

அழகான முகம், அசத்தும் வெண்கலக் குரல், சுத்தமான தமிழ் உச்சரிப்பு, இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் சக்கரவர்த்தி. வெள்ளித்திரையில் எத்தனையோ பேர் மகாகவி பாரதியாகத் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.வி.சுப்பையா. டி.கே.சண்முகம், மராத்தி நடிகரான சாயாஜி ஷிண்டே ஆகியோரை எப்படி மறக்க முடியாதோ, அவர்களுக்குச் சற்றும் குறையாத கம்பீரமான தோற்றப் பொருத்தத்துடன் ஒரு படம் முழுவதும் பாரதியாகத் தோன்றி, தமிழ்த் திரை வரலாற்றில் இடம்பிடித்தவர் மதுரை பெரியகுளத்தில் பிறந்து, வளர்ந்த சக்கரவர்த்தி வேலுச்சாமி.
பள்ளிப் படிப்புக்குப் பின், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பொருளியல் பட்டம் பெற்றவர். அங்கே படிக்கும்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் சாலமன் பாப்பையா. கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக, கல்லூரி நாடகங்களில் கிடைக்கும் கதாபாத்திரம் எதுவென்றாலும் அதில் நடித்து அசத்தும் இளைஞராக சக்கரவர்த்தியைக் கண்டார் சாலமன் பாப்பையா. கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப்போட்டியில் பாரதியாராக நடித்து, முதல் பரிசைத் தட்டிகொண்டுவந்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார்.
அப்போது சக்கரவர்த்தியை அழைத்த சாலமன் பாப்பையா, ‘நீ சென்னைக்குச் சென்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை நடத்திவரும் நடிப்புப் பள்ளியில் சேர்ந்துவிடு. அங்கே சினிமாவுக்கு எப்படி நடிப்பது என்பதைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். உனது குரலுக்கும் உச்சரிப்புக்கும் திரையுலகம் உன்னை உச்சிமுகர்ந்துகொள்ளும்’ என்று வழிகாட்டினார். பட்டப்படிப்பு முடிந்ததும் 1977-ல், பிலிம் சேம்பர் நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார் சக்கரவர்த்தி. அந்த வருடத்தில் அவருடன், பின்னாளில் திரையுலகில் புகழ்பெற்ற சுதாகர், ‘வாகை’ சந்திர சேகர், திலீப் எனப் பலர் படித்தனர்.
அறிமுகப்படுத்திய எஸ்பி.எம்
எண்பதுகளில், ரஜினி உள்ளிட்ட பலரின் நடிப்புப் பள்ளி மாணவர்களின் திரையுலக வெற்றியின் காரணமாக சக்கரவர்த்திக்கும் அறிமுக வாய்ப்பு அட்டகாசமாகவே அமைந்தது. சக்கரவர்த்தியின் திறமையைக் கண்ட எஸ்பி.முத்துராமன், ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ (1979) படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். மேலும், அடுத்தடுத்து தன்னுடைய மூன்று படங்களில் நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தார். அவற்றில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ரஜினியின் தம்பியாக, ‘ரிஷிமூலம்’ படத்தில் சிவாஜி கணேசன் - கே.ஆர்.விஜயா தம்பதிக்கு மகனாக நடித்தது, சக்கரவர்த்தியின் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியது.
இப்படித் தொடங்கிய திரைப் பயணத்தில், பத்திரிகையாளர் எம்.ஜி.வல்லபன் இயக்கிய ‘தைப் பொங்கல்’ (1980) படம் அவருக்குக் கதாநாயகனாக உயர்வு தந்தது. இதில் சக்கரவர்த்திக்கு ஜோடி ராதிகா. எம்.ஜி.வல்லபனின் வரிகளுக்கு இளையராஜா அளித்திருந்த இசை, ‘தைப் பொங்கல்’ படத்தைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தீர்த்தக்கரை தனிலே.. செண்பக புஷ்பங்களே..’ பாடல் காட்சியில், காதலின் வெறுமை உருவாக்கும் துயரத்துக்குத் தன் அளவான சோக நடிப்பால் உயிரூட்டியிருப்பார் சக்கரவர்த்தி.
தொட்டுத் தொடர்ந்த பாரதி!
அதன்பிறகு கதாநாயகன், குணச்சித்திரம் என 86 திரைப்படங்களில் தன் இருப்பை உணர வைத்த சக்கரவர்த்திக்குச் சில படங்கள் மறக்க முடியாதவையாக மாறின. அவற்றில் ஒன்று கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய ‘தூக்குமேடை’ (1982). இதில் ‘வாகை’ சந்திரசேகரும் சக்கரவர்த்தியும் இரண்டு கதாநாயகர்கள். அமிர்தம் இயக்கிய இந்தப் படம், கலைஞர் எழுதி அதே தலைப்பில், இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்து வந்த சமூகச் சீர்திருத்த நாடகத்தின் தழுவல். நாடகத்தில் கலைஞர் கருணாநிதி ஏற்று நடித்த கதாபாத்திரத்தைத்தான் திரைப்படத்தில் சக்கரவர்த்தி ஏற்று நடித்தார்.
‘நான் நடித்த கதாபாத்திரத்தில் நீ நடிக்கிறாய்’ என்று சொல்லிப் பாராட்டிப் பரிந்துரைத்தவர் கலைஞர்தான் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் சக்கரவர்த்தி. சந்திரசேகரும் சக்கரவர்த்தியும் பக்கம் பக்கமாகக் கலைஞரின் முத்திரை வசனங்களைப் பேசி நடித்துப் பாராட்டுகளை அள்ளினார்கள். ‘தூக்குமேடை’ வெளிவந்தபோது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அது உருவாக்கிய தாக்கத்தின் காரணமாக, சந்திரசேகர் மீதும் சக்கரவர்த்தி மீதும் திமுக நடிகர்கள் என்கிற முத்திரை விழுந்தது. ‘தூக்கு மேடை’ படத்தில் கல்லூரியில் கலைவிழா நடப்பதுபோல ஒரு காட்சி. அதில் பாரதியாகப் பாடி நடித்தார் சக்கரவர்த்தி. அதைப் பார்த்த இயக்குநர் மகான், தான் இயக்கிய ‘கொட்டு முரசே’ படத்தில் கதையின் நாயகன் பாரதியாக நடிக்கச் சக்கரவர்த்தியை அழைத்தார்.
மகாகவி பாரதியாரின் வாழ்க் கையைப் படமாக்கும் தொடக்க முயற்சியாக அமைந்த ‘கொட்டு முரசே’ சக்கரவர்த்தியின் மொத்த திறமையையும் வெளிக்காட்டிய படம். மிடுக்கான தோற்றமும் கம்பீரக் குரலும், கவிதைகளை அவர் உச்சரித்த விதமும் ‘பாரதியைக் கண்முன் காட்டிவிட்டார்’ எனப் பத்திரிகைகள் பாராட்டின. வீரமணி – சோமு இசையமைப்பில், வேறு எந்தத் திரைப்படத்திலும் பயன்படுத்தியிராத மகாகவி பாரதியின் நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றன. ஆனால், அந்தப் படம் மக்களிடம் சரிவரச் சென்றடையவில்லை. ஆனால், “என்னிடமிருந்த இலக்கிய தாகத்தை, பாரதியின் கதாபாத்திரங்களில் நடித்ததன் வழியாகப் புதுப்பித்துக்கொண்டேன். நான் ஒரு எழுத்தாளனாகவும் கவிஞனாகவும் பாடலாசிரியனாகவும் இசையமைப்பாளனாகவும் இருப்பதற்குப் பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த கவிஞர்களும்தாம் காரணம். அவர்களுடைய கவிதைத் தமிழை வாசித்தே என் குரலையும் உச்சரிப்பையும் இன்னும் செதுக்கிக்கொண்டேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் சக்கரவர்த்தி.
குரலால் கோட்டை கட்டிய கலைஞன்!
குரலால் ஏற்றம்பெற்ற சக்கர வர்த்தியின் நடிப்புத் திறனை வெறும் சைகை மொழி வழியாக வெளிப்படுத்த வைத்த ஒரு படமும் உண்டு. அது 1982-ல் வெளிவந்த ‘முள்ளில்லாத ரோஜா’. வாய் பேசமுடியாத கிராமத்து இளைஞனாக படம் முழுவதும் வந்து உடல்மொழி வழியாக அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டினார்.
“திரையுலகில் பெரும்பாலான பிரபலங்களுக்கு நெருக்கமான நண்பராக இருந்த சக்கரவர்த்தி யாரிடமும் தனக்காக எதையும் கேட்டுப் பெற்றதில்லை. அவனைப் போல ஆடம்பரம் இல்லாத, திறமையான கலைஞனைப் பார்க்க முடியாது” என்று கூறியிருக்கிறார் ராதா ரவி.
சென்னையில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்துகொண்டு வந்த நேரத்தில், ‘பெப்சி - படைப்பாளிகள்’ பிரச்சினை ஏற்பட்டு, தமிழ்த் திரையுலகம் ஓராண்டுக் காலம் வேலை நிறுத்தப் போராட்டத்தைச் சந்தித்தது. அப்போது, குடும்பத்தைக் காக்கும் பொருட்டு மும்பைக்குக் குடிபெயர்ந்தார் சக்கரவர்த்தி. அப்போது, மும்பை தூர்தர்ஷன் அலைவரிசை, இந்தியில் உருவான தொடர்களை பிராந்திய மொழிகளில் ‘டப்’ செய்து ஒளிப்பரப்ப முன்வந்தபோது, சென்னையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ‘தமிழ்க் குரல்’ சக்கரவர்த்தியினுடையது. தொலைக்காட்சித் தொடர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கிய சக்கரவர்த்தி, தமிழ்த் திரையில் ஒரு இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் மறுபிரவேசம் செய்யவேண்டும் என்கிற தாகத்துடன் உலாவந்தார். அந்த நேரத்தில் ராடான் டெலிவிஷன் நிறுவனம் ‘காவேரி’ என்கிற தொடரில் அவரை வில்லனாக நடிக்க வைத்து அழகு பார்த்தது.
ஆனால், இந்தியாவின் வர்த்தக விளம்பரங்களின் தயாரிப்புக் கேந்திரமாக இருக்கும் மும்பை, சக்கரவர்த்தியைச் சென்னைக்கு வரவிடவில்லை. அவர் அங்கே தவிர்க்கவே முடியாத ‘வாய்ஸ் ஆர்டிஸ்ட்’ ஆனார். இதுவரை 15 ஆயிரம் விளம்பரப் படங்களுக்குத் தன்னுடைய குரல் சேவையை வழங்கியிருக்கிறார். இவற்றுடன் இந்தி, ஆங்கிலப் படங்களில் வரும் கதாநாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் குரல் கொடுத்து அசத்தியிருக்கும் சக்கரவர்த்தி மறைந்துவிட்டாலும் அவரைக் ‘குரல் வழியே கோட்டை கட்டிய கலைஞன்’ எனக் கொண்டாடலாம். சக்கரவர்த்தி - லலிதா தம்பதிக்கு சசிகுமார், அஜய் குமார் என இரண்டு மகன்கள்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி : ஞானம்