக்கிறது. சுவாரஸ்யமான சம்பவங்களோ எதிர் பாராத திருப்பங்களோ இல்லை.
திகட்டத் திகட்டக் காதல் சொட்டும் வசனங்கள்தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. வில்லனே இல்லாத இந்தப் படத்தில் ஒரே இடத்தில் நின்று நிதானமாகச் சுழலும் கதைப்போக்கு வில்லனாகச் செயல்படுகிறது. கிளைமாக்ஸில் மணிக் கட்டை அறுத்துக்கொள்ளும் காட்சியை இன்னும் எத்தனை படங்களில் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.
சிம்பு ஆன்ட்ரியா பிரிவுக்கும் காரண மாக அப்பா சென்டிமென்ட்டை வைத்த விதமும் மகன் காதலிக்கிற விஷயம் அப்பா ஜெயப்பிரகாஷுக்குத் தெரிந்ததும், ‘இருப்பா ஒரு நிமிஷம்!’ என்று எதுவுமே பேசாமல் தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும் இடமும் பாண்டிராஜ் முத்திரைகள். தங்களுக்காக ஒருமுறை, தங்கள் பெற்றோர்களுக்காக இரண்டு முறை என்று ஒரே ஜோடி மூன்று முறை திருமணம் செய்துகொள்ளும் இடமும் காரணமும் கலகலப்பு.
சிம்பு நயன்தாரா தொடர்பான பர பரப்பைக் கூடியவரையிலும் பயன் படுத்திக்கொள்கிறார் இயக்குநர். அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் வதந்தி களையும் ஆங்காங்கே தாராளமாகத் தூவுகிறார்.
சிம்பு அலட்டிக் கொள்ளாமல் நடித் திருக்கிறார். நயன்தாரா கோபப்படும் போதெல்லாம் சிம்பு வெளிப்படுத்தும் பாவனைகள் நன்றாக உள்ளன. ஆனால், படம் முழுவதும் இப்படி ஒரு சில பாவனைகளை வைத்துக்கொண்டு ஒப்பேற்றிவிடுகிறார்.
அழகாக வசனம் பேசி நுட்பமான முக பாவனைகளில் மிரட்டும் நயன் தாராவின் நடிப்பு ரசிக்கும்படி இருக் கிறது. உரையாடல்களின்போது மாறிக் கொண்டே இருக்கும் அவரது முகபாவங் கள் அருமை. ஆன்ட்ரியா கச்சிதமான நடிப்பு. நயன்தாரா, ஆன்ட்ரியா இருவரும் திரையில் முதல் முறையாகத் தோன்றும் போது ரசிகர்களின் ஆரவாரம் காதைக் கிழிக்கிறது. இருவரின் அழகும் நடிப்பும் படத்துக்கு வசீகரம் சேர்க்கின்றன.
சிறப்புத் தோற்றத்தில் சந்தானம் வரும் காட்சிகள் கலகலப்பாக உள்ளன.
பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகூட்டுகிறது. கே.எல்.பிரவீனின் எடிட்டிங் பரவாயில்லை. குறளரசனின் இசையில் ‘காத்தாக வந்த பொண்ணு’ பாடலும் அது பாட லாக்கப்பட்ட பின்னணியும் இளைஞர் களைக் கவர்கின்றன. பின்னணி இசை தேறுகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிம்பு நயன் ஜோடியை நீண்ட இடை வெளிக்குப் பிறகு திரையில் இணைத்திருக்கும் இயக்குநர், வெறும் வசனங்களால் மட்டுமே படத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார். இது மட்டும் போதுமா?