

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முக்கியமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் சமுத்திரக்கனி தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துவரும் 'ஏகே 61’ இல் நடித்துக்கொண்டிருக்கிறார். இதை அண்மையில் ஒரு யுடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் சமுத்திரக்கனி உறுதிசெய்திருக்கிறார்.
“ஹெச்.வினோத் தம்பி இயக்கத்தில் அஜித் சாருடன் இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அது ஓர் அற்புதமான கதைக்களம். ஒரு நல்ல கதாபாத்திரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் படைப்புக்குள் நாமும் இருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது.” என்று அந்தப் பேட்டியில் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.
முதல்நிலை நட்சத்திரங்களுடன்
ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட இந்தத் தலைமுறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். மே, 13 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டான்’இல் சிவகார்த்திகேயனின் தந்தையாக அவருடைய நடிப்புப் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘காலா’வில் நடித்துள்ள சமுத்திரக்கனி, ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’விலும் நடித்துள்ளார். சூர்யாவுடன் ‘காப்பான்’ திரைப்படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களாகவும் மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்டவர்களாகவும் திகழும் விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்களில் சமுத்திரக்கனி இதுவரை நடித்ததில்லை. எனவே ‘ஏகே 61’ படத்தில் நடிப்பது சமுத்திரக்கனியின் நடிப்புப் பயணத்தில் அடுத்தகட்ட நகர்வாக அமையக்கூடும்.
சிகரத்தின் சீடர்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சமுத்திரக்கனி அவருடைய நூறாவது திரைப்படமான ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தில் பெயர் தெரியாத கதாபாத்திரத்தில் தலைகாட்டினார். வெங்கட் பிரபு நடித்த ‘உன்னைச் சரணடைந்தேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சசிகுமார் இயக்கத்தில் 2008இல் வெளியாகித் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்ட ‘சுப்ரமணியபுர’த்தில் கயமைத்தனம் மிக்க வில்லனாக நடித்து ஒரு நடிகராகப் புகழ்பெற்றார். அடுத்த ஆண்டு வெளியான ‘நாடோடிக’ளின் பிரம்மாண்ட வெற்றி அவரை இயக்குநராகவும் நிலைநிறுத்தியது. அந்தப் படம் பிற தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் ஆனது.
தேசிய விருது
‘சாட்டை’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக்கொண்டே முக்கியமான இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரின் படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துவந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் 2016இல் வெளியான ‘விசாரணை’யில் நடித்ததற்காக சமுத்திரக்கனிக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மோகன்லாலுடன் ‘சிகார்’ என்னும் திரைப்படத்தில் நடித்தார். ‘ஒப்பம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். ராஜமெளலி இயக்கத்தில் மார்ச் மாதத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’இலும் நடித்திருந்தார்.
‘நெறஞ்ச மனசு’, ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி. கடந்த ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான ‘வினோதய சித்தம்’ பரவலான பாராட்டுகளைப் பெற்றது. ஃப்ராங்ளின் ஜேக்கப் இயக்கிய ‘ரைட்டர்’இல் வயது முதிர்ந்த காவலராகக் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இப்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத்தின் ‘ஏகே 61’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக உறுதி செய்திருக்கிறார்.
‘ஏகே 61’ - இதுவரை தெரிந்தவை
இன்னும் அதிகாரபூர்வமாகத் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜித், வினோத், போனி கபூர் ஆகியோரின் கூட்டணி இணைந்திருக்கும் மூன்றாம் திரைப்படம். இந்தத் திரைப்படம், வங்கிக் கொள்ளையை மையப்படுத்தியது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று எதிர்மறைக் குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. சமுத்திரக்கனி அஜித்தை எதிர்க்கும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் உலாவருகிறது. மலையாள நடிகை மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை அண்ணா சாலையைப் போல் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போடப்பட்டுப் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று போனி கபூர் கூறியுள்ளார். ‘ஏகே 61’ திரைப்படம் 2022 தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.