திரையில் மிளிரும் வரிகள் 14: கச்சேரி மேடையும் வெள்ளித்திரையும்

திரையில் மிளிரும் வரிகள் 14: கச்சேரி மேடையும் வெள்ளித்திரையும்
Updated on
2 min read

‘கண்ட நாள் முதலாய்’ என்ற திரைப்படத்தின் தலைப்பு அதில் இடம் பெற்ற பாடலின் முதல் வரியே. மதுவந்தி ராகத்தின் சாயலில் மெட்டமைக்கப்பட்ட இப்பாடல் கர்நாடக இசைக் கச்சேரிகளில் மிகவும் பிரபலம். அதிலும் மறைந்த தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனின் குரலில் அதைக் கேட்போர் சொக்கிப்போவார்கள்.

‘கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி; கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை' என்று முருகனின் மீது பாடப்பட்ட பாடல் பரத நாட்டியத்தில் அபிநயம் பிடிப்பதற்கும் மிகவும் ஏற்றது.

இப்படித் திரைப்படத் துறையிலிருந்து கச்சேரி மேடைக்கும் கச்சேரி மேடையிலிருந்து திரைப்படத்துக்கும் எத்தனையோ பாடல்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஏனெனில் திரைப்பட உலகத்துக்கும் கர்நாடக சங்கீத உலகத்துக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. எஸ்.வி. வெங்கட்ராமன், ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா எனப் பெரும்பாலான இசையமைப்பாளர்களும் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர்கள்.

சினிமாவின் தொடக்கத்தில் பெரும்பாலான பாடல்கள் கர்நாடக ராக மெட்டுகளிலேயே இருந்தன. ஜி.என். பாலசுப்பிரமணியம், பாபநாசம் சிவன், எம்.எம். தண்டபாணி தேசிகர், டி.வி. இரத்னம், டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. தியாகராஜ பாகவதர், மதுரை சோமு, எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி, என்.சி. வசந்தகோகிலம், பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜே. ஜேசுதாஸ் எனத் திரைப்படத் துறையில் ஈடுபட்ட கர்நாடக இசைப் பாடகர்களின் பட்டியில் நீள்கிறது.

திரைப்படப் பாடல்கள் ஒரு இசை ரசிகரை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும். இந்தக் கருத்தைத் தீவிரமாக வலியுறுத்தியவர் சென்னை சங்கீத வித்வத் சபையின் (Music Academy) சங்கீத கலாநிதி விருதை 1988-ம் ஆண்டு பெற்ற புல்லாங்குழல் கலைஞர் டி. விஸ்வநாதன். அவர் நாட்டிய மேதை டி. பாலசரஸ்வதியின் தம்பி.

விருது பெறும்போது அவர் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. “திரை இசையைப் புறக்கணிக்காதீர்கள்” என்ற கருத்தை அவர் முன்வைத்தார். சம்பிரதாயத்தை வழுவாமல் பாதுகாக்கும் அகாடமியில் திரை இசையைத் தூக்கிப் பிடித்து அவர் பேசிய பேச்சு வரவேற்பைப் பெற்றது.

“திரைப்படங்களின் வரவுக்கு முன்பாக நாடகத் துறையில் பல கர்நாடக சங்கீதப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாபநாசம் சிவனின் வரவுக்குப் பிறகு ஏராளமான கர்நாடக சங்கீதப் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்றன” என்கிறார் இசைத்துறை ஆராய்ச்சியாளர் வி. ராம்.

ஹிந்தோள ராகத்தில் அமையப் பெற்றுள்ள ‘மா இரமணன் உமா இரமணன்' என்ற பாடல் ‘சேவாசதன்' படத்துக்காக பாபநாசன் சிவனால் எழுதப்பட்டதுதான். அது போல 'மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப்பதமே' பாடல் ‘சாவித்திரி' திரைப்படத்தில்தான் முதலில் இடம்பெற்றது.

தண்டபாணி தேசிகர் நடித்த ‘நந்தனார்' திரைப்படத்தில் பெரும்பாலான பாடல்கள் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியவை. இருப்பினும் சிவன் எழுதிய ‘பிறவா வரம் தாரும் பெம்மானே’, ‘காண வேண்டாமோ இரு கண் இருக்கும்போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ' ஆகிய பாடல்கள் கச்சேரி மேடைகளை இன்றளவும் ஆக்கிரமித்துள்ளன. எளிய வரிகள், ஆனால் பக்தியில் தோய்த்தெடுக்கப்பட்ட வார்த்தைகள், பாபநாசம் சிவனுக்கு தமிழ் தியாகையர் என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தன.

இன்று கச்சேரி மேடைகளில் பாடப்படும் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களும் திரைப்படங்களில் இடம்பெற்று கச்சேரி மேடைக்கு அரங்கேறியவைதான். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘மணப்பெண்’ படத்தில் எம்.எல். வசந்தகுமாரி இப்பாடலைப் பாடினார்.

அது போல் பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற பாடல் தண்டபாணி தேசிகரால் மெட்டமைக்கப்பட்டு, பின்னர் ‘ஓர் இரவு' திரைப்படத்தில் இடம்பெற்றது. ஊத்துக்காடு வேங்கடகவியின் ‘அலைபாயுதே கண்ணா' நிறைய படங்களில் இடம்பெற்றுள்ளது.

‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் கௌரி மனோகரியில் ‘பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடலை இன்றும் கேட்டு சிலிர்க்காதவர் யார்? அதே படத்தில் ராமாலிகையில் அமைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் ‘ஒரு நாள் போதுமா' பாடலை எல்லோரும் ரசிக்கவில்லையா? அடானாவில் ஒலிக்கும் ‘யார் தருவார் இந்த அரியாசனத்தை' இன்றும் வேண்டாதவர் யார்?

தமிழர்களின் நீண்ட இசை மரபு திரைப்படத்திலும் தொடர்ந்தது. இளையராஜா அதற்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தார். காம்போதியில் தியாகராஜர் இயற்றிய ‘மரி மரி நின்னே’ பாடலை சாருமதிக்கு மாற்றும் அளவுக்கு அவருக்குத் தன் இசை மேல் நம்பிக்கை இருந்தது. அப்பாடல் பெரும் உயரத்தை எட்டிப் பிடித்தது.

தொடர்புக்கு: bagwathi@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in