

“எல்லோருமே மழை பிடிக்கும்னுதான் சொல்வாங்க. ஒருத்தருக்கு மழை பிடிக்கலைன்னா, என்னவோ இருக்குன்னு தோணுதுல்ல, அதுக்காகத்தான் ‘மழை பிடிக்காத மனிதன்’னு தலைப்பு வச்சேன். இவனுக்கு ஏன், மழை பிடிக்காம போச்சுன்னு படத்துலயும் அந்தக் கேள்விதான் வரும். அதுக்கு பின்னால பிளாஷ்பேக் ஏதும் இருக்குமான்னு பார்த்தா, இருக்காது. ஆனா, புரிஞ்சுக்க முடியும். இந்த விஷயத்துக்காகத்தான் பிடிக்காம போயிருக்குமோன்னு யோசிக்க முடியும்” என்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருப்பவரிடம் பேசினோம்.
எதைப் பற்றிய கதை இந்தப் படம்?
ஒருத்தரைப் பற்றி நமக்குத் தெரியாத பக்கங்கள் நிறைய இருக்கு. தினமும் எங்கயோ ஒருத்தரைச் சந்திக்கிறோம், அவர் யாரு, என்ன பண்றார்ங்கற விவரம் ஓரளவுக்குத்தான் தெரியும். மிஞ்சிப்போனா அவர் வீடு எங்கன்னு தெரிஞ்சு வச்சிருப்போம். ஆனா, யாருக்குமே தெரியாத ஒரு இடத்துல ஹீரோ வந்து நிற்கிறான். அங்க அவன் என்ன பண்றான், அவனுக்கு கிடைக்கிற விஷயங்கள், பிரச்சினைகள்னு கதை போகும். அதாவது எதுவும் இல்லாத ஒருத்தனை, எல்லாம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைக்கும்போது, அவன் அவங்களை எப்படி எதிர்க்கிறான், என்ன பண்றான் அப்படிங்கறதுதான் கதை. இதுவரை நான் பண்ணின படங்கள்ல இருந்து மாறுபட்டு இந்தத் திரைக்கதையை உருவாக்கி இருக்கேன்.
விஜயகாந்த் நடிப்பது முடிவாகிடுச்சா?
இன்னும் எனக்குத் தெரியலை. அவர்கிட்டப் பேசினது உண்மைதான். கதை சொன்னேன், பிடிச்சிருந்தது. ஷூட்டிங் முடிச்சுட்டு ரிலீஸ் ஆகற நேரத்துல, உடல் நிலை சரியா இருந்து, பண்ண முடியும்னா, பண்ணலாம்னு சொன்னாங்க. இப்ப படத்தை அவர்ட்ட போட்டுக் காண்பிக்கணும். விருப்பம் இருந்தா நடிப்பார். அது முழுக்க அவரோட முடிவுதான். ஒரு ரசிகனா அவர் நடிச்சா நல்லாருக்கும் அப்படிங்கறது என் எண்ணம். கண்டிப்பா நடிப்பார்னு நம்பறேன்.
அப்படி என்ன கதாபாத்திரம் அவருக்கு?
படத்துல விஜய் ஆண்டனிக்கு மேல ஒரு கேரக்டர் இருக்கும். அவர்தான், சரத்குமார். இவங்க ரெண்டு பேருக்கும் மேல, பவர்புல்லா ஒருத்தர் தேவைப்பட்டது. அதுக்கு விஜய்காந்த் நடிச்சா சிறப்பா இருக்கும்னு நினைச்சேன். அவருக்கும் கதைப் பிடிச்சிருந்தது. ரெண்டு அல்லது மூன்று நாள் படப்பிடிப்புதான். பார்ப்போம். அவர் உடல் நிலையையும் பார்க்கணுமில்ல.
ஆக் ஷன் கதைதானா?
நீங்க நினைக்கிற ஆக் ஷன் இல்லை. படம் தொடங்கும்போதே ஆக் ஷன் தொடங்கிரும். அதாவது வெடிகுண்டு வெடிக்கறது, லாரி, கார்கள் பறக்குதுங்கற மாதிரியான ஆக் ஷன் இருக்காது. எமோஷனல் ஆக் ஷன் இருக்கும். விஜய் ஆண்டனிக்கு ரொம்ப பொருத்தமான கதை. அவரே, ‘என்னைக் காமெடியும் காதலும் பண்ணச் சொல்லாதீங்க, மத்த என்ன வேணாலும் பண்ணுவேன்’னு கிண்டலா சொல்வார். அதனால ஆக் ஷன்ல சிறப்பா நடிச்சிருக்கார். ஆனா, இதுல அவருக்கு காதல் காட்சிகளும் இருக்கு.
இதுல கன்னட ஹீரோக்கள் நடிக்கிறாங்களாமே?
இந்தக் கதை, இந்தியாவுல எங்கோ ஓர் இடத்துல, மூணு பக்கம் தண்ணி, ஒரு பக்கம் நிலம் இருக்கிற பகுதியில நடக்கும். அப்படி ஓர் இடம் எங்கயும் கிடைக்கலை. பிறகு கோவா, டையூ டாமன், அந்தமான் இப்படி எல்லா இடத்தையும் மிக்ஸ் பண்ணி, ஓர் இடத்தை உருவாக்கி இருக்கோம். இதுக்கு கொஞ்சம் புதிய முகங்கள் தேவைப்பட்டன. அதனால கன்னட ஹீரோக்களான டாலி தனஞ்செயா, பிருத்வி அம்பாரை நடிக்கக் கேட்டேன். உடனே சம்மதிச்சாங்க. மேகா ஆகாஷ் நாயகி. அவங்களுக்கு முக்கியமான கேரக்டர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியா அவங்க நடிக்கலை!
கன்னடத்துல சிவராஜ்குமார் படம் பண்ணுனீங்களே?
அந்தப் படம் பேர் ‘பைரகி’. படம் முடிஞ்சாச்சு. மே மாதம் ரிலீஸ் பிளான் இருக்கு. நான்கு மொழிகள்ல வெளியிட முயற்சி நடக்குது. சாதாரண மனிதர்கள் நசுக்கப்படும்போது, அவங்க எப்படி அசாதாரணமான மனிதனா மாறுறாங்க அப்படிங்கறதுதான் கதை. என் எல்லா படங்கள்லயும் இந்த விஷயம் பொதுவா இருக்கும்.
‘கோலிசோடா’வை இணையத் தொடரா பண்றீங்களாமே?
ஆமா. ஹாட் ஸ்டார் தளத்துக்காகப் பண்றேன். ‘கோலிசோடா 1.5’ என்று தலைப்பு வச்சிருக்கோம். ‘கோலிசோடா’ முதல் பாகத்துக்கு அப்புறம், கோலி ‘சோடா 2’க்கு முன்னாடி நடக்கிற மாதிரி ஒரு கதையை எழுதினேன். ரொம்ப சுவாரஸ்யமா வந்தது. அதை ஒரு இரண்டரை மணி நேரப் படத்துக்குள்ள அடக்க முடியாதுன்னு தோணுச்சு. இணையத் தொடர் ஆக்கிட்டோம். கோலிசோடா படங்கள்ல நடிச்சவங்க நடிக்கிறாங்க. கூடவே, சேரன் சார், பாபி சிம்ஹா முக்கிய வேடங்கள்ல பண்றாங்க.