Published : 25 May 2016 10:15 am

Updated : 25 May 2016 12:56 pm

 

Published : 25 May 2016 10:15 AM
Last Updated : 25 May 2016 12:56 PM

திரை விமர்சனம்: மருது

சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார்.

உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கதையிலாவது புதுமை யைப் புகுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. நாயகன் திரையில் எப்போது தோன்றுவார், நாயகி எப்போது பிரசன்னமாவார் என்பதெல்லாம் எதிர்பார்த்தபடியே நடக்கின்றன. வாயில் கத்தியைக் கடித்தபடி விஷால் ஓடி வரும் காட்சியைப் பார்க்கும்போதே படத்தை நினைத்து கதி கலங்கு கிறது. திருப்பங்களும், காட்சிகளும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த படியே அடுத்தடுத்து வந்துகொண் டிருக்கின்றன. எல்லோரும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக் கிறார்கள். கதாநாயகியைக் காதலிக்க வைக்க நாயகன் எடுக்கும் முயற்சிகள் பார்வையாளர்களை சோகத்தின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன.

கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத் திரங்களையும் பஞ்ச் வசனம் பேசவைக்க மெனக்கெட்டிருக்கும் இயக்குநர், இதில் பாதி கவனத்தை திரைக்கதையில் செலுத்தியிருந்தால், பழைய கதைக் களத்துக்குள் புதுப்பயணம் போய் வந்த அனுபவத்தை சாத்தியப் படுத்தியிருக்கலாம். கற்பனை வளமற்ற காதல் நாடகம் முடிந்து கதைக்குள் வருவதற்குள் இரண்டு மூன்று படங்கள் பார்த்த களைப்பு ஏற்பட்டுவிடுகிறது.

அவ்வளவு வலுவான, கொடூரமான வில்லனை எதிர்த்து ஒரு சாதாரண வக்கீலும் அவரது மகளும் எந்த தைரியத்தில் போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. விஷால் போன்ற யாராவது காப்பாற்ற வருவார்கள் என்ற தைரியமாகத்தான் இருக்கும்!

கதாபாத்திரங்களை வார்த்த விதத்திலும் பெண் கதாபாத்திரங் களுக்குத் தந்த முக்கியத்துவத் திலும் வழக்கமான கதைக்குப் புதிய வண்ணம் காட்ட முயற்சித் திருக்கிறார் இயக்குநர். அவற்றில் முக்கியமானது விஷாலின் பாட்டி யாக நடித்திருக்கும் கொளப்புள்ளி லீலா பாத்திரம். கதாநாயகனின் பாட்டி என்றால், நடைமுறை தெரியாத வெள்ளந்தியான மூதாட்டி என்னும் வழக்கத்தை மாற்றி, பல்வேறு அடுக்குகள் கொண்டதாக இந்தப் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர். நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்துடன் ரசிகர்களை ஈர்க்கும் பாத்திரம் இது. கண்முன் நிகழும் அவலங்களைக் களைய விரும்பும் துணிச்சலான பெண்ணாக வரும் சிலம்பம் மாரியம்மா கதாபாத்திரமும் வலுவானது.

மண் சார்ந்த பண்பாட்டு அம்சங் களிலும் ஒரு சில பாத்திரங்களிலும் வசனங்களிலும் சண்டைக் காட்சி களைப் படமாக்குவதிலும் (சண்டை அமைப்பு: அனல் அரசு) விசேஷ கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர். சில உண்மைச் சம்பவங் களை நினைவூட்டும் விதமாகத் திரைக்கதையை அமைத்திருக் கிறார். திரைக்கதையின் போக்கை வழக்கமான பாதையிலிருந்து திசை திருப்பியிருந்தால் அவரது உழைப்புக்கு மேலும் பலன் கிடைத்திருக்கும்.

சுமை தூக்கும் தொழிலாளி மருதுவாக மாற விஷாலின் உயர மும் உடற்கட்டும் எளிமையான தோற்றமும் உதவியிருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் காட்டும் வேகமும் உழைப்பும் பாராட்டுக் குரியவை. பாத்திர வார்ப்பில் புதுமை இல்லாததால் அவரது நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

மலையாளப் படவுலகில் சிறந்த நகைச்சுவை நடிகையாக விளங்கும் கொளப்புள்ளி லீலா தமிழுக்கு மிகச் சிறந்த வரவு. நாடக அரங்கில் இருந்து வந்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமியும் முத்திரை பதிக்கிறார். திவ்யாவுக்கு நடிப் பதற்கான வாய்ப்பு அமைந்திருக் கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ், ராதாரவி ஆகி யோர் கிடைத்த வாய்ப்பில் கச்சித மாக மின்னுகிறார்கள். அவ்வப் போது சிரிக்கவைக்கும் சூரி தன் னால் உணர்வுபூர்வமான காட்சி களிலும் நடிக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

ராஜபாளையம், அதைச் சுற்றி யுள்ள பகுதிகள் எனக் கிடைக்கும் பசுமை, காரை வீடுகள் அமைந்த ஊர்களின் குறுகலான தெருக்கள் என மதுரை, தேனி வட்டாரச் சூழ்நிலையை தனது ஒளிப்பதிவு மூலம் தத்ரூபமாகக் காட்சிப்படுத்துகிறார் வேல்ராஜ். வீரசமரின் கலை இயக்கமும் கதைக் களத்துக்கு நம்பகத்தன்மையைத் தருவதில் ஒத்துழைக்கிறது. பின் னணி இசையில் உழைத்திருக்கும் இமான், மெட்டுக்கள் புதிதாக இருக்க மெனக்கெடவில்லை.

மின்னும் வீச்சரிவாள்கள், தெறிக் கும் ரத்தம், குடும்ப சென்டிமென்ட், துரத்தித் துரத்திக் காதலிக்கும் நாயகன் ஆகிய வழக்கமான மசாலா சமாச்சாரங்களுடன் தயா ரான வழக்கமான விருந்துதான் முத்தையா விஷால் கூட்டணியின் ‘மருது’. திரைக்கதைப் பயணத் திலும் காட்சிகளிலும் புதுமை கூட்டியிருந்தால் இந்த மசாலா ருசித்திருக்கும்.
இந்து டாக்கீஸ்திரை விமர்சனம்மருதகருத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author