

மாஸ் படங்கள், தரமான கதைகளைக் கொண்ட படங்கள் என இரண்டு தளங்களில் சுழன்றடிக்கும் சூர்யா, ஒரு தயாரிப்பாளராகவும் தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்து வருகிறார். அவருடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் தற்போது பாலிவுட்டிலும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி மறு ஆக்கத்தை பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலருடன் கைகோத்துத் தயாரிக்கிறார் சூர்யா. இதில் நாயகனாக அக்ஷய்குமாரும் நாயகியாக ராதிகா மதனும் நடிக்கிறார்கள். சுதா கொங்கராவே இந்திப் பதிப்பையும் இயக்குகிறார். இதற்கிடையில் ‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நாயகன் அறிமுகம்!
லிங்குசாமியின் இயக்கத்தில் தெலுங்குப் படவுலகின் பிரபல நாயகன் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் படம் ‘தி வாரியர்’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தை, சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கதாநாயகனை சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் லிங்குசாமி. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘புல்லட் சாங்’ என்கிற டூயட் பாடலை சென்னையில் வெளியிட்டனர். வெளியான வேகத்தில் வரவேற்பைப் பெற்றுவரும் இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக இருக்கும் கதாநாயகி ‘சியாம் சிங்கா ராய்’ படப் புகழ் கீர்த்தி ஷெட்டி!
‘கள்ளபார்ட்’ ஆக அரவிந்தசாமி!
அரவிந்த்சாமி, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள ‘கள்ளபார்ட்’ திரைப்படம் மே மாத வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. விக்ரம் - தமன்னா நடித்திருந்த ‘ஸ்கெட்ச்’ படத்தைத் தயாரித்த மூவிங் பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இது. ‘அச்சமின்றி’ படத்தின் இயக்குநர் ராஜபாண்டி இயக்கியிருக்கிறார். “படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் ‘கள்ளபார்ட்’ என்கிற குணாதிசயம் பொருந்தும். எந்தக் கதாபாத்திரம் எந்த நேரத்தில் எதைச் சாய்க்கும் என்று பார்வையாளர்களால் ஊகிக்கவே முடியாது. அப்படியொரு இருக்கை நுனி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு அரவிந்த் சாமிக்கு இந்தப் படம் முன்னோக்கிய நகர்வாக இருக்கும்” என்று கூறுகிறார் இயக்குநர்.
செல்ல ‘டான்’ பராக்!
சிவகார்த்திகேயன் - ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இடையிலான ‘சம்பள பாக்கி’ வழக்கு ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜாலியான கல்லூரி வளாகப் படமாக உருவாகியிருக்கும் இதில், மாணவர்களின் செல்ல ‘டான்’ ஆக நடித்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு டஃப் கொடுப்பவர் எஸ்.ஜே.சூர்யா. சமுத்திரக்கனிதான் சிவகார்த்திகேயனுக்கு அப்பா. இவர்களுடன் சூரி, முனீஸ்காந்த், கௌதம் மேனன், காளி வெங்கட், ராதாரவி என ஏகப்பட்ட நடிகர்கள்! ‘டாக்டர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் ப்ரியங்கா அருள் மோகன்.
கீர்த்தி எடுத்த ஆயுதம்!
‘ராக்கி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த, அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கியிருக்கும் படம் ‘சாணிக் காயிதம்’. கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்துள்ள இந்தப் படம், அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் மே 6-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ‘தொடர் கொலைகளைச் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்?’ என்கிற நெட்டிசன்களின் கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் மௌனம் காக்க, இக்கேள்விக்கான பதிலை படத்தின் இயக்குநர் கூறியிருக்கிறார். ‘இதுவரை செய்யாத, புதுமையான கதாபாத்திரம் ஒன்றை நீங்கள் செய்யும்போது அதைக் காண உங்கள் ரசிகர்கள் விருப்பத்துடன் காத்திருப்பார்கள் என்று சொன்னேன். உடனே அவர் ஒப்புக்கொண்டார். இந்தப் படம் கீர்த்திக்கு ஒரு ஆயுதம் போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.