இயக்குநரின் குரல்: நினைவுகளைக் கிளறுவான் இந்த ‘டான்’

சிபி சக்கரவர்த்தி
சிபி சக்கரவர்த்தி
Updated on
3 min read

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘டான்’. விஜய்யின் ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் படம். ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

‘டான்’ என்ன சொல்ல வர்றார்?

இது ஒரு சாதாரண இளைஞனோட கதை. எல்லோருடைய வாழ்க்கையிலும் சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, காதல், சோகம், கொண்டாட்டம்னு நிறைய இருக்கும். அதெல்லாம் கலந்த அனுபவம்தான் ‘டான்’. நாயகனோட 30 வயசு வரைக்குமான நிகழ்வுகளை ஜாலியா, கேலியா, அன்பா, அழகா சொல்ற கதை இது. படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு அவங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிற உணர்வு வரும். அது மட்டுமில்ல; சில பேர் மேல, இவங்க இப்படித்தான்னு ஒரு பிம்பத்தை உருவாக்கி வச்சிருப்போம்ல..! இந்தப் படத்தைப் பார்த்தா அந்த எண்ணத்தை மாத்திக்கணும்ன்னு நிச்சயமா நினைப்போம்.

கல்லூரிக் கதைன்னு சொன்னாங்களே?

அதுவும் இருக்கும். கல்லூரிக் காட்சிகள் நினைவுகளைக் கிளறும். கல்லூரி மாணவனா நடிக்கிறதுக்காக உடலைக் குறைச்சு, நிறைய மெனக்கெட்டிருக்கார் சிவகார்த்திகேயன். மாணவனா தெரியறதுக்கு என்னவெல்லாம் பண்ணணுமோ அதையெல்லாம் பண்ணியிருக்கார். அது கண்டிப்பா ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

நீங்க எடுத்த குறும்படத்தோட விரிவாக்கம்தான் ‘டான்’ படமா?

இல்லை. நான் ஒரு திரைக்கதை தயார் செஞ்சேன். அதுல இருந்த ஒரு பகுதியை மட்டும் எடுத்து ‘பைலட்’ படமா எடுத்தேன். அதைப் பார்த்துதான் இந்த வாய்ப்பு வந்தது. சிவகார்த்திகேயன் கிட்ட முதல்ல கதை சொன்னேன். கதையில அவருக்குச் சில கேள்விகள் இருந்தன. அந்தக் கேள்விகள் சரியாவும் இருந்தன. பிறகு திரைக்கதையில் அதையெல்லாம் சரி பண்ணி, திரும்பவும் கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சுப்போச்சு! அப்படி உருவானதுதான் இந்தப் படம்.

ஏன் ’டான்’ என்கிற தலைப்பு?

காலேஜ்ல பார்த்தீங்கன்னா, எதையுமே கண்டுக்காம, எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிட்டு, யாரும் கேள்வி கேட்டா, மிரட்டலா பதில் சொல்லிகிட்டுக் கெத்தா சில பேர் இருப்பாங்க. அந்த குருப்பைப் பார்த்தாலே தனியாத் தெரியும். அவங்க தங்களையே ஒரு டான் மாதிரி நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. ‘டான்’ படத்தோட நாயகனும் அப்படித்தான். எல்லாருக்கும் பிடிக்கிற ‘செல்ல டான்’ மாதிரியான கேரக்டர். அதனாலத்தான் இப்படித் தலைப்பு வச்சோம். தலைப்பைப் பார்த்து, ‘இது ஆக்‌ஷன் கதையா?’ன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. படத்துல ஆக்‌ஷன் இருக்கு. ஆனா, ஆக்‌ஷன் படமா இருக்காது. சிவகார்த்திகேயன் படங்கள்ல இருக்கிற அந்த ஜாலி, கேலி விஷயங்கள் இதுலயும் இருக்கு. அது இன்னும் கொஞ்சம் நல்லா, ரியலா அமைஞ்சிருக்குன்னு சொல்வேன்.

சிவகார்த்திகேயன் ஜோடியா மீண்டும் பிரியங்கா மோகன்?

எனக்குத் தமிழ்ப் பேசுற, கதைக்குப் பொருந்துற ஒரு ஹீரோயின் தேவைப்பட்டாங்க. பிரியங்கா மோகன் பொருத்தமா இருப்பாங்கன்னு நினைச்சேன். சிவகார்த்திகேயனோட, ‘டாக்டர்’ படத்துல பண்ணினதைவிட, இதுல அவங்களுக்கு நேரெதிர் கேரக்டர். அதனாலதான் அவங்களும் சம்மதிச்சாங்க. நாங்க நினைச்சதைவிட, அவங்க கேரக்டர் அப்படிப் பொருந்தியிருக்கு. இதுல அங்கயற்கண்ணி அப்படிங்கற கல்லூரி மாணவியா நடிச்சிருக்காங்க. ஹீரோவுக்கு ஜூனியர். வழக்கமான காதல் என்பதைத் தாண்டி, ‘அட!’ன்னு சொல்ற மாதிரி கதையில பிரியங்காவுக்கும் முக்கியத்துவம் இருக்கு.

எஸ்.ஜே.சூர்யா வில்லனாமே?

இது ஹீரோ-வில்லன் கதைன்னு சொல்ல முடியாது. நாம எல்லாருமே சில விஷயங்கள்ல நல்லவங்களா இருப்போம், சில விஷயங்கள்ல மோசமா நடந்துப்போம். எப்பவுமே கெட்டவங்களாவும் எப்பவும் நல்லவங்களாகவும் இருக்கிறதில்லையே. ‘டான்’ல அந்த மாதிரியான கதாபாத்திரங்களைக் கொண்டதுதான். அப்படித்தான் எஸ்.ஜே.சூர்யா கேரக்டரும். அவர் பண்ற விஷயங்கள், அவர் பக்கம் இருந்து பார்த்தா நியாயமா தெரியும். இந்தக் கதையில சிறப்பா நடிச்சிருக்கார். படத்துக்குப் பெரிய பலம்னு சொல்லலாம். சிவகார்த்திகேயனுக்கு அப்பாவா சமுத்திரக்கனி நடிச்சிருக்கார். நடிகர் சூரி, ‘பெருசு’ங்கற எமோஷனலான கேரக்டர் பண்ணியிருக்கார். வழக்கமான சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியைவிட இதுல வேற மாதிரி இருக்கும். அவங்களோட அலப்பறை காமெடி இருக்காது. சூரி, இப்படியும் நடிப்பார்ங்கறதைக் காட்டும் விதமா கேரக்டர் இருக்கும்.

அனிருத் கதைக்குள்ள எப்படி வந்தார்?

இந்தக் கதையை உருவாக்குனதுமே, இரண்டு விஷயங்கள்ல தெளிவா இருந்தேன். ஒன்னு, சிவகார்த்திகேயன் நடிக்கணும். இன்னொன்னு அனிருத் இசை அமைக்கணும். இவங்க ரெண்டு பேரும் இந்தப் படத்துக்குக் கண்டிப்பா வேணுங்கிற முடிவோட இருந்தேன். ஏன்னா, அனிருத் இசைதான் இந்தக் கதைக்குச் சரியா இருக்கும்னு நினைச்சேன். நினைச்சது தானா நடந்தது. எல்லா பாடல்களும் சிறப்பாக வந்திருக்கு. குறிப்பாக ‘ஜலபுலஜங்கு’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடிச்சிருக்கு.

படத்துல நிறைய நடிகர்கள்! எல்லோரையும் ஒருங்கிணைச்சு படமாக்கினது கஷ்டமா இல்லையா?

ஆமா.. பால சரவணன், காளி வெங்கட், முனிஷ்காந்த், ஷிவாங்கி, ஜார்ஜ், ராதாரவி, ராஜூ ஜெயமோகன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. எல்லாருக்குமே நல்ல கேரக்டர். சிறப்பா நடிச்சிருக்காங்க. நிறைய நடிகர், நடிகைகளை வச்சுப் படமாக்கினது கஷ்டமாத் தெரியலை. ஏன்னா, ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ படங்கள்ல நிறைய நடிகர்களோட வேலை பார்த்திருக்கேன். அது எனக்கு உதவியா இருந்தது.

- செ.ஏக்நாத்ராஜ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in