

சத்யஜித் ராயைப் போல் ஆரவாரமாகத் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கியவரல்ல மிருணாள் சென். ராயின் முதல் படமாக வந்து அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்த ‘பதேர் பாஞ்சலி’, 1955-ல் வெளிவந்து மிகப் பெரும் கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு சென் இயக்கிய ‘ராத் கோர்’ என்னும் படம் வந்த சுவடின்றிப் படப்பெட்டிக்குள் சுருண்டுகொண்டது.
இதற்கடுத்து சென் அந்தக் காலகட்டத்தின் சமூக நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ‘நீல் ஆகாசே நீச்சே’ என்னும் ஒரு படத்தை எடுத்தார். கல்கத்தாவில் வாழ்க்கை நடத்தும் ஒரு சீன வியாபாரியின் கதை இது. சக நாட்டுக்காரர்கள் போதைப் பொருள் விற்கும்போது அதை மறுத்து சீனப் பட்டை விற்றுவருபவர். அவருக்கு ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை மீது சகோதர சிநேகம் தோன்றுகிறது. பிறகு கல்கத்தாவில் நடந்த ஜப்பான் தாக்குதலைப் பற்றிப் படம் சொல்கிறது. சீன வியாபாரியும் நாடு திரும்பி தன் நாட்டுக்காகப் போராடப் புறப்படுகிறார்..
ஆனால், இந்தப் படமும் கவனம் ஈர்க்காமல் போனது. இரு படங்களின் தோல்விக்குப் பிறகுதான் ‘பைஷே ஷ்ரவண்’ என்கிற படத்தின் மூலம் சற்றே கவனிக்கப்படுகிறார் சென். இந்தப் படம் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’யை நினைவுபடுத்தக்கூடியது. இதிலும் மழை பெய்து வீடு பெயர்ந்து ஒரு மரணம் நடக்கிறது. ராயின் படத்தில் சிறுமி; சென்னின் படத்தில் மூதாட்டி. இரண்டு படத்திலும் பஞ்சம் பிழைக்க மக்கள் இடம்பெயர்வது நடக்கிறது. வறுமையையும் மனித உறவுகளையும் சித்தரிக்கும் விதத்திலும் ஓர் ஒற்றுமையை இதில் காண முடியும்.
கவனம் ஈர்த்த புவன் ஷோம்
1969-ல் வெளிவந்த சென்னின் ‘புவன் ஷோம்’தான் அவரைத் தனித்துவமாக்கியது. தண்டவாளத்தில் தொடங்கும் முதல் காட்சியிலிருந்தே இந்தப் படம் விசேஷமான அனுபவத்தைத் தரக்கூடியது. மனைவியை இழந்த ஒரு கண்டிப்பான, 50 வயது ரயில்வே உயர் அதிகாரியை வைத்து, மனித மனத்தின் விநோதமான சஞ்சலங்களை சென் இதில் சித்தரித்திருப்பார். வேலையாட்களிடம் சிடுசிடுவென இருக்கும் இந்த அதிகாரிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணுக்குமான உறவை இந்தப் படம் சொல்கிறது.
விடுப்பில் வேட்டைக்காகச் செல்லுமிடத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணை அவர் சந்திக்கிறார். பணியாட்களால் கையாள முடியாத கரடுமுரடான அந்த அதிகாரியை அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு கேலிக் கதாபாத்திரமாக சென் மாற்றிவிடுகிறார். வேட்டையில் அவரின் பலவீனங்களை அவள் கண்டுபிடித்துவிடுகிறாள். அவரை எளிதாகக் கையாளவும் செய்கிறாள். அவருக்கும் அவள் மீது ஈர்ப்பு தோன்றுகிறது. வேலைக்குத் திரும்பும்போது அவரின் உள்ளே தோன்றிய மாற்றத்துடன் படம் நிறைவடைகிறது. இந்தப் படத்தை ஒரு நல்ல காட்சி அனுபவமாக திரையில் நிகழ்த்தியிருந்தார் சென். இந்தப் படம் அவருக்கு சர்வதேசக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. பட்டணக் கதாநாயகன் - கிராமத்துப் பெண் என்னும் இந்தக் கருவின் பாதிப்பில் பல படங்கள் பல இந்திய மொழிகளில் வந்துள்ளன.
மனித உறவுகள் மீதான விசாரணை
1970-ல் வெளிவந்த சென்னின் ‘இண்டர்வியூ’ படம் தொழில்நுட்ப ரீதியில் வலுவான படம். வெளிநாட்டுப் படத்தில் பணியாற்ற ஐரோப்பிய உடை அணிந்துசெல்ல இந்திய சினிமாவில் வேலைபார்க்கும் நாயகன் அறிவுறுத்தப்படுகிறான். சலவைத் தொழிலாளர்கள் போராட்டத்தால் சலவைக்கு அளித்த அந்த ஆடையை அவனால் வாங்க இயலவில்லை. குர்தாவும் வேட்டியும் அணிந்து ஐரோப்பிய கனவான்களைச் சந்திக்கச் செல்கிறான். இயல்பான காட்சியில் சட்டென ஓர் அண்மைக் காட்சிக்கு நகர்த்தி, பின்னணி இசையில் திடீர்ச் சலனத்தை எழுப்பி, இதைச் சாத்தியப்படுத்தியிருப்பார்.
‘ஏக் தின் பிரதிதினி'ல் வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர வர்க்கப் பெண், ஒரு நாள் இரவாகியும் வீடு திரும்பவில்லை. அவள்தான் அந்தக் குடும்பத்தின் ஒரே வருவாய்க்கான வழி. அதனால் குடும்பத்தார் கவலையடைகிறார்கள். இந்தப் பின்னணியில் மனித உறவுகளை இந்தப் படம் விசாரிக்கிறது.
சென், இந்தியப் புரட்சிக் குழுக்களின் மையமான கல்கத்தாவின் புரட்சியைத் தன் சினிமாக்களில் சொல்லியுள்ளார். இந்த விதத்தில் சென், ராயிடமிருந்து வேறுபட்டவர். ‘கல்கத்தா 71’ அவற்றுள் முக்கியமானது. அதேபோல் ‘பாதுதி’ என்கிற படம், புரட்சிக் கருத்துகள் மீது அன்றைய காலகட்ட இளைஞர்கள் மத்தியில் எழுந்த கேள்விகளைச் சொல்கிறது. கட்டளைகளை மட்டுமே இடும் தலைமையைக் கேள்வி கேட்கும் ஓர் இளைஞனின் கதையை சென் இதில் கூறியுள்ளார்.
சென் தன் படங்களின் மூலம் பலதரப்பட்ட சமூக நிலைகளை, மனத்தின் விசித்திரங்களைப் பதிவுசெய்துள்ளார். இதைச் சொல்வதற்கான ஒரு திரைமொழியை அவர் பதப்படுத்தியிருந்தார். தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத அந்தக் காலகட்டத்தில் பார்வையாளர்களுக்குக் கதையைக் கடத்த அவர் சிரமப்படவில்லை என்பதை இப்போது அவருடைய படைப்புகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
சென்னின் திரைமொழி
ஃபரிதாபூரில் சரத் சந்திர சட்டர்ஜியின் சோக காவியமான ‘தேவதாஸ்’ வெளியாகியிருந்தது. திரையரங்கில் திரண்டிருந்த மக்களுக்குப் பெரும் கிளர்ச்சி. அந்தக் கூட்டத்தில் இருந்த சென் சிறுவனாக, தன் நண்பர்களுடன் அந்தப் புது அனுபவத்தில் மூழ்கித் திளைத்திருந்தார்.
‘குளோஸ் அப்’ காட்சி வரும்போதெல்லாம் அவர் நண்பர்கள் திரை சிறியதாக இருப்பதால் கைகால்கள் தெரியாமல் போகிறது எனப் பேசிக்கொண்டனர். ஆனால் அதில் ஏதோ புரிபடாத நுட்பம் இருப்பதாகவே அவர் நம்பினார். அந்தச் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை ஒவ்வொரு நொடியாக உள்வாங்கினார். தேவதாஸும் பார்வதியும் கைகோத்தபடி செல்லும்போது, திடீரென எங்கிருந்தோ மழை பொழிவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மழைத் துளிகள், அந்தக் காதலர்களின் காலடி ஓசையைப் போல் கூரையில் உடைந்து சிதறும் ஓசையையும் அவர் நுட்பமாக உள் வாங்கிக்கொண்டார். சர்வதேச அரங்கில் தனக்கென ஒரு இடத்தை அடைந்த பிறகும் சென்னின் சினிமாக்களில் இந்தச் சிறுவனுக்கான ஆர்வத்தைப் பார்க்க முடியும். இந்த ஆர்வம்தான் மிருணாள் சென் குறித்து இன்றும் பேசவைக்கிறது.
இந்தி, தெலுங்கு, ஒடியா, வங்கம் ஆகிய நான்கு மொழிகளில் சென் படங்களை இயக்கியுள்ளார். கான், பெர்லின், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே, இந்திய அரசின் பத்ம பூஷண் உள்ளிட பல விருதுகளும் இந்த நூற்றாண்டு நாயகனைத் தேடி அடைந்துள்ளன.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in