

ஆர்யா நடித்திருக்கும் ’கேப்டன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன். ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ என வித்தியாசமான ஜானரில் படங்களை இயக்கியவர். ‘கேப்டன்’ படமும் அப்படிப்பட்டதுதான் என்கிறார்.
அறிவியல் புனைவுக் கதைன்னு சொன்னாங்களே…?
எனக்கும் ஆர்யாவுக்கும் பெரிய படமா அமைஞ்சிருக்கு. பட்ஜெட் ரீதியாக எதிர்பார்க்காத அளவுக்கு தயாரிப்பாளர்கள்கிட்டேயிருந்து பெரிய ஆதரவு கிடைச்சிருக்கு. சென்னை சத்யம் தியேட்டர் உரிமையாளர் ஸ்வரூப் ரெட்டி, ஆர்யா ரெண்டு பேரும் சேர்ந்து தயாரிக்கிறாங்க. இந்தப் படத்தை தியேட்டர்ல பார்த்தா மட்டும்தான் கதையில இருக்கிற த்ரில்லை உணர முடியும். என்னோட ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களோட திரையரங்க அனுபவத்துக்காகத்தான் எடுக்கறேன். இந்தப் படத்தையும் அந்த அடிப்படையிலதான் எடுத்திருக்கேன்.
படத்தோட ‘முதல் பார்வை’யில பார்த்த அந்தப் பிராணி என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
இது ராணுவப் பின்னணியில் நடக்கிற ஆக்ஷன் படம். ஆர்யா ராணுவ அதிகாரியாக நடிச்சிருக்கார். அவர் என்ன பண்றார்ங்கறதுதான் படம். ‘ஃபர்ஸ்ட் லுக்’ல பார்த்த பிராணி பற்றி கேட்கிறாங்க. அது வேற்றுக் கிரகவாசியா? இல்ல.. புதிரான மிருகமா? அது என்னங்கறதை இப்பவே வெளியிட வேண்டாம்னு நினைக்கிறேன். அது ஓரு உயிருள்ள பிராணிங்கிறது மட்டும் நிச்சயம்!
படத்தின் டிசைனை உருவாக்க அதிக நாள் எடுத்துக்கிட்டீங்களாமே?
பொதுவா படத்தோட டிசைனை எளிதாப் பண்ணிடலாம். ஆனா, இந்தப் படத்துக்கு அப்படிப் பண்ண முடியலை. மற்ற எதையும் பிரதிபலிக்கிற மாதிரி இருந்துடக் கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டோம். அதனாலதான் ஒரு வருஷம் ஆகிப்போச்சு!
நம்மூருக்கு இந்தக் கதை புதுசுதான். எவ்வளவு பிரம்மாண்டமா வேணும்னாலும் ஒரு பாட்டுக்கு செட் போட்டிரலாம். இதை அப்படிப் பண்ண முடியாது. நான் பண்ற படங்கள் தமிழுக்குப் புதுசு.
படத்துல சிம்ரன் இருக்காங்களே...
பெரிய அனுபவம் உள்ள நடிகர் அவங்க. படத்துல ஒரு கேரக்டருக்கு அவங்களை மாதிரி ஒருவர் தேவைப்பட்டது. முதல்ல, எனக்கு பயமா இருந்தது. ஆக்ஷன் படத்துக்குள்ள வர்றப்போ, அவங்களுக்கு இதெல்லாம் சரியா இருக்குமான்னு யோசிச்சேன். ஆனா, நான் பணியாற்றிய கேரக்டர் நடிகர்கள்லயே ரொம்ப எளிமையான ஆர்டிஸ்ட் அவங்கதான்னு புரிஞ்சுது.
ஆக்ஷன்ல ஆர்யா ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்காராமே?
அவர் மாதிரி இந்தியாவுல வேற எந்த ஹீரோவுமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை. ஒரு காட்சிக்காக மூணு நாள் 120 அடி உயரத்துலயே தொங்கிட்டு இருந்தார். கீழே என்னதான் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாலும் அது ரொம்ப ரிஸ்க். விழுந்தா கண்டிப்பா பெரிய காயங்கள் ஏற்படும். ஆர்யாவின் அந்த அர்ப்பணிப்பு, உழைப்பு பெரிய ஆச்சரியம்!
நீங்க இயக்குற ஒவ்வொரு ஹீரோவுடனும் இரண்டு படங்கள் பண்ணணும்கிறது ஏதும் ஒப்பந்தமா?
அப்படி ஏதும் இல்லை. அது எனக்கு கிடைச்ச பாக்கியம்னுதான் நினைக்கிறேன். ‘படம் முடிஞ்சதுமே இயக்குநரும் ஹீரோவும் பேசிக்கிறதில்லை’ன்னு சினிமாவுல கேள்விப்படறது உண்டு. எனக்கு அப்படி ஏதும் இல்லை. ஹீரோவும் இயக்குநரும் தொடர்ந்து பிரஷர்லதான் தினமும் வேலைப் பார்க்கிறாங்க. அதனால ரெண்டு பேருக்கும் நல்ல பந்தம் இருந்தாதான் அதைத் தொடர முடியும். எனக்கு அந்த மாதிரி அமைஞ்சிருக்கு. சிபி, ஜெயம் ரவி, ஆர்யா எல்லோரோடயும் நட்பு தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.
பான் இந்தியா படங்கள் பண்ற எண்ணம் இருக்கா?
அது என் கையில இல்லை. ஆனா, ரெண்டு மொழி படம் பண்ற வாய்ப்பு வந்தது. மறுத்துட்டேன். ’தமிழ்ல பண்றேன், வேணுமானா டப் பண்ணி வெளியிடுங்க’ன்னு சொல்லிட்டேன். எனக்குத் தெரிஞ்சது தமிழ்ப் படங்கள்தான். தமிழ் ரசிகர்களுக்குத்தான் படம் பண்ண முடியும். வேற மொழி படங்கள்ல வேலை பார்க்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. சினிமா மொழி சார்ந்த கலை. அதனால, யாருக்காக படம் எடுக்கிறோம்னு தெரியாம படம் எடுத்தா வெற்றி குறைஞ்சிரும்கிறது என் நம்பிக்கை.