

சுவாசப் பிரச்சினையுடன் வாழும் எட்டு வயது மகனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நாளுக்காகக் காத்திருக்கிறார் அவனுடைய அம்மா பார்வதி (நயன்தாரா). அந்த நாளும் வந்துவிட, ஆம்னி பேருந்து ஒன்றில் மகனை (ரித்விக்) அழைத்துக்கொண்டு கோவையிலிருந்து கொச்சின் நகரத்துக்குப் பயணிக்கிறார்.
பாதி வழியில் இயற்கைப் பேரிடரில் சிக்கி மண்ணுக்குள் புதைந்துவிடுகிறது பேருந்து. ஆக்ஸிஜன் இருந்தால் மட்டுமே பேருந்துக்குள் இருக்கும் மற்ற பயணிகள் உயிர்பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகிறது. இச்சமயத்தில் சிறுவன் சுவாசித்து வரும் ஆக்ஸிஜன் சிலிண்டரை குறிவைத்து சக பயணிகள் தாக்கத் தொடங்குகிறார்கள்.
அப்போது மகனைக் காக்க பார்வதி என்ன செய்தார், அனைவரும் உயிர் பிழைக்க இயற்கை கைகொடுத்ததா அல்லது கைவிட்டதா என்பது கதை.
கைப்பற்றிய போதைப்பொருளை விற்றுப் பணமாக்கிவிட துடிக்கும் ஒரு காவல் அதிகாரி, காதலனுடன் மகள் ஓடிவிடக் கூடாது என மகளைப் பின்தொடரும் ஒரு சாதிவெறி பிடித்த தந்தை, பதவிப் பல் பிடுங்கப்பட்ட ஒரு அரசியல்வாதி என்று வெவ்வேறு நோக்கங்களுடன் அந்தப் பேருந்தில் பயணிக்கும் மற்ற ஆறு பேருடைய கவனமும் சிறுவன் மீதும் அவனுடைய அம்மா மீதும் மூர்க்கம் கொண்டு திரும்பும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்.
மீட்புக்குழுவின் வியூகங்களும் மீட்புக் காட்சிகளும் கதைக்குள் நுழைந்த பிறகு இன்னும் உயிரோட்டம் கூடியிருக்க வேண்டிய படத்தில் அந்தப் பகுதி பலவீனமாக இருப்பதால் இரண்டாம் பாதியில் இடைப்பட்ட 20 நிமிடம் அயர்ச்சியைத் தருகிறது. ஆனால், நயன்தாரா, சிறுவன் ரித்விக் இடையிலான பிணைப்பும் அம்மா - பிள்ளையாக அவர்களுடைய நடிப்பும் அந்தக் குறையைக் களைந்தெறிகின்றன.
காவல் அதிகாரியாக நடித்திருக்கும் பரத் நீலகண்டனுக்கு நல்வரவு கூறலாம். மற்ற துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களில் ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
ஒரு தாயின் போராட்டம் என்பது பார்வையாளர்களுக்குப் பழகிய அனுபவம்தான். ஆனால், அதை முற்றிலும் புதிய களத்தில் நல்ல காட்சிமொழியில் கொடுத்ததற்காக அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷை பாராட்டலாம். அவருக்கு சிறந்த துணையாக ஒளிப்பதிவைத் தந்திருக்கும் தமிழ் ஏ.அழகனும் உணர்வு குன்றாத இசையை வழங்கியிருக்கும் விஷால் சந்திரசேகரும் படத்தின் முக்கியமான தூண்கள்.
ஏற்கெனவே வாழ்வா, சாவா என்கிற நெருக்கடியில் இருக்கும் முதன்மைக் கதாபாத்திரம், சற்றும் எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது நிகழும் சங்கிலித் தொடர் சம்பவங்களை, நம்பகமான காட்சிமொழியில் சித்தரித்துள்ள ‘O2’ படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.