

இன்று இந்தியாவில் ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ திரைப்படம் வெளியாகிறது. உலகெங்கும் புகழ்பெற்ற மார்வெல் காமிக்ஸின் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் இதில் மோதுகின்றனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஸ்பைடர்மேன், ப்ளாக் விடோ, ஹாக் ஐ, ஆண்ட் மேன், ஃபால்கன், ப்ளாக் பான்த்தர், விஷன் மற்றும் பல சூப்பர்ஹீரோக்கள் இதில் இடம்பெறுகின்றனர். ‘அவெஞ்சர்ஸ்’ என்ற பொதுவான பெயரில் உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் இவர்களில் பலரையும் உருவாக்கிய பிதாமகனைப் பற்றித்தான் இந்த வாரக் கட்டுரை.
ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்ற மனிதரின் பிறப்பிலிருந்து இந்த அவெஞ்சர்ஸின் கதை தொடங்குகிறது. 1922-ல் நியூயார்க்கில் பிறந்த லீபர், இன்று 93 வயதில் உலகம் முழுக்கப் புகழ் பெற்று விளங்கும் நபர். காமிக்ஸ் பிதாமகன் என்று அழைக்கப்படும் இவரது இப்போதைய புகழ்பெற்ற பெயர் ஸ்டான் லீ.
பள்ளியை முடித்த பதினாறரை வயது ஸ்டான் லீ, ‘டைம்லி காமிக்ஸ்’ என்ற அலுவலகத்தில், ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தான். அக்காலத்தில் 1939-ல் காமிக்ஸ் வரையும் ஆர்டிஸ்ட்டுகள், இங்க் புட்டிகளில் பேனாக்களை அவ்வப்போது தோய்த்தே படங்கள் வரைவது வழக்கம். அந்த இங்க் புட்டிகளை நிரப்புவது இளைஞன் ஸ்டான் லீயின் பிரதான வேலையாக இருந்தது. கூடவே, ஆர்டிஸ்ட்டுகளுக்கு உணவு வாங்கி வருவது, அவர்களது பென்ஸில் ஆர்ட்வொர்க்கை முடிந்துவிட்ட பிரதிகளிலிருந்து அழிப்பது, அவ்வப்போது ப்ரூஃப் பார்ப்பது ஆகியவையும் அவனது வேலைகளாக இருந்தன.
19 வயதில் முதல் கதை
‘Filler’ என்ற பதம், காமிக்ஸ் உலகில் வெகு சாதாரணமாக அடிபடும் ஒன்று. அதாவது, குறிப்பிட்ட ஆர்டிஸ்டோ அல்லது கதை எழுதுபவரோ, வேலையை முடித்த பின்னர், சில சமயம், காமிக்ஸின் ஓரிரு பக்கங்களோ அல்லது அதற்கு மேலோ, பக்கங்களை நிரப்புவதற்கு மேலும் மெடீரியல் தேவைப்படும். அப்போது யாரையாவது அழைத்து அந்தப் பக்கங்களை நிரப்பச் சொல்வது வழக்கம். அப்படி ஒரு வாய்ப்பு, ஸ்டான் லீக்கு, அவரது 19-வது வயதில் கிடைத்தது. அவரது துறுதுறுப்பைப் பார்த்த நிர்வாகிகள், ‘Captain America Foils the Traitor’s Revenge‘ என்ற சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அவருக்கு அளித்தனர். இந்தக் கதை, மே மாதம் 1941-ல், கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் கதை # 3 -ஆக வெளிவந்த காமிக்ஸில் இருக்கிறது. கிடைத்த மிகச் சிறு வாய்ப்பை அட்டகாசமாக பயன்படுத்திக்கொண்டார் லீ. எப்படியென்றால், பின்னாளில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தின் மிக முக்கிய மூவ் தனது கேடயத்தை எதிரிகளை நோக்கி வீசி, அது அவர்களைத் தாக்கிய பின்னர் திரும்ப இவரிடமே வந்து சேர்வது ஸ்டான் லீயாலேயே உருவாக்கப்பட்டது, அவரது சிறிய ஃபில்லர் கதையில். அந்த மூவ், பல ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது.
இதன்பின் வெகுசீக்கிரமே, அடுத்த மூன்றே மாதங்களில், பிரதான காமிக்ஸ் உலகில் நுழைந்தார் லீ. ‘டெஸ்ட்ராயர்’(Destroyer) என்ற கதாபாத்திரத்தை 1941 ஆகஸ்டில் உருவாக்கினார். அதே மாதத்தில், ‘ஜாக் ஃப்ராஸ்ட்’ (Jack Frost) மற்றும் ‘ஃபாதர் டைம்’ (Father Time) ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் படைத்து, காமிக்ஸ் உலகில் நடமாட விட்டார் லீ.
இளவயது எடிட்டர்
ஸ்டான் லீ என்ற மனிதனை, காமிக்ஸ் ரசிகர்கள் புரிந்துகொண்ட காலகட்டம் உருவானது அப்போதுதான். அதே வருடத்தில் (1941), லீயின் வேகத்தைப் பார்த்து பிரமித்துப்போன டைம்லி காமிக்ஸ் நிறுவனர் மார்ட்டின் குட்மேன், இடைக்கால எடிட்டராக பதினெட்டரை வயது லீயை நியமித்தார் (அப்போது குட்மேனுக்கு வயது முப்பது). வேலைக்குச் சேர்ந்த இரண்டே வருடங்களில், அந்தப் பிரிவுக்கு எடிட்டராக லீ மாறியதற்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, அப்போதைய எடிட்டர் குட்மேனுடன் சண்டையிட்டுப் பிரிந்ததும் ஒரு காரணம். ஆக, உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் லீயைப் பார்த்துப் புன்னகைக்கத் தொடங்கியிருந்தன. இதன்பின் லீ திரும்பியே பார்க்கவில்லை. பல்வேறு வகையான கதைகளை எழுதிக் குவித்தார் லீ.
அட்டகாசமான நால்வர்
1947-ல் திருமணம். 1950-களில், அதுவரை சரமாரியாகக் கதைகளை எழுதிவந்த லீ, ஒரே மாதிரி சென்றுகொண்டிருந்த வாழ்க்கையினால் அலுப்படைந்தார். அதனால் வேலையையே விட்டுவிடும் முடிவுக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அவரது மனைவி ஜோனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, ஒருமுறை புதிதாக எதையாவது செய்துபார்ப்போமே என்று அவர் உருவாக்கிய ஹீரோ கும்பலின் பெயர் ‘ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ (Fantastic Four).
இந்த ‘ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ கதா பாத்திரங்களைப் படமாக வரைந்தவர் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் ஜாக் கிர்பி.
இந்த நால்வரையும் தாங்கி காமிக்ஸ் வெளிவந்தவுடன், அட்டகாச ஹிட்டாக மாறியது இந்த சீரீஸ். பயங்கர நல்லவர்களாக இல்லாமல், சாதாரண மனிதர்களாக இருந்த இந்தக் கதாபாத்திரங்கள், காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன. அக்காலகட்டம் வரை (1956), அமெரிக்க காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியது டி.சி (DC) காமிக்ஸ் நிறுவனம்தான். ஆனால், தொடர்ந்து ஸ்டீரியோ டைப் நல்ல ஹீரோக்களையே உற்பத்தி செய்துவந்ததால், அந்நிறுவனம் ஒருவித மந்தநிலையில்இருந்துவந்த நேரத்தில், லீயின் கதாபாத்திரங்கள் புயலைப் போல் காமிக்ஸ் மார்க்கெட்டில் நுழைந்தன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றன.
உழைப்பை அங்கீகரித்தவர்
இப்படி காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னராக விளங்கிய ஸ்டான் லீ அனைவரது உழைப்பையும் மதித்து அங்கீகரித்தார். ஐம்பதுகளின் இறுதிவரை, வசனகர்த்தா மற்றும் ஆர்டிஸ்ட் ஆகியவர்களின் விபரங்களே காமிக்ஸில் பங்காற்றியவர்களின் பெயர்ப் பட்டியலில் வெளியிடப்பட்டுவந்தன. இந்த முறையை மாற்றி, பெயர்ப் பட்டியலில் இங்க்கர் மற்றும் லெட்டரர்களின் விபரங்களும் இடம்பெறுமாறு செய்தார் ஸ்டான் லீ. காமிக்ஸ்களைப் பற்றிய ஸ்டான் லீயின் பத்தி, ஒவ்வொரு காமிக்ஸிலும் இடம்பெற்றது. அதன் பெயர்: ஸ்டான்’ஸ் சோப்பாக்ஸ். மார்வெல் காமிக்ஸின் தலைமைப் பொறுப்பிலும் அமர்ந்தார் லீ. மார்வெல் என்றாலே லீதான் ரசிகர்களுக்கு நினைவு வந்த அளவு பாப்புலர் ஆனார்.
தற்போதும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்தத் 93 வயதுக் கிழவர், இப்போதும் பல காமிக்ஸ் ஆர்வலர்களுக்குக் கடவுள் ஸ்தானத்தில் இருந்துவருகிறார். இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் பல படங்களிலும் ஜாலியாக முகத்தைக் காட்டி கவுரவ வேடங்களில் நடித்தும் இருக்கிறார் லீ. உலகம் முழுக்கப் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய பிதாமகர் என்ற வகையில் காமிக்ஸ்களுக்கு ஸ்டான் லீயின் பங்கு அளப்பரியது.
தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com