திரை முற்றம்: மூழ்காத நட்பு
சமந்தாவுக்கு ’சவுத் ஏஞ்சல்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் டோலிவுட்டில். ஆனால் மலையாளம், கன்னடம் இரண்டிலும் சமந்தா இன்னும் நடிக்கவில்லை. பகத் பாசிலுடன் நடிக்க கால்ஷீட் கேட்டும் கொடுக்க முடியவில்லையாம். இதற்கிடையில் கன்னடத்திலிருந்தும் அவரது கால்ஷீட்டுக்குக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். காரணம் சமந்தா நடித்த படங்கள் கேரளம், கர்நாடகம் இரண்டிலுமே நல்ல வசூல் பார்ப்பதுதான். விக்ரம், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களுடன் நடித்துவிட்ட பிறகு அஜித்துடன் நடிக்காமல் இருந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுதித்தள்ள, தற்போது அதை உண்மையாக்கிவிடலாம் என்று களத்தில் குதித்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா. வீரம் படத்தைத் தொடந்து இவர் மீண்டும் அஜித்தை இயக்க இருக்கும் படத்தில் சமந்தாவையே நாயகியாக்கிவிடலாம் என்று அஜித்திடம் கேட்க, அவரும் ஓகே சொல்லிவிட்டராம்.
இத்தனை பிஸியாக இருக்கும் சமந்தாவை டோலிவுட்டில் இருந்து இப்போதைக்கு அனுப்ப மாட்டார்கள் போலிருக்கிறது. டோலிவுட்டில் தனக்குக் குவியும் வாய்ப்புகள் பலவற்றை சக கதாநாயகி ஒருவருக்குப் பரிந்துரைப்பதால் சமந்தாவைப் பாராட்டுகிறார்கள் அங்கே! யார் அந்த நாயகி என்று பார்த்தால் அவர் சகுனி படத்தில் கார்த்தியுடன் நடித்தாரே அந்தப் பிரணிதா. சமந்தாவுக்கும் இவருக்கும் இடையிலான நட்புப் பற்றித் தெலுங்குத் திரையுலகில் ஒரே பேச்சாக இருக்கிறது. சமந்தா ஹீரோயினாக நடித்த ‘அத்தாரின்டிக்கி தரேதி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார் பிரணிதா. அப்போது ஏற்பட்ட நட்பில் சமந்தாவும், பிரணிதாவும் நெருக்கிய தோழிகளாகிவிட்டார்கள்.
தற்போது வாய்ப்பும் இல்லாத பிரணிதாவுக்கு, சமந்தாவே இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டு நடிக்க வைத்து வருகிறாராம்.இப்படி ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக சமந்தா நடிக்கும் ‘ரபாஷா’ படத்தில் பிரணிதாதான் இரண்டாவது ஹீரோயின். இந்தப் படத்தோடு மேலும் இரு படங்களிலும் பிரணிதாவுக்கு சமந்தாவே வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். போட்டிகள் நிறைந்த சினிமாவில் இந்த ஹீரோயின்களின் அழகான நட்பைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.
