

இருபதாண்டுகளுக்கு முன்னர், 1996-ல் வெளியாகி உலகம் முழுவதுமுள்ள ஹாலிவுட் ரசிகர்களை மிரட்டிய படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. ரோலண்ட் எம்மரிச் இயக்கத்தில், வில் ஸ்மித் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தில் ஹாலிவுட் நிலப்பரப்பின் அளவில் கால் பங்கு கொண்ட பெரிய விண்கலம் ஒன்று அயல்கிரக வாசிகளுடன் புவியின் சுற்றுப்பாதையில் ஊடுருவுகிறது.
இதில் 36 சிறிய விண்கலங்கள் உள்ளன. இவை அமெரிக்க வெள்ளை மாளிகை உள்ளிட்ட பெரும் மையங்களைத் தாக்கி அழித்து பூமியைக் கைப்பற்றும் வகையில் நிலைநிறுத்தப்படுகின்றன. இவற்றுடனான போரில் அவற்றின் வியூகத்தை முறியடித்து பூமியைப் பாதுகாப்பது பற்றிய சம்பவங்களின் சுவாரசியமான, பிரம்மாண்டமான தொகுப்புதான் ‘இண்டிபெண்டன்ஸ் டே’.
இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அவர்களது விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் இதன் இரண்டாம் பாகமான ‘இண்டிபெண்டன்ஸ் டே ரிசர்ஜன்ஸ்’ இந்த ஜூனில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.
1996-ல் நிகழ்ந்த ஊடுருவல் போன்ற ஒன்றை வருங்காலத்தில் தவிர்க்கும் முகமாக ஐ.நா. அமைப்பு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பாதுகாப்பு மையத்தை உருவாக்குகிறது. இப்படியான விண்கலங்களையும் அயல் கிரகவாசிகளையும் முன்கூட்டியே கண்டறியும் திறன் மிக்க பாதுகாப்பு மையம் இது. செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களிலும் ராணுவக் குழுக்கள் குழுமியுள்ளன. இவற்றை மீறி அயல் கிரகவாசிகளின் தாக்குதல் நடைபெறுகிறது. அவற்றிலிருந்து எப்படி பூமி தப்பிக்கிறது என்பதே இந்த இரண்டாம் பாகத்தின் கதை.
வழக்கம் போன்ற பிரம்மாண்டமும், திகிலூட்டும் காட்சிகளும் படத்தில் ஏராளமாக உள்ளன என்பதைச் சொல்கிறது படத்தின் ட்ரெயிலர். லியம் ஹெம்ஸ்வொர்த், ஜெஃப் கோல்ட்ப்ளம், பில் புல்மேன் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். சம்பளப் பிரச்சினை காரணமாக வில் ஸ்மித் இதில் நடிக்கவில்லை. ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் வெளியிடும் இந்தப் படம் ஹாலிவுட் ரசிகளுக்குப் பெரிய விருந்தாக அமையும் என்று நம்பலாம்.