

விசாரணை படத்தில் முத்துவேல் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தற்காகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை வென்றிருக்கிறார் சமுத்திரக்கனி. ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்துக்கு நம்பகமான நடிப்பைத் தர வேண்டும் என்பதில் முழுமையான ஈடுபாடு காட்டும் இவர், ‘நிமிர்ந்து நில்’படத்துக்குப் பிறகு தனது இயக்குநர் நாற்காலியைத் தூசு தட்டியிருக்கிறார். ஒரு படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். ‘அப்பா’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுத் தயாராகியிருக்கும் நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
தேசிய விருதை எப்படிப்பட்ட அளவுகோலா பார்க்கிறீங்க?
விருது கிடைச்சிடுச்சுங்கிற பதற்றமோ பரபரப்போ இல்லை, நாம கடந்து போக இன்னும் நிறைய இருக்கு. நிறைய பொறுப்பு வந்துருக்கு, ஏற்கெனவே நிறைய உழைப்போம்; இப்போ இன்னும் அதிகமா உழைக்கணும். இது என் திரையுலகப் பயணத்துக்கு ஒரு ஆதரவு கொடுத்திருக்கு. அவ்வளவுதான்.
‘கிட்னா’ படம் என்னாச்சு? அதை விட்டு ‘அப்பா’ படம் இயக்க காரணம் என்ன?
‘கிட்னா’ படத்துல ஒரு முக்கிய வேடத்தில் தன்ஷிகா நடிக்கிறதா இருந்தது, அந்த சமயத்துல கபாலி படத்துக்கு அவங்களுக்கு அழைப்பு வந்துடுச்சு. அந்தக் கதாபாத்திரத்துக்காகத் தம்பி ரஞ்சித் அவங்களுக்கு கிராப் வெட்டிட்டாரு. ‘கிட்னா’ படத்தில அவங்க எதிர்காத்துல நடக்க வேண்டியிருக்கும், படமே ரணகளமாயிருக்கும், அதுக்கு விக் சரியா வராது. அதான் முடி வளர்ந்ததுக்கு அப்புறம் படம் பண்ணலான்னு முடிவு பண்ணித் தயாரா இருந்த ‘அப்பா’ படத்தை முதல்ல எடுத்து முடிச்சிட்டோம்.
கே.பாலசந்தர் கடைசியா எழுதிய கதையை இயக்குறதா சொல்லியிருந்தீங்களே?
கொஞ்சம் சம்பாதித்த பிறகு நானே அந்தப் படத்தைத் தயாரிக்கலாம்னு இருக்கேன். ஏன்னா அந்தக் கதையை மத்தவங்களுக்குச் சொல்லிப் புரிய வெக்கறதெல்லாம் சரியா வராது, அந்தக் கதையை அவர் வேறொரு நிலையில ‘கடவுள் காண்போம் வா’என்ற பெயரில் முழுக் கதையையும் தன் கைப்பட எழுதியிருந்தார். அதை இயக்கிற சமயத்துலதான் அவரது மகன் கைலாசம் சார் இறந்துபோனார். அது ஊடகத்துக்குப் பெரிய இழப்பு. அதுக்கு அடுத்தது குருநாதர் மறைவு. இப்போ அதற்கான பேச்சுவார்த்தை நடந்திட்டுருக்கு.
இயக்குநர் சமுத்திரக்கனியால் நடிகர் சமுத்திரக்கனியைக் கட்டுப்படுத்த முடியுதா?
நடிப்புதான் என்னோட ஏரியான்னு சென்னைக்கு வந்தாலும் இயக்குநருக்குத்தான் எப்பவும் முன்னுரிமை. இயக்குநருக்குத்தான் நிறைய காலம் செலவு பண்ணியிருக்கிறேன். என்னுடைய சின்னத்திரை குரு சுந்தர் கே. விஜயன்கிட்ட நடிக்கறதுக்காக என்னுடைய புகைப்படங்களைக் கொடுத்தப்போ அதுக்குப் பின்னாடி என்னுடைய முகவரியை எழுதியிருந்தேன், அவர் அதைப் பார்த்துட்டு உன்னுடைய கையெழுத்து நல்லாயிருக்கே, எனக்கு காப்பி அசிஸ்டெண்ட் வேணும்; எங்கிட்ட உதவி இயக்குநரா சேந்துக்கறியான்னு கேட்டார். கொஞ்சம் யோசிச்சேன், அப்புறம் அந்தப் புகைபடங்களை எல்லாம் எடுத்து ஓரமா வெச்சிட்டு ஒத்துக்கிட்டேன். பிறகு 2007-ல் சசி, “நீ நடிக்கதான வந்த? வா... வந்து ‘சுப்பிரமணியபுரம்’ படத்துல ஒரு கேரக்டர் நடின்னு” வந்து கூப்பிட்டான். அப்படித்தான் இதுக்குள்ள வந்தேன். நாம் எதைத் தேடி வந்தோமோ அது நமக்குக் கிடைக்கலன்னா பக்கத்துல அதுக்கு தொடர்பா ஒண்ணு இருக்கும். அதைப் பிடிச்சுப் பயணப்பட்டுகிட்டே இருந்தோமென்றால், நாம் தேடி வந்தது ஒரு நாள் நம்மைத் தேடி வந்துடும். அதான் எனக்கு நடந்தது.
‘அப்பா’ படத்துல மறுபடியும் ஆசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களா?
ஆசிரியர் என்பவர் யார்? சொல்லிக்கொடுப்பவர்களை ஆசான்னு சொல்லுவோம். அந்த மாதிரி தன் மூலமா இந்த உலகத்துக்கு வந்த குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும், ஒரு கற்பனை இருக்கும் என்பதைப் புரிந்து அந்த இடத்துக்கு அந்தக் குழந்தை போவதற்கு அப்பா வழிகாட்டணும். அந்த வகையில அப்பாவும் ஒரு ஆசிரியர்தான். ‘அப்பா’ படத்தில் மூன்று விதமான அப்பாக்களைக் காட்டியிருக்கிறோம். ஒரு அப்பா கதாபாத்திரம், தன் குழந்தையோட கனவுகளைப் புரிந்துகொண்டு அந்தக் குழந்தையோட வாழ்க்கைக்குள் இறங்கிப் பயணப்படுபவர். இன்னொரு அப்பா கதாபாத்திரம், குழந்தை கருவில் இருக்கும்போதே அதோட முப்பது வருட வாழ்க்கையை இவரே முடிவு பண்ணிடுவாரு. இந்த மாதிரியான அப்பாக்கள்தான் இப்போ நிறைய பேர் இருக்காங்க. இன்னொரு வகையான அப்பா கதாபாத்திரம் பதுங்கியே வாழ்பவர். நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கியே இருப்பாங்க. இவங்க வாழ்ந்ததுக்கான அடையாளமே இருக்காது. படம் பார்க்கும்போது இந்த அப்பாக்கள்ல ஒருத்தர் நம்ப அப்பாவை ஞாபகப்படுத்துவாங்க. இந்த மூன்று அப்பாக்கள்ல தங்களோட அப்பா யாருங்கிறதைக் கண்டுப்பிடிச்சுக்க வேண்டியது ரசிகர்களோட பொறுப்பு. இன்னைக்கு அவசியமாத் தேவைப்படுற இந்தக் கதையை யதார்த்தம் குலைஞ்சுடாம, விறுவிறுப்பு குறைஞ்சுடாம கொடுத்திருக்கோம்.
நிஜ வாழ்க்கையில் ஒரு அப்பாவா சமுத்திரக்கனி எப்படி?
நான் இந்தப் படத்துல என்ன சொல்லியிருக்கேனோ அதைத்தான் ஒரு அப்பாவாவும் செஞ்சிட் டிருக்கேன். என் மகனுக்குப் பதிமூணு வயசாவுது. இப்பவே அவன் ஏழெட்டுக் கதைகள் எழுதியிருக்கான், ஒரு குறும்படம் எடுத்து அதை இணையதளத்தில் பதிவேற்றமும் செஞ்சிருக்கான். என் பொண்ணும் அப்படித்தான். அவங்கள அவங்க போக்குல விட்டாலும் நல்லது கெட்டத சொல்லி டிஸ்கஸ் பண்ணுவேன். பசங்களப் பேசவிட்டுக் கேக்கணும், கேளுங்க.
உங்களுடைய படங்களில் வசனங்கள் கூர்மையா இருப்பதற்கான காரணம்?
நான் நிறையப் படிப்பேன். நான் உதவி இயக்குநரா இருக்கும்போதே சம்பளம் வாங்கின உடனே, முதல்ல போய்ப் புத்தகம் வாங்குவேன். அதுக்கு அப்புறம் ஷூ வாங்குவேன். வாய்ப்பு தேடி அலையும்போது வெறுங்கால்ல நடந்து நடந்து காலே பூத்துப்போய்டும், அப்போ எடுத்த சபதம்தான் ‘நா சம்பாதிச்சன்னா ஷூவா வாங்குவேன்டா’அப்டினு, அந்த ஒரு வலிதான் அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குத் தெரியும். அப்புறம் புத்தகங்கள்… அதான் என்னுடைய சொத்தே. ஆராய்ச்சிப் புத்தகங்கள்ல இருந்து எல்லா விதமான புத்தகங்களும் படிப்பேன்.
‘அப்பா’ எப்போ திரைக்கு வருது?
‘அப்பா’ படத்துக்காகப் பல பிரபலங்கள்கிட்ட இருந்து அவங்க அவங்க அப்பாவப் பற்றிப் பேசச் சொல்லி ட்ரைலர் மாதிரி காணொலிகள் தயார் பண்ணிகிட்டு இருக்கோம். சிவகுமார், இளையராஜா போன்ற பலர் பேசி இருக்காங்க. அந்த வேலைகள் முடிந்ததும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் திரைக்கு வந்துடும். தந்தையர் தினமான ஜூன் 19 -ம் தேதி ரிலீஸ் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை.
ஏன்னா அந்தக் கதையை மத்தவங்களுக்குச் சொல்லிப் புரிய வெக்கறதெல்லாம் சரியா வராது, அந்தக் கதையை அவர் வேறொரு நிலையில ‘கடவுள் காண்போம் வா’ என்ற பெயரில் முழுக் கதையையும் தன் கைப்பட எழுதியிருந்தார்.