

‘கனகவேல் காக்க’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஹரிப்ரியா. பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் தாய்மொழியான கன்னடத்தில் முன்னணிக் கதாநாயகி. தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பியிருக்கிறார். சசிகுமார் ஜோடியாக ‘காமன் மேன்’ படத்திலும் ஆதிராஜன் இயக்கிவரும் ‘மாஸ்க்’ என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மறைந்த கன்னட நாயகன் புனித் ராஜ்குமாரின் மைத்துனரான விஜய ராகவேந்திரா தமிழில் நாயகனாக அறிமுகமாகும் படம்தான் ‘மாஸ்க்’.
சர்ச்சைக்கு நடுவில்…
தன்னுடைய மகன் ராம் சரணுடன் சிரஞ்சீவி இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஆச்சார்யா’. இப்படத்தின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சிரஞ்சீவி, இந்திப் படவுலகம் தென்னிந்தியக் கலைஞர்கள் மீது காட்டி வந்துள்ள பாரபட்சம் பற்றிய தனது கசப்பான அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தார். அது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்நிலையில், தற்போது பாலிவுட் கான் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானை, ‘காட்ஃபாதர்’ படத்தில் தன்னுடன் நடனமாட வரும்படி சீரஞ்சீவி அழைக்க அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். பிரபுதேவா இருவரையும் ஆட வைக்கிறார். ‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா, தற்போது இயக்கிவரும் தெலுங்குப் படம்தான் சிரஞ்சீவி நாயகனாக நடித்துவரும் ‘காட்ஃபாதர்’. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடி நயன்தாரா. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி - என்.வி. பிரசாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ். தமன் இசையமைத்து வருகிறார்.
பார்த்திபனின் பகீரத முயற்சி!
‘புதிய பாதை’யில் இயக்குநராக, நடிகராகத் தொடங்கிய பயணத்தை புதிய தலைமுறை இயக்குநர்களே வியக்கும் வண்ணம் தொடர்ந்து வருகிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ‘ஒத்த செருப்பு - சைஸ் 7’ படத்தில் திரையில் தோன்றும் ஒற்றைக் கதாபாத்திரமாக வந்து, மற்ற கதாபாத்திரங்களை நம் மனத்திரையில் காண வைத்து வியக்க வைத்தார். தற்போது முன்னும் பின்னுமாகக் கதை சொல்லும் ‘நான் - லீனியர்’ திரைக்கதை உத்தியில், ‘இரவின் நிழல்’ என்கிற தலைப்பில் உலகின் முதல் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மேலும் இரண்டு ஆஸ்கர் கலைஞர்கள் வி.எஃப்.எக்ஸ், ஒலியமைப்பு ஆகிய துறைகளில் பணியாற்றிருக்கிறார்கள். முதன்மைக் கதாபாத்திரத்தின் 60 ஆண்டுக் கால வாழ்க்கைப் பயணம்தான் கதை. 59 அரங்கங்கள் கொண்ட பிரம்மாண்டமான செட்டில், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏராளமான ஆடை, ஒப்பனை மாற்றங்களுடன் 90 முறை ஒத்திகை பார்க்கப்பட்டு, சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், 100 நிமிடங்கள் 19 வினாடிகள் ஓடக் கூடியது.
தனியிசையில் ரியோ ராஜ்!
திரைப்படங்களில் இடம்பெறாத, தனியிசைக் காணொளி ஆல்பங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது ‘நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்’ நிறுவனம். இதற்குமுன் இவர்கள் வெளியிட்ட ‘கண்ணம்மா என்னம்மா’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ‘தோட்டா’ என்கிற புதிய காணொளிப் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் வளர்ந்து வரும் நடிகரான ரியோ ராஜும் ரம்யா பாண்டியனும் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி, நித்யஸ்ரீ இணைந்து பாடியிருக்கும் இப்பாடலுக்கு இசை தேவ் பிரகாஷ். இசைக் காணொளியை பிரிட்டோ ஜேபி இயக்கியிருக்கிறார்.
ஒரு சித்தரின் கதை!
‘ஜெய் பீம்’ படத்தில், லாக் - அப்பில் கிடக்கும் நாயகன் ராஜாக்கண்ணுவின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முயலும் போலீஸ்காரராக நடித்து அதிர வைத்தவர் ‘சூப்பர்குட்’ சுப்ரமணி. ‘முண்டாசுப்பட்டி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘ரஜினி முருகன்’ எனப் பல படங்களில் இயல்பான நடிப்பைத் தந்தவர். தற்போது, இவரைக் கதையின் நாயகனாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வெள்ளிமலை’. ஓர் எளிய, சராசரி மனிதன், சக மனிதர்களால் அலைக்கழிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி காடு, மலையென அலைந்து சித்தராகத் திரும்பி, தன்னுடைய கிராமத்தைக் கொள்ளை நோயிலிருந்து காக்கும் கதை. ராஜகோபால் இளங்கோவன் தயாரிப்பில் ஓம் விஜய் இயக்கிவரும் படம் இது.