

தற்காலத் தமிழ் சினிமாவில் திரைக்கதாசிரியராக மட்டும் தொடர்ந்து இயங்குவது இமாலயச் சாதனை. பல்வேறு காரணங்களால், இயக்குநர்களே தங்கள் படங்களுக்கான கதையை எழுதிவிடுகின்றனர்.
அவர்களில் பலர், கதையைத் ‘திரைக்கதை’யாக மாற்ற, அதையொரு கலையாகவும் தொழில்நுட்ப உத்தியாகவும் அணுகும் வெற்றிகரமான திரைக்கதையாசிரியர்களை தற்போது நாடத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வரிசையில் விஸ்வாமித்தரன் சிவகுமார் தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய வெற்றிப் படங்களின் திரைக்கதையாக்கத்தில் மூளையாக உழைத்தவர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த இவர், அடிப்படையில் ஓர் எழுத்தாளர், கவிஞர், சிறந்த திரை விமர்சகர். கியூப அரசியல் சினிமா இயக்குநர் தாமஸ் கிதேரெஸ் அலியா குறித்த ‘கியூப சினிமா’ என்கிற புத்தகத்தைத் தொகுத்தவர். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்த இவருடைய விமர்சனங்கள் ‘குறுதியில் படிந்த மானுடம்’ எனும் புத்தகமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தற்போது இவருடைய இரண்டு முக்கியமான ஆக்கங்கள் இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘சிறுவர் சினிமா’ என்கிற புத்தகம். ‘சிறுவர் திரைப்படங்கள், முதலில் பெற்றோர்கள், வயது முதிர்ந்தவர்களுக் கானது. தனது விருப்பங்களைத் திணித்து மகிழும் பொம்மைகளாகப் பிள்ளைகளைப் பார்க்காமல், சக மனிதர்களாக மதிக்கச் சொல்லி கற்றுத்தருவது.’ எனும் விஸ்வாமித்திரன் சிவகுமார், இந்தியா உட்பட உலகின் 33 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 34 சிறந்த சிறார் திரைப்படங்களை இந்தச் சீரிய கண்ணோட்டத்துடன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இத்தொகுப்பில் மராத்தி, தெலுங்கு என இரண்டு இந்தியப் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழில் சிறுவர் சினிமா இல்லாமைக்கு இந்தப் புத்தகம் சாட்சியாகி நின்றாலும் அதை உருவாக்க வேண்டும் என்கிற உந்துதலை ஒவ்வொரு கட்டுரையும் உருவாக்குகிறது.
இவருடைய இரண்டாவது புத்தகம் ‘சர்வாதிகாரி - சார்லி சாப்ளின் திரைப்படம்’. அதிகார, ஆக்கிரமிப்பு போதையால் புத்தி பேதலித்த ஹிட்லரை பிரதி செய்யும் கதாபாத்திரத்தில், சார்லி சாப்ளின் நடித்துப் பகடி செய்து 1940-ல் வெளியான திரைப்படம் ‘சர்வாதிகாரி’. உலக சினிமா வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு. 34 காட்சிகளைக் கொண்ட அந்தப் படத்தின் விரிவான திரைக்கதையை எழுதியிருப்பதுடன் அப்படம் பற்றிய தன்னுடைய இரண்டு கட்டுரைகளைப் பின்னிணைப்பாகவும் தந்திருக்கிறார்.
இரண்டு நூல்களையும் பெற..
செவ்வகம் வெளியீடு
5/11, குறுக்குத் தெரு,
அய்யப்பா நகர்,
சின்மயா நகர்,
சென்னை- 92
தொடர்புக்கு: 9841982255