

தமிழ்த் திரைக்கதை ஆசிரியரான கலைஞானம் ‘கேரக்டர்’ என்னும் பெயரில் கட்டுரைத் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். அதில் நடிகை ஸ்ரீவித்யாவைப் பற்றி சுவாரசியமான சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையின் சிறு பகுதி:
(இந்தக் கட்டுரை தொகுப்பு, இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, முதல் பாகம், 336 பக்கங்களைக் கொண்டது, விலை ரூ. 280. இரண்டாம் பாகம், 328 பக்கங்கள், விலை ரூ. 280. நக்கீரன் பதிப்பகம் தொடர்புக்கு: 044 43993029)
நான் எழுதிய 'ஆறு புஷ்பங்கள்' கதையில் ஸ்ரீவித்யா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு கதை சொல்வதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றேன். களையான முகமும், ஒளிரும் பெரிய பெரிய விழிகளும் கொண்ட ஸ்ரீவித்யா என்னை வரவேற்று அமரச் செய்து, எனக்கு எதிர்புறத்தில் அமர்ந்தார்.
அப்போது எனக்குக் கடந்தகால சம்பவம் ஒன்று ஞாபகம் வந்தது. அன்றைக்கு நடக்கவிருந்தது சரியாக நடந்திருந்தால், இந்த ஸ்ரீவித்யா என் மகள்தானே என நினைத்து. சிறிது சத்தமாகச் சிரித்துவிட்டேன்.
“என்ன சார் சிரிக்கிறீங்க?"
"அது ஒரு கதை.. ஃபிளாஷ்-பேக் நினைவு"
"கதையைச் சொல்லுங்க சார்.."
"ஆறு புஷ்பங்கள் சுதையைத்தானே.?
"அத அப்புறமா சொல்லுங்க. முதல்ல அந்த ஃபிளாஷ்-பேக்கைச் சொல்லுங்க"
"சொல்றேம்மா..."
...எனது உறவுக்காரர் அண்ணன் காமாட்சி சினிமாவில் பெரிய பாடலாசிரியராக இருப்பதாக உறவினர்கள் சொன்னார்கள் அவரைச் சந்தித்து, சினிமாவில் சேர்த்துவிடும் முயற்சியில் 1952-ல் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தேன்.
(ஜெயந்திமாலா நடித்த 'வாழ்க்கை’ படத்தில் ‘உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்', 'பராசக்தி'யில் 'ஓ ரசிக்கும் சீமானே', 'புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே' உட்பட இந்தக் காலத்திலும் ரசிக்கத்தக்க பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியவர் என் அண்ணன் கவி கே.பி.காமாட்சிசுந்தரம். 'பராசக்தி'யில் கோவில் பூசாரியா வருவாரே, அவரேதான் அவரின் புகழ்மிக்க வாழ்க்கையையும், பிறகு அவரின் துயரம் மிகுந்த வாழ்ச்கையையும், அவர் இறந்தபோது, அவரின் உடலை வீட்டிலிருந்து, சுடுகாடுவரை சுமந்து சென்றவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பதையும் 'சினிமா சீக்ரெட்டில்’ மிக விரிவாக எழுதியுள்ளேன்)
சென்னையில் திநகரில் இருந்த அண்ணன் கவி கே.பி. காமாட்சிசுந்தரத்தின் வீட்டை ஒருவழியாகக் கண்டுபிடித்தேன். அண்ணன் என்னை அரவணைத்துக்கொண்டார்.
அப்போது அண்ணனைப் பார்க்க ஒருவர் வந்தார் வாட்டசாட்டமான இளைஞனாக இருந்த என்னைப் பார்த்ததும். “இந்தப் பையன் யாருங்க?” என அண்ணனிடம் கேட்க,
“அவன் எனக்குச் சித்தி மகன், தம்பிதான். சினிமாவுல நடிக்கிறதுக்காக வந்திருக்கான்" என்றார்.
“ஆள் நல்லாத்தான் இருக்கான் இவனுக்கு பெரிய எடத்துல கல்யாணம் . பண்ணி வச்சிரலாமா? எம்.எல்.வசந்தகுமாரிக்கு மாப்பிள்ளை தேடுறாங்க. வசந்தகுமாரியத்தாள் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே கர்நாடக சங்கீதத்துல பெரிய பாடகி. சினிமாவுலயும் பிரபலமான பாடகியா இருக்கே. நல்ல வசதி 'இந்தப் பையன் கவி கேபி காமாட்சியோட தம்பி'னு சொல்லி வசந்தகுமாரி வீட்டுக்கு அழைச்சிட்டுப் "போகவா?" எனக் கேட்டார்.
"தாராளமா அழைச்சிட்டுப் போங்க" என அண்ணன் சொன்னார்.
நான் அவங்க வீட்டுல, 'நல்ல வரன் இருக்கு எப்ப கூட்டியாறது?னு கேட்டுக்கிட்டு. தம்பிய அழைச்சிட்டுப் போறேன்" எனச் சொல்லிவிட்டுத் தலையைச் சொறிந்தார் அவர்.
'வரன்' என்று சொன்னதும்தான் அவர் கல்யாண புரோக்கர் என்பது எனக்குத் தெரிந்தது.
“என்ன போய்வர செலவுக்குப் பணம் வேணுமா? இந்தா..." எனப் பத்து ரூபாய் நோட்டை அவரிடம் அண்ணன் கொடுக்கவும். வாங்கிக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார் அவர்.
அப்போது எனக்கு எம்.எல்.வசந்தகுமாரி என்றால் யார்? என்பது தெரியாது.
(அதன்பிறகு அவர் ஒரு இசையரசி என்பதையும், இந்திய அளவில் புகழ் பெற்றவர் என்பதையும் விபரமாகத் தெரிந்துகொண்டேன்.)
வசந்தகுமாரி, சினிமாவுல பெரிய பாடகினு சொல்றாரு கல்யாண புரோக்கர். அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அவங்க மூலமாவே சினிமாவுல நடிகனாகிடலாம் என்ற மகிழ்ச்சி என் மனசெல்லாம் பரவியது. தரையில் கால் நிற்க வில்லை எனக்கு.
ஒருவாரம் கடந்த நிலையில்.. என் கற்பனைகள் வளர்ந்திருந்த நிலையில்... அந்த புரோக்கர் அசட்டுப் புன்னகை பூக்க வந்தார்.
"காமாட்சியண்ணே வசந்தகுமாரிக்கு மாப்பிள்ளை தேடுறத... எனக்கு சக கல்யாண புரோக்கர் மூலமாத்தான் தகவல் வந்துச்சு. ஆனா... தாமதமாத்தான் என் கிட்ட சொல்லிருக்காங்க. வாந்தகுமாரிக்கு அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆயிருச்சாம்ணே" என்றார்.
"இதையெல்லாம் நல்லா தெரிஞ்சுக்காம வந்து ஏய்யா இப்படி..." என கோபமாகி அவரை அண்ணன் திட்டி அனுப்பிவிட்டார்.
எனக்கு வந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? முதல்நாள் இரவில் எனக்கும், வசந்தகுமாரிக்கும் திருமணம் நடந்ததாகவும், அவரின் சிபாரிசில் நான் சிவாஜி அவர்களைப் போல ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருப்பது போலவும் கனவு கண்டேன். இப்போ கனவு 'புஸ்ஸ்ஸ்'னு போச்சே... என்கிற வாட்டத்தில் என் முகம் அன்று முழுக்க அழுது வடிந்தது.