

டார்ஸான் என்னும் கதாபாத்திரம் பிறந்து 104 ஆண்டுகளாகிவிட்டன. எழுத்தாளர் எட்கர் ரைஸ் பர்ரோஸ், 1912- ல் தனது ‘டார்ஸான் ஆப் ஏப்ஸ்’ நாவலை எழுதும்போது தனது டார்ஸான் கதாபாத்திரம் இறவாத்தன்மையுள்ள நாயகனாக உருவெடுக்கும் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார். ஆப்பிரிக்கக் காடுகளில் மனிதக் குரங்குகளால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் மனிதக் குழந்தைதான் டார்ஸான். வளர்ந்த பின்னர் நாகரிக வாழ்வுக்கு அறிமுகமாகி நாட்டுக்கு வருவதும், மீண்டும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் வளர்ந்த காட்டுக்கே திரும்புவதும்தான் டார்ஸான் கதைகளில் திரும்பத் திரும்பத் திரும்ப நடப்பவை. டார்ஸான் கதையை 25 தொடர்கதைகளாக எட்கர் ரைஸ் பர்ரோஸ் எழுதியுள்ளார். மற்ற எழுத்தாளர்களும் டார்ஸானை விதவிதமாகப் படைத்திருக்கிறார்கள். தொலைக்காட்சி, சினிமா, கிராபிக்ஸ் என டார்ஸான் எடுத்த அவதாரங்கள் பல. இந்த ஆண்டு வெளியாகவுள்ள வார்னர் பிரதர்ஸ்சின் ‘தி லெஜண்ட் ஆப் டார்ஸான்’ஹாலிவுட் படத்தின் டிரைலர் டார்ஸானின் இன்னொரு அவதாரத்தை நம் முன்னர் காண்பிக்கிறது.
ஹாரிபாட்டரின் இயக்குநரான டேவிட் ஏட்சும், ஒளிப்பதிவாளர் ஹென்றி ப்ரகாமும் ஆப்பிரிக்கக் காடுகளை பிரமாண்டமாக கண்முன் நிறுத்துகிறார்கள். வில்லன் லியோனாக நடித்திருப்பவர் ‘ஜாங்கோ அன்செய்ண்டு’படத்தில் நாயகனை மீட்பவராக அசத்திய கிறிஸ்டோபார் வால்ட்ஸ். கதையின் நாயகன் டார்ஸானாக அலெக்சாண்டர் ஸ்கேர்ஸ்கார்ட் நடித்திருக்கிறார். டார்ஸானின் அழகிய மனைவியாக மார்கோ ராபி நடித்திருக்கிறார். இவர் ‘வுல்ப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்தில் டிகாப்ரியோவின் பூனைக்கண் மனைவியாக நடித்து அசத்தியவர்.
ஆப்பிரிக்கக் காடுகளை விட்டு வெளியேறி க்ரேஸ்ட்ரோக் பிரபுவாக ஒரு சீமானின் வாழ்க்கையை, சீமாட்டி ஜேன் போர்ட்டருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் டார்ஸான். அவருக்கு காங்கோவில் வர்த்தகத் தூதராகப் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், பேராசையும் ஊழலும் கொண்ட பெல்ஜிய கேப்டனான லியோனின் பழிவாங்கும் திட்டம்தான் அதன் பின்னணி என்பதை காங்கோ வந்த பின்னர் தெரிந்துகொள்கிறான் நாயகன். தனது விலங்கு நண்பர்களுடன் லியோனின் சதியை முறியடித்துத் தனது பூர்வீக வனத்தையும் பூமியையும் டார்ஸான் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே கதை.
வரும் ஜூலையில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் குழந்தைகளுக்கும், குழந்தைகளைத் தங்களிடம் கொண்டிருக்கும் பெரியவர்களுக்கும் மனதைக் கவரும் சண்டை சாகசப் படமாக இருக்கும் என்பதை டார்ஸானின் டிரைலர் சொல்லாமல் சொல்கிறது.