

எட்டு வயது மகனுடன் நயன்தாரா பேருந்தில் பயணிக்கிறார். மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார். மலைப்பகுதியில் செல்லும்போது பேருந்து விபத்துக்குள்ளாகி சக பயணி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கைப்பற்ற சக பயணிகள் முயற்சிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் பார்வதி என்கிற பெண்ணாக நயன்தாரா தன் மகனைக் காக்க என்ன செய்தார் என்பதுதான் `ஓ2’ படத்தின் கதை. சிறந்தக் கதைகளைப் படமாக்கிவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி.எஸ். எழுதி, இயக்கியிருக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகவிருக்கிறது.
கட்டுப்பாட்டில் இல்லாத கை!
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் சிபிராஜ் கெட்டிக்காரர். தற்போது அவர் நடித்துள்ள ‘ரங்கா’, ஏலியன் சிண்ட்ரோம் என்கிற பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞனின் கதை. கதைப்படி நாயகனின் கைகள் ஏதாவதொரு வேலையைச் செய்துகொண்டிருக்க வேண்டும். அவை சும்மா இருந்தால் முடிந்தது கதை. உறைபனியால் நிறைந்திருக்கும் காஷ்மீருக்குச் செல்லும் நாயகன், அங்கே தன் காதலிக்கு ஏற்படும் ஆபத்தைத் தனது ‘கை’ பிரச்சினையால் எப்படி சமாளித்தார் என்பதை அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக சித்தரித்திருக்கிறாராம் அறிமுக இயக்குநர் வினோத். பாஸ் மூவீஸ் சார்பில் கே.செல்லையா தயாரித்துள்ள இப்படத்தில் சிபிராஜின் காதலியாக நடித்திருப்பவர் நிகிலா விமல்.
கவலைகள் இல்லா மனிதன்!
`மேயாத மான்', `ஆடை' ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமாரின் புதிய படம் 'குலு குலு'. சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இதில், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி என அவருக்கு வழக்கம்போல் இரண்டு நாயகிகள். எதைப் பற்றியும் கவலைப் படாத கதையின் நாயகனாக சந்தானம் வருகிறார். எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், படம் ஜூன் மாதம் ரிலீஸாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
10-வது ஆண்டில் சி.வி.குமார்
கடந்த 2012-ல் பா. இரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ தொடங்கி, இதுவரை, 18 இயக்குநர்கள், 7 இசையமைப்பாளர்கள், 10 ஒளிப்பதிவாளர்கள், 3 படத்தொகுப்பாளர்கள், 50-க்கும் அதிகமான நடிகர், நடிகைகள் என இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு அறிமுக அடையாளம் கொடுத்தவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார். வெற்றிகரமாகப் பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் அவர், புதிதாகத் தயாரித்துள்ள படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.
திருமணத்துக்குப் பிறகான காதலையும் அதன் மென்னுணர்வுகளையும் மையமாக வைத்து முழுநீள காதல் நகைச்சுவை - இசைப் படமாக உருவாகியிருக்கும் இதை ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார். புதுமுகம் கவுசிக் நாயகனாகவும் ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.