தியாகராஜன் பேட்டி: பாலிவுட்டில் பிஸியாகும் பிரசாந்த்!

தியாகராஜன் பேட்டி: பாலிவுட்டில் பிஸியாகும் பிரசாந்த்!

Published on

வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது பிரசாந்த் நாயகனாக நடித்திருக்கும் ‘அந்தகன்’. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் மறுஆக்கமே ‘அந்தகன்’. கலைப்புலி எஸ். தாணு திரையரங்குகளில் வெளியிட இருக்கும் இந்தப் படத்தை, பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

தியாகராஜன்
தியாகராஜன்

‘அந்தாதுன்’ படத்தை மறுஆக்கம் செய்ய என்ன காரணம்?

இந்தப் படத்துல ஒவ்வொரு சீன்லயும் சஸ்பென்ஸ் இருக்கும். பிளாக் காமெடி இருக்கும். சிரிச்சுட்டே இருக்கும்போது திடீர் ஆச்சரியங்கள் வரும். பிரசாந்த் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தற மாதிரி பல படங்கள்ல நடிச்சிருக்கார். ‘ஆணழகன்’ படத்துல பெண் வேடம் போட்டு பரதம் ஆடியிருப்பார். இதுல படத்தின் நாயகன், பியானோ இசைக் கலைஞன். பிரசாந்துக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியுங்கறதால, அவரோட அந்தத் திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்தலாம்னு நினைச்சேன். அது மட்டுமில்லாம, இது, மொழி தெரியாத சீனாவுல கூட நான்காயிரம் திரையரங்குகள்ல ஓடி, 200 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணியிருக்கு. இப்படிப் பல சாதகமான அம்சங்கள் கொண்ட படத்தை ஏன் ரீமேக் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். அதோட உரிமையை வாங்கிப் படத்தை முடிச்சுட்டோம்.

தமிழுக்கு என்னென்ன மாற்றங்கள் பண்ணியிருக்கீங்க?

மையக் கதையைக் கெடுத்திடாத வகையில, சின்னசின்ன மாற்றங்கள் செய்திருக்கோம். தமிழுக்கு சரியா இருக்காதுன்னு நினைச்ச சில காட்சிகளை மாத்தியிருக்கோம். கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கிற விதமாவும் கதையை வேகமாக நகர்த்துற மாதிரியும் மாற்றங்கள் இருக்கும். பிரசாந்துக்கும் சமுத்திரக்கனிக்கும் ஒரு சண்டைக் காட்சி எடுத்தோம். ஐந்து நாள் படப்பிடிப்பு நடத்தினோம். ரொம்ப மிரட்டலா இந்தக் காட்சி அமைஞ்சிருக்கு. மாடியில இருந்து குதிச்சு அதகளம் பண்ணியிருக்கார் பிரசாந்த். இது தமிழுக்காக சேர்த்த விஷயம்.

படத்துல நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்களே?

கதைக்குத் தேவைப்பட்டது. கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி. ஊர்வசி, லீலா சாம்சன், செம்மலர், வனிதா விஜயகுமார், யோகிபாபுன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் நடிப்புல பிரமாதப்படுத்தியிருக்காங்க. இது எனக்கு பெரிய பலம். பிஸியாக இந்திப் படங்கள் பண்ணிட்டிருக்கிற ரவி யாதவைக் கூட்டிட்டு வந்து ஒளிப்பதிவு பண்ண வச்சிருக்கேன். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம், கலை இயக்குநர் செந்தில் ராகவன்னு ஒவ்வொரு டெக்னீஷியனும் தங்களோட சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்காங்க.

கார்த்திக், ‘கெஸ்ட் ரோல்’ பண்ணியிருப்பதாக செய்திகள் வந்ததே?

கதையில அவருக்கு முக்கியத்துவம் இருக்கு. 1980-ம் வருடம் என் கூட ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் பண்ணினார். அதன் பிறகு அவருக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு முன்னணி ஹீரோவா ஆனார். இப்போ இந்தப் படத்துல 1980-ம் வருட கார்த்திக்கை மறுபடியும் கொண்டு வர்ற மாதிரி நடிச்சிருக்கார். அவர் வர்ற ஒவ்வொரு காட்சியிலயுமே நீங்க அந்த கார்த்திக்கைப் பார்க்கலாம். அவர் கேரக்டர் சிறப்பா இருக்கும். கதையோட ஒன்றிப்போய் தன் பாணியில நடிச்சு அசத்தியிருக்கார்.

இந்திப் பதிப்புல தபு நடித்திருந்த கேரக்டரைத்தான், சிம்ரன் பண்றாங்களா?

சிம்ரனும் பிரசாந்தும் சேர்ந்து ஐந்து படங்கள்ல ஜோடியா நடிச்சிருக்காங்க. அந்தக் கெமிஸ்ட்ரி வேற மாதிரி இருக்கும். இந்தப் படத்துல சஸ்பென்ஸ் நிறைஞ்ச கேரக்டர்ல சிம்ரன் வர்றாங்க. சும்மாவே அவங்க நல்லா பெர்ஃபார்மன்ஸ் பண்ணுவாங்க. இதுல அந்த கேரக்டருக்குச் சரியான நடிப்பை கொடுத்திருக்காங்க. நிச்சயமா அவங்க நடிப்புக்கு விருது கிடைக்கும்.

‘அந்தகன்’ தலைப்பை எப்படிப் பிடிச்சீங்க?

பார்வையற்ற ஹீரோ கேரக்டரை வச்சுதான் படத்தோட கதை நகரும். நாயகன் உண்மையிலேயே பார்வையற்றவனா, இல்ல பார்வையற்றவன் மாதிரி நடிக்கிறானான்னு நகரும் படம். இந்தியிலயும் அந்த அர்த்தத்துலதான் டைட்டில் வச்சிருக்காங்க. அதனால நாமும் அதுக்கு சரியானத் தமிழ்ப் பெயரை வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். பொருத்தமான தலைப்பைத் தேடும்போது எல்லோரும் சொன்னது பொதுவானதா இருந்தது. பிறகு ஆய்வு பண்ணினோம். நிறைய தேடல். எங்களுக்காகவே காத்திருந்ததுபோல ‘அந்தகன்’அப்படிங்கிற வார்த்தை இருக்கிறது தெரிய வந்தது. சரின்னு அதை பிடிச்சுக்கிட்டோம்.

ஒவ்வொரு படத்துக்கும் பிரசாந்த் ஏன் இவ்வளவு இடைவெளி எடுத்துக்கிறார்?

ஒவ்வொரு கதைக்கும் தன்னைத் தயார்படுத்திக்க அது தேவையா இருந்துச்சு. இனி அது இருக்காது. அவர் தொடர்ந்து நடிக்கப் போறார். நிறைய இயக்குநர்கள் கதை சொல்றாங்க. தயாரிப்பாளர்கள் வந்துட்டு இருக்காங்க.

பிரசாந்த் கதைகள் கேட்டுட்டு இருக்கார். அடுத்து அமிதாப் பச்சன், பிரசாந்த் சேர்ந்து நடிக்கும் ‘சல்யூட்’ அப்படிங்கற படம் பண்றோம். பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகள்ல உருவாகுது. இது தவிர விஜய் ஆண்டனி நடிச்ச ‘நான்’ படத்தை இந்தியில பிரசாந்த் நடிப்பில் ‘ரீசார்ஜ்’ என்கிற தலைப்பில் ரீமேக் பண்ணப் போறோம். இன்னும் சில இயக்குநர்கள் பேசிகிட்டிருக்காங்க. அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்.

- செ.ஏக்நாத்ராஜ்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in