இசை ரசிகர்களை உருகவைத்த கண்ணீர்

இசை ரசிகர்களை உருகவைத்த கண்ணீர்
Updated on
3 min read

1970ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ்வரை நான்கு தலைமுறை தமிழர்களுக்கு மகிழ்ச்சி, பரவசம், பரிவு, காதல், ஏக்கம். சோகம். துயரம், வலி, வேதனை என எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்த இளையராஜாவின் இசையில் அமைந்த ஏராளமான பாடல்கள் பயன்பட்டுள்ளன. குறிப்பாக இளையராஜாவின் சோகப் பாடல்களுக்கென்றே ஒரு தனித்த முக்கியத்துவம் உண்டு. காதல் தோல்வி, நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரணம், உறவு அல்லது நட்பு முறிவு போன்ற சோகமான தருணங்களின் வலியை அசைபோடவும் ஆற்றிக்கொள்ளவும் இளையராஜாவின் இசை முக்கியப் பங்கு வகித்துள்ளது. ’ஜான்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளைதானன்றோ’ (ஆறிலிருந்து அறுபதுவரை), ’ஊரத் தெரிஞ்சுகிட்டேன்’ (படிக்காதவன்), ‘தென்பாண்டிச் சீமையிலே’ (நாயகன்), ‘உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ (அபூர்வ சகோதரர்கள்), ’சின்னத் தாயவள்’ (தளபதி), ‘என் தாயென்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட’ (அரண்மனைக் கிளி), ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’ (பாரதி), ’உன் குத்தமா என் குத்தமா’ (அழகி) என இளையராஜாவின் இசையில் அமைந்த சோகப் பாடல்கள் பலவும் கேட்கும்போதே கண்ணிர் சிந்த வைப்பவை.

இவ்வாறாகப் பல நூறு பாடல்களில் பல கோடி ரசிகர்களைக் கண்ணீர் சிந்த வைத்த இளையராஜா தன்னுடைய ஆருயிர் நண்பரும் மறைந்த பின்னணிப் பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நினைத்துப் பொதுவெளியில் கண்ணீர் சிந்தியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75ஆம் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட ‘எஸ்பிபி 75’ என்னும் சிறப்பு இசை நிகழ்ச்சியில் இந்த அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தனியார் தொலைக்காட்சியிலும் ஓடிடியிலும் வரும் ஞாயிறு (ஜூன் 19) அன்று ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமாவில் இளையராஜா தன் நெருங்கிய நண்பரான எஸ்பிபியை நினைத்துக் கண்ணீர் சிந்திக் கசிந்து உருகுவதைக் காணமுடிகிறது.

இணைபிரியா நண்பர்கள்

இந்திய சினிமாவில் தன்னிகரற்ற பல சாதனைகள் நிகழ்த்திய, தேசத்தின் கலைப் பெருமிதங்களான இளையராஜாவும் எஸ்பிபியும் திரைத் துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே நண்பர்கள், எஸ்பிபியின் வருகை முதலில் நிகழ்ந்தது. ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமான பிறகு இளையராஜாவும் எஸ்பிபியும் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களைப் படைத்தனர். இளையராஜாவின் இசையும் எஸ்பிபியின் குரலும் 1980களில் திரை இசையை ஆட்சி செய்தன என்று சொன்னால் மிகையாகாது. பிற்காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவது வெகுவாகக் குறைந்தது என்றாலும் முற்றிலும் நின்றுபோகவில்லை. இளையராஜா இசையமைப்பில் இன்னும் வெளியவராத ‘தமிழரசன்’ என்னும் திரைப்படத்தில் எஸ்பிபி ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பும் எஸ்பிபி இறக்கும்வரை தொடர்ந்தது. இடையில் சில பிணக்குகள், மனக்கசப்புகள் தோன்றினாலும் அவை அந்த இரு மேதைகளுக்கிடையிலான நட்பு என்னும் பரிதியின் முன் பனித்துளிகளைப் போல் அகன்றுவிட்டன.

பெரு வியப்பேற்படுத்தும் நட்பு

இளையராஜாவும் எஸ்பிபியும் எண்ணற்ற இசைக் கச்சேரி மேடைகளில் ஒன்றாகத் தோன்றி உலகெங்கும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள். இளையராஜா உடனிருந்த, இல்லாத பல கச்சேரி மேடைகளில் வாய்ப்பு கிடைக்கும்போதேல்லாம் இளையராஜாவின் இசைத் திறனை வியந்து பாராட்டிப் பேசுவார் எஸ்பிபி. பிற்காலத்தில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான இளைஞர்களுக்கான இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றார் எஸ்பிபி. அவற்றில் தான் பாடிய பாடல்களைச் சிறுவர்கள் பாடுவதைக் கேட்ட பின் அந்தப் பாடல்களைத் தான் பாடிய விதத்தைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் இளையராஜா அவற்றுக்கு இசையமைத்த விதத்தையும் அந்தப் பாடல்களில் பொதிந்துள்ள இசை நுணுக்கங்களையும் விவரித்துத் தன் நண்பனின் தன்னிகரற்ற இசை மேதமையைப் பெருமிதத்துடன் சிலாகிப்பார் எஸ்பிபி. இவற்றையெல்லாம் கேட்பவர்களுக்கு இளையராஜாவின் மீது மட்டுமல்ல தன் நண்பனை ஒருவர் இவ்வளவு மனதாரப் புகழ முடியுமா என்று எஸ்பிபி மீதும் எஸ்பிபி-இளையராஜா நட்பின் மீதும் பெரு வியப்பு ஏற்படும்.

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் எஸ்பிபி சிகிச்சை பெற்றுவந்தபோது இளையராஜா வெளியிட்ட ”சீக்கிரம் எழுந்து வா பாலு” என்னும் காணொளிச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தக் காணொளியைப் பார்த்து அதிலிருந்த இளையராஜாவைத் தொட்டு எஸ்பிபி முத்தமிட்ட காட்சி எஸ்பிபியின் மறைவுக்குப் பின் வெளியாகி எல்லோருக்கும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது. எஸ்பிபியின் மறைவுக்குப் பின் இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தியும் மிக உருக்கமாக இருந்தது.


அரிதிலும் அரிதான கண்ணீர்

இளையராஜா மட்டுமல்லாமல் அவருக்குப் பிறகு திரையிசையில் பல சாதனைகளைப் படைத்த இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், தேவா, எஸ்பிபி பாடிய பல நூறு பாடல்களை எழுதிய பாடலாசிரியர் வரைமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எஸ்பிபியின் சிறப்புகளையும் அவருடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருப்பதாக ப்ரோமாக்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இளையராஜா மட்டுமே மேடையில் பேசும்போதும் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதும் கண்ணீர் சிந்துவதைக் காண முடிகிறது.

1979இல் வெளியான ‘பகலில் ஓர் இரவு’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ்பிபி பாடிய ‘இளமை எனும் பூங்காற்று’ என்னும் பாடலில் ’ஒரே வீணை’ என்று உச்ச ஸ்தாயியில் எஸ்பிபியால் பாடப்பட்ட வரியை இந்த மேடையில் இளையராஜா பாடும்போதே அவருடைய கண்கள் குளமாகியிருக்கின்றன. “அவன்ல நாந்தான் இருக்கேன்’ என்று எஸ்பிபியைப் பற்றிக் கூறுகிறார். மேலும் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதும் கண்களிலிருந்து வழியும் நீரைத் துடைத்துக்கொள்கிறார்.

பொதுவாக சபை நாகரிகம் பற்றியெல்லாம் கவலைப்பாடமல் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பவராக அறியப்பட்டுபவர் இளையராஜா. பொது இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தியதால் பலமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டவருக்கிறார். ஆனால் அவர் கண்ணிர் சிந்தி இதுவரை யாரும் பார்த்ததில்லை. அதுவும் இன்றைய 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் தலைமுறையினர் இளையராஜாவின் கண்ணீரைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் தன்னுடைய ஆருயிர் நண்பன் மரணத்தின்போதுகூட உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்திக்கொண்ட இளையராஜா, அவருடைய 75ஆம் பிறந்தநாளை ஒட்டிய விழா மேடையில் நண்பனை நினைவுகூரும்போது கண்ணீர் சிந்துவதைக் கட்டுப்படுத்தவில்லை. இந்தக் காணொளியைப் பார்த்த இசை ரசிகர்களுக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதைத் தவிர்க்க முடியாது. யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த ப்ரோமாவின் கமெண்டு செக்‌ஷனிலேயே பலர் இளையராஜாவின் கண்ணீர் தங்களுக்கும் கண்ணீர் வர வைத்துவிட்டதாகப் பதிவுசெய்துள்ளனர்.

தான் இசையமைத்த பாடல்களால் பல நூறு முறை இசை ரசிகர்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ள இளையராஜா முதல் முறையாகத் தன் கண்ணீரால் இசை ரசிகர்களின் கண்களை நனைத்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in