

‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நானி. பிறகு ராஜமௌலியின் ‘நான் ஈ’ படம் வழியே இங்கே நன்கு பரிச்சயமானார். ‘ஆஹா கல்யாணம்’, ‘நிமிர்ந்து நில்’ படங்களும் நானிக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தன. ஆனால், தாய்மொழியான தெலுங்கில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியாக முன்னணி வரிசையில் இடம்பிடித்தார். தற்போது ஓடிடியில் வெளியான ‘ஷியாம் சிங்கா ராய்’ படம் அவரை இந்திய நடிகர் ஆக்கிவிட்டது. தற்போது நானியும் நஸ்ரியாவும் இணைந்து நடித்துள்ள 'அண்டி சுந்தரானிகி' என்கிற தெலுங்குப் படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்கிற பெயரில் வெளியாகிறது. கடந்த 2014-ல் வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் நடித்திருந்த நஸ்ரியா, தன்னுடைய திருமணத்துக்குப் பின் நடிக்கவில்லை. நானியும் நஸ்ரியாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் ‘அடடே சுந்தரா’வுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!
பாரதிராஜாவின் பாராட்டு!
தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த கருணாஸ், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது, கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் படம் ‘ஆதார்'. ராம்நாத் பழனிக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு காந்த் தேவா இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் இசையை வெளியிட்டுப் பேசினார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா: “எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால், அதிலும் சினிமாக்காரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். திரையுலகில் கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. தமிழ்ப் படங்களைவிட, அண்மைக் காலமாக தெலுங்குப் படங்களை பிரம்மாண்டமாக உருவாக்கி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ், மலையாள சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி மேலே இருக்கிறது” என்றார்.
ரயில் இன்ஜினில் ‘விக்ரம்’
ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை விமானத்தில் வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் தாணு. தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கமல் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரயில் இன்ஜின் முழுவதும் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பிரபலமாகிவருகிறது. கமலுடன் ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி ஆகிய இரண்டு முக்கியமான நடிகர்களும் இணைந்து நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. ‘விக்ரம்’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.
‘பட்டாம்பூச்சி’ ரெடி!
சுந்தர்.சி நாயகனாகவும் முதல்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ என்கிற படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் பத்ரி இயக்கியுள்ள இப்படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெய் ஒப்புக்கொண்டது ஏன் என்பதற்கு படம் பதில் சொல்லும்” என்கிறார் இயக்குநர் பத்ரி. ஜெய்யை சட்டத்தின் முன்னால் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்க முயலும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர்.சி நடித்திருக்கிறாராம்.
‘கதிர்’ பற்றிய பேச்சு!
ஒரு படம் எல்லா விதத்திலும் சிறப்பாக உருவாகியிருந்தால் அப்படம் பற்றி வெளியீட்டுக்கு முன்பே கோடம்பாக்கத்தில் பேச்சு கிளம்பும். அறிமுக இயக்குநர் தினேஷ் பழனிவேல் இயக்கியிருக்கும் ‘கதிர்’ படத்தின் டீசர் வெளியானது முதலே அப்படம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது.. “சில ஆண்டுகள் ஐடி துறையில் பணிபுரிந்தேன். ஆனால், சினிமாவே லட்சியமாக இருந்தது. குறும்படங்களை இயக்கி பயிற்சி எடுத்துக்கொண்டபின் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறேன்.
வாழ்க்கை தரும் பலவிதமான அனுபவங்களுடன் சென்னையில் குடியேறுகிறான் நாயகன். அந்த வீட்டின் உரிமையாளர் சாவித்திரி பாட்டியுடன் முதலில் முரண்படும் அவன், பிறகு அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு எப்படி சமூகத்துக்கான மனிதனாக அவன் மாறுகிறான் என்பது கதை. சாவித்திரிப் பாட்டி கதாபாத்திரத்தில், மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ரஜினி சாண்டியை தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். நாயகியாக சென்னை மாடல் பவ்யா நடிக்கிறார். ப்ளாஷ் பேக்கில் வரும் கதையில் சந்தோஷ் பிரதாப்பும் ஆர்யா ரமேஷும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். மலையாள, இந்திப் படவுலகில் புகழ்பெற்ற பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கிறார்” என்கிறார்.