

கேரள அரசின் திரைத் துறை விருதுகளில், சிறந்த திருநர் நடிகருக்கான விருதுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நேஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திருநர் பிரிவில், முதல் விருதை வாங்கியவர் என்ற பெருமையையும் நேஹா பெறுகிறார். அண்மையில் ஓடிடி தளத்தில் அபிஜித் இயக்கத்தில் வெளியான `அந்தரம்' மலையாளப் படத்துக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சில குறும்படங்கள், இணையத் தொடர்களிலும் நடித்திருக்கிறார் நேஹா. இவர் நடித்த `மனம்' என்னும் குறும்படம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.
`அந்தரம்' மலையாளப் படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது, அதில் அவரது கதாபாத்திரத்தின் தன்மை ஆகியவற்றைக் குறித்து நேஹா பகிர்ந்துகொண்டார்: “அபிஜித் என்னுடைய முகநூல் நண்பர். நான் நடித்திருக்கும் குறும்படங்கள் சிலவற்றையும் அவர் பார்த்திருக்கிறார். எர்ணாகுளத்தில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு அபிஜித்தும் வந்திருந்தார். அப்போது, ‘‘அந்தரம்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள். உங்களுக்கு நடிக்க விருப்பமா?” என்று கேட்டார். எனக்கு என்னுடைய நிறம், தோற்றம் குறித்துத் தாழ்வு மனப்பான்மை அதிகம்.
அத்துடன் மலையாளம் சரளமாகப் பேசவும் தெரியாது. நான் அவரிடம் என்னுடைய தயக்கங்களைத் தெரிவித்தேன். அவர், ‘அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள். மேலும் இந்தக் கதாபாத்திரம் அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பதல்ல; நடிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது. மலையாள வசன உச்சரிப்பு எல்லாம் நாங்கள் சொல்லித் தருகிறோம்’ எனச் சொல்லி நடிப்பதற்கு என்னைச் சம்மதிக்க வைத்தார். இப்படித்தான் இந்த வாய்ப்பு அமைந்தது.
கோழிக்கோடில் அவரது வீட்டிலேயே 25 நாள்கள் தங்கியிருந்து, படப்பிடிப்புக்குச் சென்று நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 18 வயதில் குடும்பத்தினரை இழந்த எனக்கு அவருடைய குழந்தைகள், கூட நடித்த நடிகர்கள் ஆகியோர் மூலம் பெரிய குடும்பம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
பாலியல் தொழிலாளி ஒருவருக்கு, ஒரு குடும்பம் கிடைக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண் குழந்தைக்குத் தாயாகவும் அவள் ஆகிறாள். தனி மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் அவளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. ஒரு திருநங்கைதான் இந்தக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் என்றாலும் எந்த விதமான தயக்கமும் காட்டாமல் எனக்கு இணையாக நடித்தார் நடிகர் கண்ணன். எனக்கு மகளாக நக் ஷத்ரா மனோஜ் நடித்தார்.
இந்தியத் திரைப்படங்களில் மலிவான நகைச்சுவைக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலுமே திருநங்கைகளைப் பயன்படுத்திய காலம் போய்விட்டது. மதிப்பான, உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் திருநங்கைகளால் நடிக்க முடியும் என்பதை நான் நிரூபித்திருக்கிறேன். அதன் மூலம் ஒரு புதிய கதவைத் திறந்து வைத்திருக்கிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் இந்தத் தருணத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை மொத்த திருநங்கை சமூகத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.