

1986-ம் ஆண்டு வெள்வந்த பழைய விக்ரம் படத்தின் நாயகியான லிசி, இந்தப் புதிய விக்ரம் பற்றி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ’விக்ரம்’ படத்தின் பாடல் வெளியாகிக் கவனம் பெற்றுவருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை கமல் ஹாசன் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பழைய ‘விக்ரமி’ல் கமல் ஹாசனுடன் இருக்கும் ஒளிப்படத்தையும் சமீபத்தில் கமல் ஹாசனுடன் எடுத்த ஒளிப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் லிசி. அந்த இன்ஸ்டாகிராம் இடுகையின் குறிப்பில், “புதிய ‘விக்ர’மின் கதை, பழைய ‘விக்ர’மின் கதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நானும் அந்தப் பழைய ‘விக்ர’மின் நாயகிகளுள் ஒருத்தி. என்னுடன் டிம்பிள் கபாடியாவும் ஒரு நாயகியாக நடித்திருந்தார். எனக்கு இந்தப் புதிய ‘விக்ர’மில் வாய்ப்பு தராதது வருத்தம்தான்.
ஆனால், இந்தப் புதிய ‘விக்ர’மின் ஒலிப்பதிவு எனது லிசி லஷ்மி ஸ்டுடியோவில்தான் நடந்தது என்பது எனக்குப் பெருமைதான். கமல் சாரும் படக் குழுவும் எனது ஸ்டுடியோவில் இருப்பது உண்மையில் பெருமைக்குரிய தருணம். என்னுடைய 17 வயது பிறந்த நாள் கேக்கை ‘விக்ரம்’ ஸூட்டிங்கில்தான் வெட்டினேன். அப்போது படக்குழுவினர் எல்லோரும் உடன் இருந்தனர். இந்தியாவின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம், இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர் நாயகன், கிரேக்க தேவதையை போன்ற டிம்பிள் இணை நாயகி, நான் வேலை பார்த்ததில் மிகப் பெரிய குழு இவையெல்லாம் ஒரு பள்ளிச் சிறுமியான எனக்குத் தொடக்கத்தில் மிரட்சியாக இருந்தது. பிறகு இந்த அனுபவம் உற்சாகத்தையும் பரவசத்தையும் தந்தது. அந்த அனுபவம் எப்போதும் நீங்காத இனிமைமிக்கது. கமல் சாருக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் மொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகள்” எனச் சொல்லியிருக்கிறார் லிசி.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription