

குழந்தைகளை முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட சிறார் திரைப்படங்கள் வெகு அரிதாகவே தமிழில் உருவாகின்றன. புத்தாயிரத்துக்குப் பிறகு வெளியான ‘காக்கா முட்டை’ படத்தை ஏற்கத்தக்க முயற்சி எனலாம். தற்போது, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘ஓ மை டாக்’ ஒரு வெகுஜன சிறார் திரைப்படம் எனலாம்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் (அர்னவ்) என்கிற சிறுவன் தனக்கென ஒரு செல்ல நாயை வளர்க்க ஆசைப்படுவதுதான் கதை. அப்பா - அம்மா, தாத்தாவுடன் வசிக்கும் அந்தச் சிறுவனுக்குக் கண் பார்வையற்ற நாய்க் குட்டி கிடைக்கிறது. செல்வந்தர்கள் மட்டும் விலைகொடுத்து வாங்கி வளர்க்கக்கூடிய சைபீரியன் ஹஸ்கி வகை அது. அது அவன் கைக்குக் கிடைப்பதே ஒரு கண்ணீர்க் கதை. கண் தெரியாத நாய்க்குட்டி என்பதால் அதைக் கொன்றுவிடும்படி தன் வேலையாட்களுக்கு உத்தர விடுகிறார் நாய்களைப் பழக்கி, மாநில அளவில் போட்டிகளுக்கு அனுப்பும் ஒரு செல்வந்தர்(வினய் ராய்). எதிர்பாராதவிதமாகத் தப்பித்துவிடும் அந்த நாய்க்குட்டி அர்ஜுன் கைக்கு வந்து சேர்கிறது. பல தடைகளைத் தாண்டி அதை எப்படி தன்னுடைய செல்ல நண்பனாக அர்ஜுன் தக்கவைத்துக்கொண்டான் என்பதுதான் திரைக் கதையாக விரிகிறது.
ஒரு சிறந்த சிறார் படம் என்பது குழந்தைகள் உலகத்துக்குள்ளும் அவர்களின் உள்ளத்துக்குள்ளும் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். அதேபோல, பெரியவர்களையும் குழந்தைகளாக உணர வைப்பதுடன், சிறார்களின் உலகை அவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்புத் தரும் தருணங்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையான அம்சங்களுக்குப் பொருந்திவிடுகிறது ‘ஓ மை டாக்’.
அர்ஜுனாக நடித்திருக்கும் அர்னவ், ஒரு குழந்தை நடிகராகத் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. அருண் விஜய், மகிமா, விஜயகுமார், வினய் ராய் என அனைவரும் சரியாக வந்து செல்கிறார்கள். அருண் விஜய்க்கான ப்ளாஷ் பேக்கும் அவருக்கான ஒரு சண்டைக்காட்சியும் அவ்வளவாக மையக் கதையுடன் ஒட்டவில்லை. இதைத் தவிர, செல்லப்பிராணிகள் மேல் பிரியம் கொள்ளும் குழந்தைகளின் மனவெளியை இந்தப் படத்தில் உணர்வுபூர்வமாகவும் பெரியவர்களுக்கான பார்வையில் ஒரு திறப்பாகவும் சித்திரிப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் சரோவ் சண்முகம்.