

மக்கள் மத்தியில் பிரபலமான ‘சரவணா ஸ்டோர்ஸ்’ வணிக நிறுவனங்களின் உரிமையாளர் சரவணன் அருள்.
அவர் தற்போது ‘தி லெஜன்ட்’ என்கிற தமிழ்ப் படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார். இவருடைய நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்களைத் தொடர்ந்து இயக்கி வந்த ஜேடி - ஜெர்ரி படத்தை இயக்கியிருக்கிறார்கள். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌதாலா என்கிற பாலிவுட் நடிகர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில், மூத்த நட்சத்திரங்கள் லதா, விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன், படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கதாநாயகிகள் தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ட்ரைலர் வெளியீட்டுக்கு முன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சரவணன் அருள், “பெரும் பொருட்செலவில் ஒரு பான் இந்திய படமாக ‘தி லெஜன்ட்’ உருவாகியிருக்கிறது. இதுவொரு மாஸ் ஆக் ஷன், காதல், காமெடி, ரொமான்ஸ் கலந்த முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம். சினிமாத் துறையில் என்னுடைய ரோல் மாடல் ரஜினி சாரும், விஜய் சாரும்தான்” என்றார்.
இதுவும் ஆட்டோகிராஃப்தான்!
‘மாலைநேர மல்லிப்பூ’ என்கிற படத்தின் மூலம் 21 வயதே ஆன சஞ்சய் நாராயண் இயக்குநராக அறிமுகமாகிறார். “இளம் வயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் உண்மைக் கதையை எடுத்துக்கொண்டேன். அதனுடன் இன்னும் பல பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் சேர்த்திருக்கிறேன். ஒருவரின் சுயசரிதைபோல் படத்தை இயக்கியிருக்கிறேன்.” என்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் சஞ்சய். முதன்மைக் கதாபாத்திரத்தில் வினித்ரா மேனன் நடித்துள்ளார். ஓடிடி தளத்துக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை, ‘ஆன் எவ்ரி பிரேம் மேட்டர்ஸ்’ என்கிற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ளது.
மீண்டும் இணைந்த கூட்டணி!
ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் எதிரும் புதிருமாக நடித்து கடந்த மாதம் வெளியான ‘செல்ஃபி’ வெற்றிபெற்றது. தற்போது இக்கூட்டணி '13' என்கிற புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது. மெட்ராஸ் ஸ்டுடியோஸ் எஸ்.நந்தகோபால், அனுபிரபாகர் பிலிம்ஸுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஒரு புலன்விசாரணை திகில் படமாக உருவாகிவரும் இதை, கே.விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.