

`மூடர் கூடம்’ மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராக அறியப்பட்டவர் நவீன். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், 'அக்னிச் சிறகுகள்’. பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் தன்னுடைய அடுத்தப் பட வேலைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் நவீனுடன் பேசியதிலிருந்து ஒரு பகுதி.
‘அக்னிச் சிறகுகள்’ என்கிற தலைப்பு ஏன்?
இது கவித்துவமான தலைப்பு. சிறகுகள் அப்படிங்கிறதே சுகமான வார்த்தை. அதுகூட அக்னி சேரும்போது இன்னும் வேற மாதிரி இருந்தது. இது அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தோட தலைப்பும்கூட. இந்தப் படத்துல கவிதைத்தனமான கதையும் அனல் பறக்கிற ஆக்ஷனும் இருக்கறதால, இந்தத் தலைப்புப் பொருத்தமா இருந்துச்சு. படம் பார்த்தா அது புரியும்.
விஜய் ஆண்டனியை இந்தக் கதைக்கு எப்படித் தேர்வு பண்ணுனீங்க?
எனக்கொரு கதை பண்ணுங்கன்னு விஜய் ஆண்டனி சொன்னார். ‘சரி பண்ணலாம். ஆனா, நீங்க தயாரிக்க வேண்டாம், தயாரிப்பாளார் நான் சொல்றேன், நீங்க இசை அமைக்கவும் வேண்டாம்; நடிகரா மட்டும் வாங்க’ன்னு சொன்னேன். ‘சரி’ன்னார். அப்படி உருவானதுதான் இந்தக் கதை. அவர் இதுவரை நடிச்ச படங்கள்ல இருந்து உருவான இமேஜ், அவரோட கெட்டப் எல்லாத்தையும் மாற்றி ‘சீனு’ங்கற கேரக்டருக்குள்ள கொண்டு வந்தோம். படப்பிடிப்பு தொடங்கியதுமே, நட்புரீதியா ரொம்ப நெருங்கிட்டோம். தனிப்பட்ட முறையிலயே எனக்கொரு சகோதரர் மாதிரி ஆயிட்டார்.
அருண் விஜய்யை முதல்லயே முடிவு பண்ணிட்டீங்களா?
இல்ல. கதையில வர்ற ‘ரஞ்சித்’ கேரக்டரை எங்க போய் தேடறதுன்னு நினைச்சுட்டிருந்தபோதுதான், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, அருண் விஜய்க்கு இந்த கேரக்டர் சூப்பரா பொருந்தும்னு சொன்னார். அவர் இந்த கேரக்டருக்குள்ள வந்த பிறகுதான், ரஞ்சித் கேரக்டருக்கான முக்கியத்துவமே எனக்குத் தெரிஞ்சது. ‘இவ்வளவு வருஷமா நான் சினிமாவுல இருக்கேன். எனக்கு நீ என்ன நடிச்சுக் காட்டறது?’ அப்படிங்கற எந்த எண்ணமும் இல்லாம, தனியா உட்கார்ந்து ஒத்திகை பார்த்து, கேரக்டரோட ஒன்றிப்போவார். இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார்ங்கறதை தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சுகிட்டு அதைப் பூர்த்திபண்ணும் நடிகர். ஆக்ஷன் காட்சிகள்ல எனக்குத் தெரிஞ்சு அவரை மாதிரி பிரமாதமா பண்ணக்கூடிய நடிகர் இருக்காங்களான்னு தெரியல. அவரோட பிட்னஸ், அதுக்கான உழைப்பு, எல்லாமே மிரட்டல்தான்.
இரண்டு நாயகர்கள். கதையில் யாருக்கு முக்கியத்துவம்? அதேபோல், ‘சீனு’, ‘விஜி’ங்கற கதாபாத்திரப் பெயர்கள், இந்தப் படம் ‘மூன்றாம் பிறை’யின் நவீன வடிவம்னு வேற சொல்லியிருக்கீங்க?
எல்லோருக்குமே முக்கியத்துவம் இருக்கு. சின்ன கேரக்டரா இருந்தாக்கூட கதையில அதுக்கான தேவை இருக்கும். ‘சீனு’வா வர்ற விஜய் ஆண்டனி, ரஞ்சித்தா வர்ற அருண் விஜய், ‘விஜி’யா வர்ற அக்ஷரா ஹாசன், இவங்க மூணு பேரைச் சுற்றிதான் கதை போகும். கதைக்கும் கேரக்டர் பெயர்களுக்கும் தொடர்பு இருக்கு. இந்தக் கதையில காதல் இல்லை. அக்ஷரா ஹாசன், யாரையும் காதலிக்கிறவங்களா வரலை. அவங்களுக்கும் விஜய் ஆண்டனிக்குமான காட்சிகள் மிரட்டலா இருக்கும். ‘நவீன மூன்றாம் பிறை’ங்கிற டோன்ல சொன்னது உண்மைதான். ட்ரைலர்ல அதுக்கான விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க.
‘டீசர்’ல ஆக்ஷன் காட்சிகள் அதிரடியா மிரட்டுதே!
ஆமா. கஜகஸ்தான்ல ஒரு குதிரை சேஸிங் காட்சி எடுத்தோம். நாங்க ஒரு குதிரையைத் தேர்வுபண்ணி அருண் விஜய்யை அதுல ஏறச் சொன்னோம். அவர், ‘ஸ்டாலின்’ அப்படிங்கற கரடுமுரடான ஒரு முரட்டுக் குதிரையைக் காட்டி ‘அதுதான் வேணும்’னு கேட்டார். பயிற்சியாளர் ‘அதைக் கட்டுப்படுத்தறது கஷ்டம்; ரிஸ்க் வேண்டாம்’னு சொன்னார். அருண் விஜய் கேட்கல. அவருக்குக் குதிரையேற்றம் தெரியும்னு எங்களுக்குத் தெரியாது. பிறகு அந்தக் குதிரையில ஏறி அவர் பறந்த விஷயம் வியப்புதான். அவர் இல்லைனா அந்தக் காட்சியை பண்ணியிருக்கவே முடியாது.
வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குநர்களோட பணியாற்றிய அனுபவம்?
இரண்டாம் பாதியில ஆக்ஷன் அதிகமா இருக்கும். இதுவரை ரசிகர்கள் பார்க்காத விஷயங்களைக் காட்டலாம்னு நினைச்சோம். அதுக்காக, ரஷ்யாவைச் சேர்ந்த, ஹாலிவுட் சண்டை இயக்குநர் விக்டர் இவானோவ்வைச் சந்திச்சோம். ஆஸ்கர் விருது மாதிரி, சண்டை இயக்குநர்களுக்குன்னு ‘ஸ்டாரஸ்’ என்கிற விருது இருக்கு. அந்த விருதை வாங்கியவர் விக்டர். அவரை இந்தி சினிமாவுக்கு கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனா, விக்டர் ஒத்துக்கல. நான் மாஸ்கோவுக்குப் போய், அவரைச் சந்திச்சேன். நான் சொன்ன விஷயம் பிடிச்சிருக்குன்னு சொல்லி பண்றேன்னு சம்மதிச்சார். அவரைப் போல கஜகஸ்தானைச் சேர்ந்த ஜைதர்பெக் குங்குஷினோவ், குதிரை சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கார். கார் சேஸ் காட்சிகளை ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டெரெகோவ் பண்ணினார். இவங்களோட நம்மூரைச் சேர்ந்த மகேஷ் மேத்யூவும் இருக்கார். அவருக்கு இதுதான் முதல் படம்.
இந்தி நடிகை ராய்மா சென்?
முக்கியமான கதாபாத்திரம் பண்ணி இருக்காங்க. இந்தப் படம் மூலமா அவங்களைத் தமிழுக்கு அழைச்சுட்டு வந்திருக்கோம். கொல்கத்தாவில் நடத்தியப் படப்பிடிப்பை அவங்க இல்லாம பண்ணியிருக்கவே முடியாது. இந்தி, வங்காள மொழியில முக்கியமான நடிகையாக இருந்தாலும் ரொம்ப எளிமையா நடந்துக்கிட்டாங்க.