

தம்பியின் காதலுக்குத் தோள் கொடுக்கப்போய் தன் காதலைப் பறிகொடுக்க நேரும் ஒரு அண்ணனின் கதைதான் ‘வெற்றிவேல்’.
தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் உரக்கடை நடத்துகிறார் வெற்றிவேல் (சசிகுமார்). வேளாண்மை மையம் ஒன்றில் இயற்கை விவசாய அதிகாரியாகப் பணிபுரியும் கேரளப் பெண்ணாகிய மியா மீது காதலாகிறார். தனது காதலை மியாவிடம் சொல்லும் முன் தம்பியின் (ஆனந்த நாக்) காதல் அவரது கவனத்துக்கு வருகிறது. தம்பி காதலிப்பதோ பக்கத்து கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான பிரபுவின் மகள். அப்பாவை (இளவரசு) அவரிடம் அனுப்பி முறைப்படி பெண் கேட்கிறார்கள். ஆனால், வேறு சாதியைச் சேர்ந்த பிரபு நாசூக்காக மறுத்துவிடுகிறார். நண்பர்கள் உதவியுடன் தம்பியின் காதலியைக் கடத்தி திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார் சசிகுமார். அவரது முயற்சி என்னவானது? மியா மீதான காதல் என்னவானது?
முதன்மைக் கதாபாத்திரங்களின் பிரச்சினையை அறிமுகப்படுத்தியபடிதான் பெரும்பாலும் திரைக்கதைகள் தொடங்கும். ஆனால், அண்ணன் (பிரபு), தங்கை (விஜி சந்திரசேகர்) ஆகிய துணைக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான பகையை அறிமுகப்படுத்தியபடி படத்தைத் தொடங்குகிறார் அறிமுக இயக்குநர் வசந்தமணி. இதில் இயல்பாக வந்து பொருந்திக்கொள்கின்றன முதன்மைக் கதாபாத்திரங்கள்.
பிரபு, விஜி மட்டுமல்ல, ஆனந்த நாக், இளவரசு, ரேணுகா, மியா ஜார்ஜ், நிகிலா, வர்ஷா, தம்பி ராமையா ஆகியோர் ஏற்றுள்ள துணைக் கதாபாத்திரங்களும் திரைக்கதையைத் தாங்கிக்கொள்ளும் விதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதையில் கடத்தல் நாடகத்தின் விளைவுக்குப் பிறகு வரும் காட்சிகள் ஊகிக்கும்படி இருப்பது கொஞ்சம் பின்னடைவுதான். என்றாலும், குடும்ப நாடகத்தில் இருக்கும் நம்பகமான சித்தரிப்பும் யதார்த்தமும் அதை ஈடுகட்டுவிடுகின்றன. சசிகுமாரின் குடும்பத்துடன் நிகிலா இணைந்துகொள்ளும் விதம் இயல்பாக உள்ளது. மியாவும் சசிகுமாரும் பிரியும் தருணமும் அவர்களிடையே நடக்கும் உரையாடலும் மனதைத் தொடுகின்றன. விஜி சந்திரசேகரின் பாத்திரம் வலிமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் அண்மையில் வந்த வலுவான வில்லன் பாத்திரம் என இதைச் சொல்லலாம்.
“ மனுசன் விரும்பினா மதம் மாறிக்கலாம்; ஆனால் சாதி மாற முடியாது” என்று பிரபு ஓரிடத்தில் சொல்கிறார். சாதி எந்த அளவுக்குக் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது என்பதை உணர்த்தும் வசனம் இது. காதல் திருமணங்களால் சாதியின் பிடி தளர்வதையும் படம் கோடி காட்டுகிறது.
தம்பி ராமைய்யா வாடாமல்லி நகைச்சுவை ஆபாசக் களஞ்சியம். என்றாலும் தம்பி ராமைய்யாவை முதன்மைக் கதைச் சரடோடு இணைத்தது புத்திசாலித்தனம். ‘நாடோடிகள்’ குழுவைத் திரைக்கதைக்குள் நுழைத்த விதமும் ஒளிப்படத்துக்கு அவர்கள் தலைகுனிந்து போஸ் கொடுப்பதும் ரசனையான முத்திரைகள்.
சசிகுமாருக்கான அறிமுகப் பாடல் நேர விரயம். பிரச்சினைகளை அவர் கையாளும் விதம் அவரது பழைய படங்களை பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அவரது நடிப்பில் குறை சொல்ல எதுவும் இல்லை என்றாலும் புதிதாகவும் எதுவுமில்லை.
விஜி சந்திரசேகர், பிரபு, இளவரசு, மியா ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. நிகிலாவும் வர்ஷாவும் தத்தமது பாத்திரத்தில் அழகாகப் பொருந்திவிடுகிறார்கள்.
மேலத் தஞ்சை விவசாய பூமியின் பசுமை அழகை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிர். டி. இமானின் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிக்கும் விதமாக இருந்தாலும் அவற்றில் மலிந்திருக்கும் பழைய சாயலின் தன்மையை அவர் குறைக்க வேண்டும்.
அழுத்தமான துணைக் கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் பலம். ஊகிக்கக்கூடிய திருப்பங்களும் ரசக் குறைவான நகைச்சுவையும் பலவீனம்.