

ஐநூறு கோடியில் படமெடுத்து, ஆயிரம் கோடியை வசூலாக அள்ளலாம் என்று தென்னிந்திய சினிமா காட்டிவிட்டது. இதைப் பார்த்த இந்திய சினிமாவின் அண்ணனான பாலிவுட்டுக்கு ரோஷம் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம். தமிழ்ப் பதிப்புக்கு ‘பிரம்மாஸ்திரம்’ என்று தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள். அயன் முகர்ஜி இயக்கியிருக்கிறார்.
இதில், பாலிவுட்டின் ‘டார்லிங் நடிகர்’ என்று கொண்டாடப்படும் ரன்பிர் கபூர், ‘சிவா’ என்கிற கதாபாத்திரத்தில் ‘சூப்பர் பவர்’ கதாநாயகனாக நடித்திருக்கிறார். கொல்கத்தாவின் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் இஷா என்கிற பெண்ணைப் பார்த்து ஈர்ப்புகொள்ளும் சிவா, அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான்.
ஒரு நாள் கங்கைக் கரையில் இஷாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, நதியில் மிதந்துசெல்லும் தீபங்களில் ஒளிரும் தீச்சுடர்கள், ஒரு நீண்ட பிழம்பாக மாறி அவனுடைய கை வழியே உடலுக்குள் செல்ல முயல்கிறது. அக்காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோகிறாள் இஷா.
ஆமாம்! அக்னி அஸ்திரமாக இருக்கிறான் சிவா. தன்னைச் சாமானிய இளைஞனாக நினைத்துகொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் தனது சக்தியை அறிந்துகொண்டு, அஸ்திரங்களின் அஸ்திரமாகிய பிரம்மாஸ்திரத்தைக் கவர்ந்து செல்ல வரும் தீய சக்திகளை எதிர்த்துப் போராடி எப்படி வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை. இஷாவாக ஆலியா பட் நடிக்க, அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.
காதலையும் தொன்ம நம்பிக்கையையும் இணைக்கும் இந்தப் படத்தை, ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரோடக் ஷன், பிரைம் ஃபோகஸ், ஸ்ரெய்ட் லைட் பிக்சர்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் பெரிய பட்ஜெட் படமாகத் தயாரித்துள்ளன. சாகசங்கள் நிறைந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருந்தாக உருவாகியிருக்கும் இப்படத்தை வாங்கித் தென்னிந்திய மொழிகளில் வெளியிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
குறுகிய காலத்தில் அதிகப் படங்களை இயக்கி வெற்றிகளைக் கொடுத்த சுசீந்திரனுடன் விஜய் ஆண்டனி இணைந்திருக்கும் படம் ‘வள்ளி மயில்’. சுசீந்திரன் ஏற்கனவே எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் கதையை ‘அழகர்சாமியின் குதிரை’ என்கிற படமாக மாற்றினார்.
இந்த இயக்குநர் - எழுத்தாளர் கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. “இது விஜய் ஆண்டனி படமாக இல்லாமல் இயக்குநர் - கதாசிரியரின் படமாக இருக்கும். தன்னுடைய பாதையிலிருந்து விலகி, ஜாலியான ஒரு கதையில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 80களில் கதை நடக்கிறது.
ஊர் ஊராகச் சென்று கோயில் திருவிழா நாடகங்களில் நடிப்பவராகக் கதாநாயகி வருகிறார். நாயகனுக்கு இணையான வேடம் கதாநாயகிக்கு. படத்தின் தலைப்பும் அவரை குறிப்பிடுவதுதான். தெலுங்குப் படவுலகி லிருந்து ஃபரியா அப்துல்லாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவர் ஒரு நவீன நாடகக் கலைஞர்.” என்கிறார் சுசீந்திரன்.