

ஆதிக்க மனோபாவம் மிகுந்த மனிதர்கள் தங்களுடைய மேன்மை எனக் கருதிக்கொள்பவற்றைச் சக மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் வலிந்து திணிக்க ஆடும் ஆட்டம் மிகக் கோரமானது. வன்மமும் மூர்க்கமும் நிறைந்த அந்த ஆட்டத்தின் சிறுதுளியே ‘புழு’.
மம்மூட்டி, பார்வதி திருவோத்து, அப்புன்னி சசி ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரதீனாவின் உருவாக்கத்தில் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
மகனிடம் பெற்ற சாபத்திலிருந்து தப்பிக்க மன்னன் பரீட்சித்து விண்ணில் கோட்டை கட்டி வாழ்வான். பாம்பிடமிருந்து ஆறு முறை தப்பிக்கும் மன்னன், இறுதியில் பழங்களின் ஊடே புழுவாக நுழைந்த பாம்பிடம் கடிபட்டு இறப்பான். இது மகாபாரதத்தின் கிளைக் கதைகளில் ஒன்று. ‘புழு’ படத்தில் ‘குட்டன்’ கதாபாத்திரமாக வரும் மம்மூட்டிதான் நம் காலத்தின் பரீட்சித்து. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. நமக்கு மத்தியில் வாழும் எண்ணற்ற ‘குட்டன்’களின் பிரதி பிம்பம்.
நாடகக் கலைஞராக வரும் அப்புன்னி சசியே இந்தப் படத்தின் நாயகன். அவருடைய வெகு இயல்பான நடிப்பும் இறுக்கமற்ற உடல்மொழியும் அன்பில் ததும்பும் விழிகளும் தீர்க்கமான வசன உச்சரிப்பும் அவரை நம் மனத்துக்கு நெருக்கமானவராக மாற்றிவிடுகின்றன. தன்னுடைய மனைவி பார்வதியின் உறவினர்களின் முன்பு அவருடைய கையைப் பிடித்தபடி நடக்கும்போது அவர் வெளிப்படுத்தும் பெருமிதம் குட்டனைக்கூட பொறாமை கொள்ள வைக்கும்.
குட்டன் கதாபாத்திரமாகவே மம்மூட்டி இந்தத் திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். புறத்தோற்றத்தில் மறைந்திருக்கும் வன்மத்தையும் மூர்க்கத்தையும் சிறுசிறு முக அசைவுகளைக் கொண்டு அவர் உணர்த்தும் விதம் அலாதியானது. மகனுடன் பல் துலக்கும் அந்தச் சில நொடிக் காட்சிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
நல்ல கதையைத் தேர்ந்தெடுத்ததில் பளிச்சிடும் இயக்குநரின் திறமை, ஆக்க நேர்த்தியில் முழுமையான திருப்தியைத் தரவில்லை. இந்தத் திரைப்படத்துக்கு மம்மூட்டி, அப்புன்னி சசி, பார்வதி ஆகிய மூன்று பேரின் கதாபாத்திரங்கள் மட்டும் போதுமானவை. கதை சொல்லலில் த்ரில்லர் தன்மையைத் தக்க வைக்க குட்டனின் வாழ்க்கையில் வந்துசெல்லும் சில கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு அவசியமற்றவை.
இருப்பினும் இப்படம், நாம் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்று. சமகால சமூக - அரசியல் உளவியலும் அதன் ஆபத்துகளும் அவ்வளவு நேர்த்தியாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. தந்தை – மகன் உறவின் வழியாக இயக்குநர் உணர்த்தும் நுண் அரசியல், சாதிய மனோபாவத்தின் பேராபத்தை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முக்கியமாக, சமூகத்தின் பார்வையில் தம்மை நல்லவர்களாகவும் வெற்றியாளராகவும் நம்பும் பலரது முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளது.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in