

தமிழ்நாட்டின் தன்னிகரற்ற குரலுக்குச் சொந்தக்காரர். சிறந்த இசையமைப்பாளர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். இந்தியாவின் உயரிய குடிமகன்களுக்கான விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஸன், பத்ம விபூஸன் என எல்லாவற்றையும் பெற்றவர். இந்தப் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்தான் எஸ்.பி.பி. என அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
எஸ்.பி.பி. பொறியியல் பட்டம் படித்து பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்பட்டார். ஆனால், உடல் நலக் குறைவால் அதைப் பாதியிலேயே கைவிட வேண்டிய சூழல். கல்லூரிக் காலகட்டத்தில் அவரது விருப்பமாக இருந்த இசையையே பிறகு தன் வாழ்க்கையாகக் கொண்டார். சென்னையில் இரு இசைக் குழுவை நடத்தினார். இளையராஜாவும் அவரது சகோதரர்களான கங்கை அமரனும் பாஸ்கரும் அதில் வாத்தியக் கலைஞர்கள். இப்படிப் பாடிப் பழகியவர்கள் அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரை இசையை ஆட்சிசெய்தார்கள்.
1960களிலேயே தெலுங்கிலும் கன்னடத்திலும் எஸ்.பி.பி.யின் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகம் அந்த இனிய குரலைக் கேட்கச் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவந்தது. ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் படத்துக்கு முன்பே தமிழில் ஒரு டூயட் பாடல் பாடியிருந்தாலும் எஸ்.பி.பி. என்றவுடன் தமிழ் மக்கள் மனத்தில் வரும் முதல் பாடல் 'இயற்கை என்னும் இளைய கன்னி'தான்.
இதற்குப் பிறகு எம்ஜிஆருக்குப் பாடிய பாடலால் ’ ஆயிரம் நிலவே வா...’ எஸ்பிபியின் குரல் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது. தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களைப் பாடினார். ஆனால், அவரது ராஜாபட்டை, இளையராஜா என்ற அவரது நண்பர் வருகைக்குப் பின்தான் தொடங்கியது எனலாம். ’நான் பேச வந்தேன்’ என்னும் பாடல் மூலம்தான் இந்தக் கூட்டணி கைகோக்கிறது. தொடந்து பல நூறு படங்களில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தனர்.
80களில் எஸ்பிபி தவிர்க்க முடியாத பாடராக இருந்தார். அவரால் பாட முடியாத நிலைக்கு வாய்ப்புகள் குவிந்தனர். ‘பருவமே புதிய பாடல் பாடு’ என மிக மென்மையான பாடல்கள் பாடிக்கொண்டே இன்னொரு பக்கம். அண்ணாத்த ஆடுறார் ஒத்துக்கோ போன்ற வேகம் எடுக்கும் பாடல்களையும் பாடினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல அறிமுகப் பாடல்களைப் பாடிய பெருமையும் எஸ்பிபிக்கு உண்டு. சங்கீதம் முறையாகப் படிக்காதவர் எஸ்பிபி. ஆனால், பாலமுரளி கிருஷ்ணா போன்ற இசை ஜாம்பவங்களைத் தன் பாடல் திறமையால் வியக்க வைத்தவர். சங்கராபரணம் என்னும் இசை தொடர்பான படத்தில் கர்னாநாடக சங்கீதம் படித்தவர்களே வியக்கும் அளவுக்குக் கீர்த்தனைகளைப் பாடினார் எஸ்பிபி. தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய முழுமைக்கும் பிரபலமான சாஸ்திரிய சங்கீதத்துக்கான முன்னோடியாக அந்தப் பாடல் இருக்கின்றன. இந்தப் படப் பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். இந்தியிலும் அவர் கிளாசிக் பாடல்களைக் கொடுத்துள்ளார். ‘எக் துஜே கேலியே’ என்பது ஒரு தலைமுறைத் தமிழரின் அறிந்த இந்திப் பாடலாக இருந்தது.
90களில் ஏ.ஆர்.ரகுமானின் வருகைக்குப் பிறகு அவரது இசையில் பல கிளாசிக் பாடல்களைப் பாடியுள்ளார். ரகுமானின் இசையில் எஸ்பிபி பாடிய பாடல் மெலடி இசைக்கு உதாரணமாக இருக்கின்றன. ரகுமான் இசையில் மின்சாரக் கனவு படத்தில் பாடிய ‘தங்கத் தாமரை’ பாடலுக்காக தேசிய் விருதும் பெற்றார். இந்தக் கால இசையமைப்பளர்கள் ஹரீஷ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், அனிருத், இமான் போன்ற வர்களுடன் இணைந்து பாடியுள்ளார் எஸ்பிபி.
1960களில் பாடிய அதே ஆற்றலுடன் 2020லும் பாடியிருப்பார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் தமிழ் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தார் எஸ்பிபி. அவர் பாடல் ஒலிக்காத நாளை தமிழர்களுக்கு இருந்திருக்காது. அவரது பிறந்த நாளான இன்றும் சங்கீத மேகமாகப் பொழிந்துகொண்டிருக்கிறார் எஸ்பி பாலசுப்பிரமணியன்.