Published : 25 May 2022 03:58 PM
Last Updated : 25 May 2022 03:58 PM

’ஒருத்தி’க்கான நீதி என்ன?

நடிகை நவ்யா நாயர் இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் என்ற எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான படம் ‘ஒருத்தி’. ‘ட்ருவேன்ரம் லாட்ஜ்’, ‘த்ரீ கிங்ஸ்’ போன்ற படங்களின் இயக்குநர் வீ.கே.ப்ரகாஷ் இதை இயக்கியுள்ளார். கேரளத்தில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான ‘உப்பும் மொளவும்’ எழுத்தாளர் சுரேஷ் பாபு இதற்கான கதையை எழுதியிருக்கிறார்.

கேரளத்தில் ஒருசில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்தான், கதைக்கான ஆதாரம். ஒரு நகைக்கடையில் மாலை வாங்கும் ஒருத்தி, ஏமாற்றபடுகிறார். அந்த நகையில் பாதிக்குமேல் மெழுகு. போலியான நகையை விற்ற நிறுவனம் நைச்சியமாகப் பேசி, குற்றத்தைத் திசை திருப்ப முயல்கிறது. தனக்கான நீதிக்காக அந்த ஒருத்தி போராடி வெல்கிறார்.

நவ்யா, கேரள தண்ணீர்ப் போக்குவரத்துத் துறைப் படகில் நடத்துநராக வேலைபார்க்கும் ராதாமணியாக நடித்திருக்கிறார். இரு குழந்தைகள். ஓவியரான கணவர் சரியான வேலை கிடைக்காமல் வளைகுடா நாடு ஒன்றில் கட்டிட பெயிண்டராக இருக்கிறார். கணவருடைய தாய், குழந்தைகளுடன் வசிக்கும் ராதாமணியின் அன்றாடம் முதலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிறகு கணவர் குழந்தைகளுடனான அவரது சந்தோஷ வாழ்க்கை ஒரு பாடல் காட்சி வழியாகக் காண்பிக்கப்படுகிறது.

பொதுவாக இம்மாதிரியான படங்களில் குடும்பத்தைச் சித்தரிக்கும் ஒரு தேய்வழக்கான பாணியில்தான் இந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வசனமும் ரொம்பவும் நாடகத்தனமாக இருக்கிறது.

மறுபுறம் நடிகர் விநாயகன் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர், ஒரு காவல் துறை உதவி ஆய்வாளராக வருகிறார். உயர் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு அதனால் கோபமும் மன உளைச்சலும் அடையும் உதவி ஆய்வாளர். இந்த இரு கதாபாத்திரங்களும் சந்திக்கும் முனைதான் படத்தின் மையம். அப்போதுதான் படமும் வேகம் எடுக்கிறது.

கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு நகை வாங்குகிறார்கள். தனக்குத் தெரிந்த ஒரு பையன் வேலை பார்க்கும் கடையில் அவனது நம்பிக்கையின் பேரில் வாங்குகிறார்கள். மகளின் திடீர் மருத்துவச் செலவுக்காகப் பணம் தேவைப்பட அடகுவைக்கப் போன இடத்தில்தான் நகையில் தங்கம் பேருக்குத்தான் இருக்கிறது எனத் தெரியவருகிறது. ராதாமணியின் தம்பி இதைச் சமூக ஊடகத்தில் அம்பலப்படுத்த அவன் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. இதற்காக காவல் நிலையம் செல்லும்போது உதவி ஆய்வாளரான விநாயகனைச் சந்திக்கிறார் ராதாமணி. அவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு இதில் உதவ நினைக்கிறார் விநாயகன்.

இதற்கிடையில் நகைக்கடைக்காரர்கள், உயர் அதிகாரிகள் மூலம் அதிகாரம் செலுத்த முயல்கிறார்கள். மேலும் குறுக்குவழியில் இந்த வழக்கை இல்லாமல் ஆக்க முயல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி உதவி ஆய்வாளர் அந்த ‘ஒருத்தி’ நீதி வாங்கித் தந்தாரா என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முன்றுள்ளனர். நவ்யாவும் விநாயகனும் படத்துக்குப் பலம் சேர்க்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். வீ.கே.பிரகாஷின் முந்தைய படங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட ரீதியில் இந்தப் படத்தைச் செய்திருக்கிறார். திரைக்கதையை இன்னும் சிறப்பாக்கியிருக்கலாம். என்றாலும் இந்தப் படம் பார்க்கக்கூடிய வகையிலான படம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x