

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி, தமிழ் சினிமாவுக்கு, குறிப்பாக உச்ச நட்சத்திரங்களுக்கு சில முக்கியமான பாடங்களையும் வழங்கியுள்ளது.
தமிழ்ப் பார்வையாளர்கள் ‘வெரைட்டி’யை எதிர்பார்ப்பவர்கள். இதை உணர்ந்து, பல வகை சிற்றுண்டி உணவுகளை ஒரே தட்டில் வைத்துக்கொடுக்கும் ‘மினி டிஃபன்’ என்னும் சிற்றுண்டி உணவு, 1990களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு இன்றுவரை பெரும்பாலான உணவகங்களில் மவுசு குறையவில்லை.
ஆனால், சினிமாவில் மட்டும் ஒற்றை நட்சத்திரத்தின் ஆதிக்கத்தையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று தவறாக நம்பப்பட்டுவந்தது. நட்சத்திர நடிகர்களின் தன்முனைப்புக்குத் தீனி போடுவதற்காகவே கட்டமைத்து வளர்க்கப்பட்ட பிம்பம் இது. ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்த தரமான படங்களை, தமிழ்ப் பார்வையாளர்கள் என்றுமே வரவேற்கத் தயங்கியதில்லை.
‘விக்ர’மின் இவ்வளவு பெரிய வெற்றிக்கான முதன்மையான காரணங்களில் ஒன்று, அது அசலான ‘மல்ட்டி ஸ்டாரர்’ படமாக இருப்பதே. கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகிய மூன்று பேருக்கும் இந்தப் படத்தில் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கெளரவத் தோற்றம் என்றாலும் நடிகர் சூர்யா நடித்திருந்த இறுதிக் காட்சியும் ரசிகர்களைப் பெரும் ஆரவாரத்துடன் திரையரங்கைவிட்டு வெளியேற வழிவகுத்திருக்கிறது.
இனி வரும் காலங்களில் பிற நட்சத்திர நடிகர்கள், தமது சந்தேகங்களையும் பதற்றங்களையும் களைந்து ‘மல்ட்டி ஸ்டாரர்’ படங்களில் நடிக்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் விருப்பம் என்பதை இந்தப் படத்தின் வெற்றி உணர்த்தியிருக்கிறது.
வரவேற்கத்தக்க மாற்றம்
கமல் நடிக்கும் திரைப்படங்களில் அவரே அதிக ‘திரைநேர’த்தை எடுத்துக்கொள்வார் என்பது அவர் மீதான விமர்சனமாகவே முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால் இந்தப் படத்தின் முதல் பாதியில் கமலுக்குக் கிட்டத்தட்ட வசனமே இல்லை. அதோடு அவருக்கான திரைநேரம் 20 நிமிடங்கள் இருக்கலாம். முதல் பாதியை ஃபகத் ஃபாசிலும் விஜய் சேதுபதியுமே ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் கமலுக்கான காட்சிகள் அதிகமாக உள்ளன. நிச்சயமாக இது ஒரு புதுமையான வரவேற்கத்தக்க முயற்சி. நட்சத்திர நடிகர்கள், தமது படங்களில் தாமே திரையை நிறைத்திருக்க வேண்டும் என்பதில்லை. பிறருக்கு வழிவிட்டுக் கதைக்குத் தன்னுடைய பங்களிப்பைச் சரியாக அளிப்பதும் வரவேற்கத்தக்க மாற்றமே.
இயக்குநர்களின் சுதந்திரம்
பொதுவாகப் பெரிய நட்சத்திரங் களின் படங்களில், ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவருடைய நட்சத்திரப் பிம்பத்தை மனத்தில் வைத்தும் படத்துக்கு முதலீடு செய்கிறவர்களின் அழுத்தம் காரணமாகவும் இளம் இயக்குநர்கள் பல விஷயங்களை வலிந்து திணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், திறமையான இளம் இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் கதை, திரைக்கதையின் தேவைகளுக்கு நட்சத்திரங்கள் தம்மை ஒப்புக்கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை ‘விக்ரம்’ உணர்த்தியுள்ளது.
இது கமலின் போட்டியாளரான ரஜினிகாந்துக்கும் பொருந்தும். கடந்த பத்தாண்டுகளில் அவர் பா.இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுடன் பணியாற்றினாலும் அந்தப் படங்கள் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கு வலுச்சேர்க்கும் காட்சிகளை அதிகமாகக் கொண்டிருந்தன. இவற்றில், தன்னைத் தீவிர ரஜினி ரசிகராக முன்வைத்துக்கொள்ளும் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படம், 1990களின் ரஜினியை நினைவுபடுத்தியதால் வெற்றிபெற்றது.
ஆனால் நட்சத்திர நடிகரின் பிம்பத்தை மட்டும் நம்பி எத்தனை படங்களை வெற்றிகரமாகக் கொடுத்துவிட முடியும் என்பது கேள்விக்குறியே. லோகேஷும் தீவிர கமல் ரசிகர்தான். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் கமலின் பழைய படங்களை நினைவுபடுத்தி ரசிகர்களை மகிழ்விக்கும் தருணங்கள் கதைக்குள் அழகாகப் பொருத்தப்பட்டுள்ளன. கதைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏஜெண்ட் டீனா, குழந்தை விக்ரம் என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. அதனாலேயே அண்மைக் காலத்தில் வெற்றிபெற்ற வேறெந்த திரைப்படத்தின் வெற்றியைவிடவும் 'வெரைட்டி'யை விரும்பும் பார்வையாளர்களால் ‘விக்ரம்’ ஒரு பெருங்கொண்டாட்டமாக வரவேற்கப்பட்டுள்ளது.
இப்படி ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பிற நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், கமல்ஹாசனும் ‘விக்ரம்’ படம் மூலம் பல பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
வரைகலை: ஜி.சுரேஷ்