

‘செம்பி’ படத்தின் டிரைலரைப் பார்த்த கமல் ஹாசன், ‘நடிப்பு ராட்சஸி’ என்று கோவை சரளாவைப் புகழ்ந்திருக்கிறார். அப்படத்தை இயக்கியிருக்கும் பிரபு சாலமன், ‘சீரியஸ்’ கதாபாத்திரம் ஒன்றில் கோவை சரளாவை நடிக்க வைத்திருக்கிறார். படம் பற்றி அவரிடம் உரையாடினோம்.
‘செம்பி’ என்ன மாதிரியான கதை?
கொஞ்சம் தத்துவார்த்தமா சொல்லணும்னா, இந்த உலகமே ஒரு பேருந்து மாதிரி. நாம எல்லாரும் அதன் பயணிகள். வாழ்க்கையில ஓர் இடத்துல ஏறி உட்கார்றோம். பக்கத்துல யாரோ ஒருத்தர் வந்து உட்கார்றாங்க. மனைவியா இருக்கலாம், பின்னால நாலஞ்சு பேர் வந்து உட்கார்றாங்க, அவங்க நண்பர்களா இருக்கலாம், உறவினர்களா இருக்கலாம்.
திடீர்னு பார்த்தா அடுத்த நிறுத்தத்துல பின்னாடி இருந்தவங்க, பக்கத்துல இருந்தவங்கன்னு எல்லாருமே இறங்கிடலாம். பயணத்தோட முடிவு அப்படித்தான். யார் முன்னால இறங்குவாங்க, பின்னால இறங்குவாங்கன்னு நமக்கு தெரியாது. அதைத் தாண்டியும் பயணம் தொடருது.
அந்தப் பேருந்தை சமூகமாக்கினா, அதுக்குள்ள எத்தனையோ விதமான மனிதர்கள். அவங்க எல்லாருக்குமே ஒரு கதை இருக்குது. அவங்க கதை என்ன? பிரச்சினை என்னங்கறதைதான் ‘செம்பி’ படத்துல சொல்றேன்.
‘கோவை' சரளாவை மொத்தமா மாற்றியிருக்கீங்களே?
இந்தக் கதைக்கு 70 வயது மூதாட்டி தேவை. அந்த கேரக்டருக்காக நிறைய தேடி அலைஞ்சேன். மனோரமா ஆச்சி மாதிரி ஒரு சிறந்த நடிகர் வேணுமேன்னு யோசிச்சபோதுதான், கோவை சரளா கண்முன்னால வந்தாங்க. ஆஹா..! இவங்களைவிடச் சிறந்த நடிகர் யார் கிடைப்பாங்கன்னு அவங்களையே நடிக்க வச்சோம்.
நகைச்சுவைதானே அவங்க அடையாளம்?
அதனால என்ன? சில படங்கள்ல அவங்க குணச்சித்திரக் கதாபாத்திரங்கள்ல மிரட்டியிருப்பாங்க. என்னன்னா, அவங்க துறுதுறுன்னு இருப்பாங்க. பேசறது, நடக்கிறதுன்னு ஒரு இடத்துல நிக்க மாட்டாங்க. அவங்களை அமைதிப்படுத்தி, மெதுவா திரும்ப வச்சு, மெதுவா நடக்கவச்சு, பேச வச்சு மாற்றியிருக்கோம். கோவை சரளாவை இதுக்கு முன்னால இப்படிப் பார்த்ததில்லைங்கற மாதிரி அவங்க காட்சிகள் இருக்கும்.
கமல் சாரோட பாராட்டு நூறு சதவிகிதம் உண்மைங்கறதை இதுல நிரூபிச்சிருக்காங்க. கோவை சரளா தவிர 25 கதாபாத்திரங்கள் படத்துக்குள்ள இருக்காங்க. எல்லாருடைய வாழ்க்கையைச் சொல்றதுதான் படம். எல்லாரையும் இணைக்கிற, ஒண்ணு சேர்க்கிற நூலா இருக்கிறது கோவை சரளா கேரக்டர். தம்பி ராமையா, பஸ் நடத்துநரா சிறப்பா நடிச்சிருக்கார்.
வழக்கமா உங்க படங்கள்ல லொக்கேஷனும் பாடல்களும் பேசப்படும். இதுல?
இதுலயும் அப்படித்தான். கொடைக்கானல்ல ‘கூகள்' அப்படிங்கற இடத்துல இருக்கிற அருவியில ஷூட் பண்ணியிருக்கோம். டிரெக்கிங் போறவங்க மட்டும்தான் அங்க போக முடியும். அதே போல் கோவை சரளா, தேன் எடுக்கிற காட்சியை, 2500 அடி ஆழத்துல ஓர் இடத்துல படமாக்கினோம். மரத்துல ஏறி படுத்துக்கிட்டு கோவை சரளா நடிச்சதெல்லாம் ரொம்ப ஆச்சரியம்! அதுவும் விஷுவலா மிரட்டும்.
ஹீரோக்களுக்காக ஏன் கதைகள் பண்றதில்லை?
என் கதைக்குத் தேவையான நடிகர்களைத்தான் நடிக்க வைக்கிறேன். அடுத்தக் கதைக்கு கமல் சார் நடிச்சா சரியா இருக்கும்னா, கண்டிப்பா அவர்கிட்ட போய் கேட்பேன். கதைதான் அதை முடிவு பண்ணுது. ஹீரோக்களோடயும் படம் பண்ணணும். கோவை சரளா மேக்கப் போட்டு வந்து நின்னதுமே ஆஹா.. அற்புதம்..! இவங்கதான் சரியான ஆள்னு தோணுச்சு. அப்படித்தான், சில நேரத்துல ஹீரோக்களைத் தேடிப் போகணும்.
‘கும்கி 2’ என்னாச்சு?
அது நடந்துகிட்டிருக்கு. மும்பையில் அதுக்கான டி.ஐ. வேலைகள் போயிட்டிருக்கு. இந்தப் படத்தை முடிச்சுட்டு, அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன். அது வேறொரு களத்துல மிரட்டுற படமா இருக்கும்.